தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சிதிலமடையாத சங்ககால வட்டக்கோட்டை இன்றும் பொற்பனைக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த சங்ககால கோட்டை பகுதியில் அகழாய்வு செய்ய தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்களின் கோரிக்கையையடுத்து மத்திய அரசு அனுமதியுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் ஆய்வு செய்தது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு தமிழக தொல்லியல் துறை ஆய்வுக்கு அனுமதி பெற்று இரண்டு கட்ட அகழாய்வுகள் நடந்து முடிந்துள்ளது. இதில் 2515 தொல் பொருட்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
முதற்கட்ட அகழாய்வு:
பொற்பனைக்கோட்டை கிராமமானது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சார்ந்த இடங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கோட்டையானது 44.88 ஏக்கர் பரப்பளவிலும், கோட்டைக்குள் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப்பகுதி உள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021 ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட அகழாய்வில் 22 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வு பணியானது 155 நாட்களாக நடைபெற்றுது. A1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இது 36 x 26 x 4.4 செ.மீ மற்றும் 38 x 27 x 5.5 செ.மீ என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. Za1 எனும் அகழாய்வுக் குழியில் 3.8 செ.மீ ஆழத்தில் வடிவ செங்கல் கட்டிடம் ஒன்று வெளிப்பட்டது. வடமேற்கு பகுதியில் தொடங்கி தென்கிழக்கு பகுதிவரை நீண்டு, மூன்று அடுக்கினைக் கொண்டுள்ளது. இதன் விட்டம் 230 செ.மீ ஆகும். இவற்றுடன் வடகிழக்கு பகுதியில் 57 செ.மீ ஆழத்தில் வாய்க்கால் போன்று செங்கற்கல் கொண்டு அமைக்கப்பட்ட நீர்வழித்தடம் ஒன்று கிடைத்துள்ளது. இதன் நீளம் 255 செ.மீ ஆகும். மேலும் zb1 எனும் குழியில் வாய்க்கால் போன்ற நீர்வழித்தடம் ஒன்று கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ya1 எனும் குழியிலும் வாய்க்கால் போன்ற நீர்வழித்தடம் காணப்படுகின்றது. Za2 எனும் அகழாய்வுக்குழியில் 32 செ.மீ ஆழத்தில் வடகிழக்கு பகுதியில் இருந்து வடக்கு- தெற்காக இரண்டு செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது.
முதல்கட்ட அகழாய்வில் 533 தொல்பெருட்களும், பல்வேறு வகையான பானை ஓடுகளும் கீறல் குறியீடுகளும் செங்கல் கட்டுமானங்களும் கிடைத்துள்ளன. எலும்பு முனை கருவி, தங்க மூக்குத்தி (அ) தோடு, சூதுபவள மணிகள், ”[தி] ஸ் ஸ ன்” என்ற தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்பு கிடைத்துள்ளது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரௌலட் வகை பானை ஓட்டில் வட்டச்சில், ரோம நாட்டு எண்னை ஜாடி (Torpedo Jar), ரௌலட் பானை ஓடுகள் ( Rouletted ware) கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட அகழாய்வு:
பொற்பனைக்கோட்டை இரண்டாம் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக 18.06.2024 தொடங்கி வைத்தார்கள். இரண்டாம் கட்ட அகழாய்வில் B21, B22, A22, C20, C21, C22, G27, F27, A20, YA32, YB31, YC31, YC30, ZR21, YDD29, YFF29, YHH13 என 17 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
செங்கல் தளம்:
உட்புற அரண்மனை திடலுக்கு தெற்கே அமைக்கப்பட்டுள்ள அகழாய்வு குழி- B21 ல் செங்கல் தளம் ஒன்று வெளிப்பட்டுள்ளது. தென்கிழக்கு மூலையில் வெளிப்பட்ட இந்த செங்கல் தளம் 280 cm நீளம் மற்றும் 218 cm அகலம் கொண்டுள்ளது.
மைத்தீட்டும் குச்சி:
G27 எனும் அகழாய்வுக் குழியில் மைத்தீட்டும் குச்சி ஒன்று கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எடை 3.53 g, நீளம் 3 cm மற்றும் தடிமன் 0.3 cm ஆகும். இக்குச்சியானது செப்பினால் செய்யப்பட்டவை ஆகும். அலங்காரப் பொருட்கள் கிடைத்திருப்பது தமிழ் சமுகத்தின் வாழ்வியலை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
செப்பு ஆணிகள்:
A22 என்ற அகழாய்வு குழியில் 4 செம்பினால் ஆன ஆணிகள் கிடைத்துள்ளது. இதுபோன்று C20 என்ற அகழாய்வு குழியிலும் செம்பினால் ஆன ஆணி ஒன்று கிடைத்துள்ளது. இதன் எடை 2 gm, நீளம் 2.3cm மற்றும் அகலம் 1.2cm ஆகும். இதுவரை இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் தற்போது செம்பினால் ஆன ஆணிகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
சூதுபவள மணிகள்:
B22 மற்றும் A22 ஆகிய குழிகளில் இருந்து இரண்டு சூதுபவள மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று முழுமை பெற்ற நிலையிலும் மற்றொன்று முழுமை பெறாத நிலையிலும் கிடைத்திருப்பது சுட்டத்தக்கது.
தேய்ப்புக்கல்:
G27 எனும் அகழாய்வுக் குழியில் 38 cm ஆழத்தில் முக்கோண வடிவிலான தேய்ப்புக்கல் ஒன்று கிடைக்கப்பெற்றது. இதன் அகலம் 36 cm மற்றும் நீளம் 39 cm ஆகும். இக்கல்லானது மணிகளை தேய்ப்பதற்கு பயன்படுத்தபட்டிருக்கலாம். இதுவரை கிடைத்திருக்கும் தேய்ப்புக் கற்களில் அளவில் மிகப் பெரியதாகவும், முக்கோண வடிவத்திலும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
தங்க அணிகலனின் ஒரு பகுதி:
B22 எனும் குழியில் கிடைத்துள்ள தங்க அணிகலனின் ஒரு பகுதியானது உடைந்த நிலையில் உள்ளது. இதன் எடை 0.05g, நீளம் 0.5cm, அகலம் 0.3cm ஆகும். இதன் பின்பகுதியில் திருகானி போன்ற அமைப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு H2 எனும் குழியில் கிடைத்த தங்க அணிகலனை ஒத்துள்ளது. இது தமிழகத்தின் செழுமையையும் குறிப்பாக பொற்பனைக்கோட்டையின் செழுமையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது.
அகேட் கல்லின் மூலப்பொருள் :
C20 எனும் அகழாய்வுக் குழியில் 152 செ.மீ - 156 செ.மீ ஆழத்தில் அகேட் கல்லின் மூலப்பொருள் ஒன்றுக் கிடைத்துள்ளது. இதன் நீளம் 5 செ.மீ, அகலம் 3.7 செ.மீ, தடிமண் 2.3 செ.மீ மற்றும் இதன் எடை 49.7 கிராம் ஆகும். இதற்கு முன்பு இதே குழியில் முழுமை பெறாத அகேட் கல்மணி கிடைத்திருந்த நிலையில், அதன் மூலப்பொருள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த அகழாய்வுக் குழியில் கண்ணாடி மணிகள், சூதுபவள மணிகள், பச்சைகல் மணிகள், எலும்பினால் ஆன மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு முழுமை பெற்றும் பெறாமலும் கிடைத்துள்ள மணிகளானது, பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது.
நெல் மணிகள்:
C20 எனும் அகழாய்வுக் குழியில் 114 செ.மீ முதல் 124 செ.மீ ஆழத்தில் எரிந்த நிலையில் நெல் மணிகள் கிடைத்துள்ளது. இந்த நெல் மணிகள் தீயினால் எரிந்த நிலையில் முழுமையாகவும் ஒரு சில உடைந்தும் 10 நெல் மணிகள் கிடைத்துள்ளது. இதன் அருகாமையில் கரித்துண்டு மற்றும் எலும்புத் துண்டுகளும் கிடைத்துள்ளன. இதுவரை இந்த அகழாய்வு குழியில் கண்ணாடி மணிகள், பச்சைக் கல் மணிகள், எலும்பினால் செய்யப்பட்ட மணி மற்றும் சூது பவள மணி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அகழாய்வு குழியில் உள்ள (PIT) குழியில் தாவரத்தின் வேர்முடிச்சு அல்லது விதை போன்று வடிவில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரும்பாலான உடைந்தவாள்:
C20 எனும் அகழாய்வுக் குழியில் 130 செ.மீ - 137 செ.மீ ஆழத்தில் இரண்டு துண்டுகளாக உடைந்து கிடைத்தது. கைப்பிடியில் கோர்க்கும் கூரான பகுதியோடு கிடைத்துள்ளது. வாளின் மையத்தில் தடிமனாகவும் இருமருங்கிலும் தடிமண் குறைந்து காணப்பட்டது. உடைந்த இரு துண்டுகளில் கைப்பிடி கூருள்ள பகுதியின் நீளம் 9.3 செ.மீ, அகலம் 3.3 செ.மீ, தடிமண்-0.9 செ.மீ மற்றும் இதன் எடை 36.8 கிராம் ஆகும். மற்றொறு பகுதியின் நீளம் 10.8 செ.மீ, அகலம் 2.7 செ.மீ, தடிமண் 1.3 செ.மீ மற்றும் இதன் எடை 53.7 கிராம் ஆகும்.
பானை ஒடுகள்:
சிவப்பு நிற பானை ஒடுகள், கறுப்பு நிற பானை ஒடுகள், கறுப்பு சிவப்பு நிற பானை ஒடுகள் மற்றும் வட இந்தியாவை சார்ந்த டெக்கான் பானை ஒடுகள் கிடைத்துள்ளது. மேலும் மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரோம நாட்டு எண்னை ஜாடி (Torpedo Jar), வண்ணம் தீட்டப்பட்ட (Russet coated ware) பானை ஓடுகள், கீறல் குறியீடுகள் மற்றும் தமிழ் பிராமி (தமிழி) எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அகழாய்வு பணிகள் 203 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இதுவரை வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள், மாவுக் கல் மணிகள், கிரிஸ்டல் மணிகள், இரும்பு ஆணிகள், சுடு மண்ணாலான சக்கரம், அஞ்சனக்கோல், செப்புக்காசு, தேய்ப்புக்கல், அரைக்கும் கல், சுடு மண்ணாலான மணி, செவ்வந்தி நிறக் கல் மணி, அகேட், தக்களி, எலும்பு முனைக் கருவி, செப்பு ஆணிகள், சூது பவள மணிகள், குளவிக் கல், சுடு மண்ணாலான காதணி, மோதிரக் கல், தந்தத்திலான பகடைக்காய், ஆட்டக்காய்கள், இரும்பு மற்றும் செப்பிலானப் பொருட்கள் என 1982 தொல்பொருட்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இருகட்ட அகழாய்விலும் 2515 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
பொற்பனைக் கோட்டை 2023-2024 (இரண்டாம் கட்டம்) அகழாய்வில் அகழ்ந்தெடுக்கும் பணி 12.05.2025 அன்று முடிவுற்று, மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது. இன்றுடன் அகழாய்வுக் குழிகள் மூடும் பணியானது துவக்கி, தொடர்ந்து ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.