Skip to main content

“இளம்பெண்கள் கடத்தல்; மோடி ஊரில் நடக்கும் அவலம்” - பியூஷ் மனுஷ்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Piyush Manush  Interview

 

குஜராத் மாநிலத்தில் பெண்கள் கடத்தப்படும் சம்பவம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து நம்மோடு சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் பகிர்ந்துகொள்கிறார்.

 

அவர் பேசியதாவது: “குஜராத் மற்றும் வட மாநிலங்களில் பல்வேறு கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெண் சிசுக் கொலை அங்கு அதிகம் நடக்கிறது. பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர். ஆனால், வட இந்திய மக்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியாது. அவர்களுக்கு மதம் தான் முக்கியம். காங்கிரஸ் ஆட்சியில் தீமைகள் இருந்தாலும் பல நன்மைகளும் இருந்தன. பாஜக ஆட்சியில் தீமைகள் மட்டும் தான் இருக்கின்றன. குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளில் 40000 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எதன் மீதும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கிகளுக்கு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு மட்டும் தான் அரசியல். ஏழை மக்கள் இருக்கும் பகுதிகளை எப்போதும் தடுப்பு வைத்து மறைக்கவே விரும்புபவர் மோடி. அவருக்கு இதுபற்றியெல்லாம் கவலை இருக்காது. மணிப்பூரில் கலவரத்தால் இவ்வளவு பேர் இறந்த பிறகும் மோடிக்கு கர்நாடக தேர்தலின் மீதுதான் ஆர்வம் இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அவருடைய பக்தர்கள் கைதட்டுவார்கள். உக்ரைன்-ரஷ்யா போரைக் கூட அவரால் நிறுத்த முடியும் என்று நம்புவார்கள். 

 

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் பாஜக உருவாக்கியது தான். கலவரம் குறித்து மோடி, அமித்ஷா வாய் திறக்கவே இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருவரும் பிசியாக இருந்தனர். மோடிக்கு இந்து பெண்கள் பற்றிக் கவலையில்லை. அவர்களின் கல்விக்கு நீட் மூலம் தடை போட்டுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலைச் சுற்றி மட்டும் தான் அவருடைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவருடைய பிரச்சார அணிவகுப்பில் மக்களையே காண முடியவில்லை. கட்சிக்காரர்களே நின்று பூக்களை அவர் மேல் தூவுகின்றனர். மத ரீதியான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இவர்கள் ப்ரமோட் செய்கின்றனர். 

 

தமிழ்நாடு குறித்து மணிஷ் காஷ்யப் அவதூறு பரப்பி வருவதை முதன்முதலில் நான் தான் வெளிப்படுத்தினேன். அந்த நேரத்தில் அவர்களால் முடிந்த அளவு அவதூறு செய்திகளைப் பரப்பினர். அதன் பிறகு மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டான். அவனுக்கு தண்டனை வாங்கித் தருவது தான் அடுத்து என்னுடைய வேலை. இதுபோன்ற ஆர்எஸ்எஸ் நபர்கள் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தத் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்.”

 


 

Next Story

'பாஜகவைப் புறக்கணியுங்கள்' - குஜராத்தில் வார்னிங் !

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
'Ignore BJP' - Warning to BJP in Gujarat

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசிய பேச்சு ஒரு சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வேட்பாளரை மாற்ற வேண்டும் என ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா அண்மையில் பேசும் போது, 'ராஜ்புத் சமூக ராஜாக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்' என பேசியது அந்த சமூக மக்களிடையே சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

NN

இது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் குவிந்ததால் தனது பேச்சுக்கு ரூபாலா மன்னிப்பு கோரி இருந்தார். இருப்பினும் ரூபாலாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராஜ்புத் மக்கள் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வலியுறுத்தல் கொடுத்துள்ளனர்.

ராஜ்புத் சமூகத்தின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று பாஜக தலைவர்களுடன் பலமணி நேரம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில் பாஜகவின் சமரசத்தை ஏற்க ராஜ்புத் சமூக சங்கங்களின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனர். பாஜக வேட்பாளர் ரூபாலாவை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளதோடு, அவரை மாற்றாவிட்டால் நாடு முழுவதும் வசிக்கும் 22 கோடி ராஜ்புத் பிரிவினர் பாஜகவை புறக்கணிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சுமார் 25 லட்சம் மக்கள் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது எச்சரிக்கை பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மட்டுமின்றி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் கணிசமாக ராஜபுத் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அதனால் அங்கும் பாஜகவுக்கு நெருக்கடி முற்றும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.