Skip to main content

கலைஞர் உடல் நல்லடக்கத்துக்கு அரசு கொடுத்த இடம் இதுதான்...

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

இன்று மாலை திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் காலமானார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய, சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்கவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இன்று மதியம் நடந்த சந்திப்பில் இதுகுறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வந்தன. மாலை, கலைஞர் மறைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அண்ணா நினைவகம் அருகே இடம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் இன்னும் தங்களுக்கு பதில் வரவில்லையென்றும் தெரிவித்தனர்.

 

kamarajar

காமராஜர் நினைவு மண்டபம்



 

rajaji

ராஜாஜி நினைவகம்



அதன்பின் அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் காமராஜர் சாலை அருகே மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்குவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாலும்,  அந்த இடத்தில் நினைவகங்கள் அமைப்பது குறித்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் அந்த இடம் வழங்க இயலாது என்றும் மாறாக சென்னை சர்தார் பட்டேல் சாலையில் காமராஜர் நினைவு மண்டபம் அருகே, அண்ணா பல்கலைக்கழகம் எதிரே 2 ஏக்கர் இடம் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.

 

thyagigal

தியாகிகள் மணிமண்டபம்



அரசு ஒதுக்கிய இடம், கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் எதிரே உள்ளது. அந்தப் பகுதியில் ராஜாஜி நினைவகமும், காமராஜர் நினைவகமும் அமைந்துள்ளன. இந்த இரண்டிற்கும் இடையே மகாத்மா காந்தி மியூசியம், காந்தி மண்டபம், மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம், முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் நினைவகம், ரெட்டைமலை சீனிவாசன் நினைவகம் ஆகியவை உள்ளன. இதே சாலையில்தான் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அதே சர்தார் பட்டேல் சாலையின் முடிவில்தான் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில்தான் கலைஞர் உடல் நல்லடக்கத்துக்கு அரசு இடம் ஒதுக்கியது. ஆனாலும், அண்ணா நினைவகம் அருகே இடம் வேண்டும் என திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வெளியே கோஷமிட்டு வருகின்றனர். ஸ்டாலின், அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. தமிழகத்தின் முக்கிய திராவிட கட்சிகளிலிருந்து முதல்வர் பதவி வகித்தவர்கள் மூவர். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இவர்கள் மூவரின் நினைவகங்களும் சென்னை மெரீனா கடற்கரையருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மறைந்தபோது, சில சின்ன எதிர்ப்புகள் இருந்தாலும் எம்.ஜி.ஆர் நினைவகம் அருகே அவரது நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கலைஞருக்கு இடம் ஒதுக்குவதில் சிக்கல் என காரணம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் முடிவு மாறுமா அல்லது கலைஞரின் நினைவிடம் இங்கு அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.