Skip to main content

பாமகவை குஷிபடுத்தும் அதிமுக... செக் வைத்த திமுக...கடும் போட்டி!

நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த 18 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஓட்டு பர்ச்சேஸிங்கிற்காக ஆட்சி மேலிடம் அனுப்பிய பணத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளே அமுக்கியதால் 9 தொகுதிகளில் இரட்டை இலை சேதாரமானது. அதுபோல் ஒரு விபரீதம் விக்கிரவாண்டியில் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தனது விசுவாசிகளை மட்டுமே பணப்பட்டுவாடாவிற்கு களம் இறக்கியிருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். தனது குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட சோகங்களுக்கு நடுவிலும் தொகுதியை நான்கு திசைகளாகப் பிரித்து, திசைக்கொரு நம்பிக்கை படையை அனுப்பி, வாக்காளர்களை குளிர்வித்து வருகிறார் அமைச்சர்.

 

dmkஆனாலும் ஆளும் கட்சியின் கரன்சிப் பாய்ச்சலை பறக்கும் படை தீவிரமாக கண்காணித்து, அ.தி.மு.க. கி.செ. ராஜாராம் என்பவரை பணமும் கையுமாக அமுக்கியது. இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியான அமைச்சர் சண்முகம், முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்டிருக்கிறார். "சும்மா கணக்கு காட்றதுக்காக பிடிச்சிருக்காங்க, இனிமே இப்படி நடக்காது' என சிக்னல் போட்டதும், கூடுதல் விறுவிறுப்புடன் விக்கிரவாண்டியைச் சுற்றுகிறது அமைச்சர் படை. இதனால் மகிழ்ச்சியுடன் தொகுதியைச் சுற்றி வருகிறார் இலை வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்.

இதன் எஃபெக்ட்தான் 15 மந்திரிகள் முகாமிட்டு பணிகளை பரபரப்பாக முடுக்கிவிட்டுள்ளனர். செங்கோட்டையன், பெஞ்சமின், சம்பத், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பா.ம.க. வாக்குகளை முழுமையாகப் பெற அக்கட்சியினரை மகிழ்ச்சிக் கடலில் குளிப்பாட்டி வருகின்றனர். அதேபோல் தே.மு.தி.க. வாக்குகளை முழுமையாகப் பெற "வேலை'கள் நடந்து வருகின்றன. அடுத்தகட்டமாக தலித் வாக்குகளைப் பெற அதிரடி காரியங்கள் ஆரம்பமாகிவிட்டன.


"நம்ம கேண்டிடேட் நாமினேஷன் தாக்கல் பண்ணி முடியட்டும், அதுக்குப் பிறகு எல்லாம் நல்லபடியா நடக்கும்' என உ.பி.க்களுக்கு மா.செ. பொன்முடி தெம்பூட்டியிருக்கிறார் என்பதை கடந்த அக்.02-04 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். நாம் சொன்னது போலவே நல்ல காரியங்கள் நடந்துள்ளதால், தி.மு.க.வின் தேர்தல் காரியாலயங்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. வி.சி.க. திருமா, சி.பி.எம். ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன், எம்.பி. கனிமொழி உட்பட முன்னணித் தலைவர்கள் தொகுதியை வலம் வந்து, உதயசூரியன் வேட்பாளர் ந.புகழேந்திக்காக வாக்காளர்களைக் கவர்ந்து வருகிறார்கள். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், மத்திய அரசுக்கு ஆமாம் போடும் இந்த ஆட்சியை விரட்ட இந்த தேர்தல் ஒரு முன்னோட்டம் என்பதை எல்லா மேடைகளிலும் குறிப்பிட்டார் ஜி.ராம கிருஷ்ணன்.

"இத்தொகுதியின் இடைத்தேர்தல் என்பது நிச்சயதார்த்தம் மாதிரி. இது நல்லபடியாக நடந்து முடிந்தால், அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தல் என்னும் திருமணம் சீரும் சிறப்புமாக நடக்கும், ஐந்து ஆண்டுகள் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்''’என டச்சிங்காக பேசி அசத்துகிறார் தி.மு.க.வின் எ.வ.வேலு.

நாம் தமிழர் கட்சியின் கந்தசாமிக்காக பிரச்சார மேடைகளில் பேசி வருகிறார் சீமான். தொகுதியில் வன்னியர் சமுதாயம் அதிகம் என்பதால், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நினைவுமண்டபம், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதற்கு கடும் பதிலடிகளுடன் அறிக்கை கொடுத்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். "தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தி.மு.க.வுக்கு வன்னியர் சமுதாயம் கண்ணுக்குத் தெரிகிறதா' என டாக்டர் தந்த அறிக்கைக்கு, அவரது உறவினரான காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத் தொடங்கி பலரும் பதில்களை அளித்துவருகிறார்கள். இது விக்கிரவாண்டி தேர்தல் களத்தை விறுவிறுப் பாக்கியுள்ளது. அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது களத்தில்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்