மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் 28-ஆம் தேதி காலை விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும்  அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை இந்தியாவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அரசியல் தலைவர்கள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்...

Advertisment

கடந்த1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள மவுண்ட் பிளாங்கில் ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த இந்தியாவின் முன்னோடி அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா உயிரிழந்தார்.

Advertisment
755
Plane crashes that took away celebrities, from 'Jahangir Baba to Ajit Pawar...' Photograph: (ajith pawar)

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகனும் காங்கிரஸ் தலைவருமான சஞ்சய் காந்தி, ஜூன் 23, 1980 ஆம் ஆண்டு தனது 33-ஆவது வயதில் டெல்லியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். புது தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலையத்திற்கு அருகே அவர் இயக்கிய சிறிய ரக விமானம் சாகசப் பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில், பயிற்சியாளர் சுபாஷ் சக்சேனாவுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சய் காந்தியின் மரணம் நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டதோடு இந்திரா காந்தி மற்றும் அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி இருவரையும் வெகுவாகப் பாதித்தது.

Advertisment

இதனையடுத்து, 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தின் குணா நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த இவர், அரசியல் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் தனது 56-ஆவது வயதில் காலமானார்.

2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி முன்னாள் மக்களவை சபாநாயகரும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜி.எம்.சி. பாலயோகி ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது கைக்கலூருக்கு அருகே ஒரு குளத்தில் விழுந்து நொறுங்கி விபத்துகுள்ளானது.

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த சௌந்தர்யா, 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தன்று பாஜக வேட்பாளர்களுக்காக ஆந்திராவில் பிரச்சாரம் மேற்கொள்ள Cessna 180 ரக விமானத்தில் சௌந்தர்யா பயணம் செய்துகொண்டிருந்தபோது, காந்தி கிருஷி விக்யான் கேந்திரா வளாகத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. புதிதாகத் திருமணமாகி கர்ப்பிணியாக இருந்த சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்தது திரையுலகினரையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த சோகத்தில் இருந்து வெளியே வருவதற்குள் அதே ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மற்றொரு விமான விபத்தும் நடந்தது. மேகலாயாவின் அப்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்ச்சர் சைப்ரியன் சங்மா பயணம் செய்த ஹெலிகாப்டர் ஷில்லாங்கிற்கு சென்று கொண்டிருந்தபோது பரபானி ஏரிக்கு அருகே விபத்துகுள்ளானது.  இதில் சைப்ரியன் சங்மா உயிரிழந்தார்.

அதற்கு அடுத்தாண்டு அதாவது 2005 ஆம் ஆண்டு தொழிலதிபரும் ஹரியானா அமைச்சருமான ஓம் பிரகாஷ் ஜிண்டால் ஹெலிகாப்டரில் டெல்லியிலிருந்து சண்டிகருக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜிண்டால் மரணமடைந்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி 2009 செப்டம்பர் 2 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். சித்தூருக்குச் சென்றபோது கர்னூல் அருகே ருத்ரகொண்டா மலைப்பகுதியில் அவரது பெல் 430 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் அவருடன் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். இது ஆந்திர அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி தனது தந்தையின் பெயரில் புதிய கட்சியை உருவாக்கி ஆந்திர அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் மாறியிருக்கிறார்.  

இதையடுத்து கடந்த 2011 ஏப்ரல் 30 ஆம் தேதி தவாங் பகுதி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அப்போதைய அருணாச்சலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கண்டு உயிரிழந்தார். முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற பதவி முதன்முதலாக பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட நிலையில் அதன் முதல் தளபதியாக 2020 ஆம் ஆண்டு ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2021 டிசம்பர் 8 ஆம் தேதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் தமிழகத்தின் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. அதில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த கோர விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணமடைந்தார். 2025 ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன்-கேட்விக் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த ஒருவரைத் தவிர விஜய் ரூபானி உள்பட 241 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் தற்போது அஜித் பவாரும் விமானத்தில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விமான விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் தற்செயலாக நடந்தது என்று கூறப்பட்டாலும், பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் பெரும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.