Skip to main content

பாமகவை குஷிபடுத்தும் அதிமுக... செக் வைத்த திமுக...கடும் போட்டி!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஓட்டு பர்ச்சேஸிங்கிற்காக ஆட்சி மேலிடம் அனுப்பிய பணத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளே அமுக்கியதால் 9 தொகுதிகளில் இரட்டை இலை சேதாரமானது. அதுபோல் ஒரு விபரீதம் விக்கிரவாண்டியில் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது விசுவாசிகளை மட்டுமே பணப்பட்டுவாடாவிற்கு களம் இறக்கியிருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். தனது குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட சோகங்களுக்கு நடுவிலும் தொகுதியை நான்கு திசைகளாகப் பிரித்து, திசைக்கொரு நம்பிக்கை படையை அனுப்பி, வாக்காளர்களை குளிர்வித்து வருகிறார் அமைச்சர்.

 

dmk



ஆனாலும் ஆளும் கட்சியின் கரன்சிப் பாய்ச்சலை பறக்கும் படை தீவிரமாக கண்காணித்து, அ.தி.மு.க. கி.செ. ராஜாராம் என்பவரை பணமும் கையுமாக அமுக்கியது. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியான அமைச்சர் சண்முகம், முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்டிருக்கிறார். "சும்மா கணக்கு காட்றதுக்காக பிடிச்சிருக்காங்க, இனிமே இப்படி நடக்காது' என சிக்னல் போட்டதும், கூடுதல் விறுவிறுப்புடன் விக்கிரவாண்டியைச் சுற்றுகிறது அமைச்சர் படை. இதனால் மகிழ்ச்சியுடன் தொகுதியைச் சுற்றி வருகிறார் இலை வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்.

இதன் எஃபெக்ட்தான் 15 மந்திரிகள் முகாமிட்டு பணிகளை பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளனர். செங்கோட்டையன், பெஞ்சமின், சம்பத், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பா.ம.க. வாக்குகளை முழுமையாகப் பெற அக்கட்சியினரை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டி வருகின்றனர். அதேபோல் தே.மு.தி.க. வாக்குகளை முழுமையாகப் பெற "வேலை'கள் நடந்து வருகின்றன. அடுத்தகட்டமாக தலித் வாக்குகளைப் பெற அதிரடி காரியங்கள் ஆரம்பமாகிவிட்டன.


"நம்ம கேண்டிடேட் நாமினேஷன் தாக்கல் பண்ணி முடியட்டும், அதுக்குப் பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்' என உ.பி.க்களுக்கு மா.செ. பொன்முடி தெம்பூட்டியிருக்கிறார் என்பதை கடந்த அக்.02-04 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். நாம் சொன்னது போலவே நல்ல காரியங்கள் நடந்துள்ளதால், தி.மு.க.வின் தேர்தல் காரியாலயங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வி.சி.க. திருமா, சி.பி.எம். ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன், எம்.பி. கனிமொழி உட்பட முன்னணித் தலைவர்கள் தொகுதியை வலம் வந்து, உதயசூரியன் வேட்பாளர் ந.புகழேந்திக்காக வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசுக்கு ஆமாம் போடும் இந்த ஆட்சியை விரட்ட இந்த தேர்தல் ஒரு முன்னோட்டம் என்பதை எல்லா மேடைகளிலும் குறிப்பிட்டார் ஜி.ராம கிருஷ்ணன்.

"இத்தொகுதியின் இடைத்தேர்தல் என்பது நிச்சயதார்த்தம் மாதிரி. இது நல்லபடியாக நடந்து முடிந்தால், அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தல் என்னும் திருமணம் சீரும் சிறப்புமாக நடக்கும், ஐந்து ஆண்டுகள் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்''’என டச்சிங்காக பேசி அசத்துகிறார் தி.மு.க.வின் எ.வ.வேலு.

நாம் தமிழர் கட்சியின் கந்தசாமிக்காக பிரச்சார மேடைகளில் பேசி வருகிறார் சீமான். தொகுதியில் வன்னியர் சமுதாயம் அதிகம் என்பதால், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நினைவுமண்டபம், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதற்கு கடும் பதிலடிகளுடன் அறிக்கை கொடுத்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். "தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தி.மு.க.வுக்கு வன்னியர் சமுதாயம் கண்ணுக்குத் தெரிகிறதா' என டாக்டர் தந்த அறிக்கைக்கு, அவரது உறவினரான காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் தொடங்கி பலரும் பதில்களை அளித்துவருகிறார்கள். இது விக்கிரவாண்டி தேர்தல் களத்தை விறுவிறுப் பாக்கியுள்ளது. அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது களத்தில்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.