ADVERTISEMENT

பதவியை விடமாட்டேனென்று அடம்... குட்டி ராதிகா மனசில் இடம்... குமாரசாமி ஃபிளாஷ்பேக்!    

12:50 PM May 16, 2018 | vasanthbalakrishnan

குமாரசாமி கவுடா, 1996ஆம் ஆண்டு பொது தேர்தலில் ராமநகரா தொகுதியில்தான் முதன் முதலில் வெற்றி பெற்றார். 1998ஆம் ஆண்டு அதே தொகுதியில் நடந்த மறுதேர்தலில் இவர் படுதோல்வி அடைந்தார். 1999ஆம் ஆண்டு சாதனூர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியை தழுவினார். 2004ஆம் ஆண்டில் ராமநகர தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார். அந்த ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்கு தொகுதிகளை கைப்பற்றவில்லை. இதனால் காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியை அமைத்தது. இதில் யாரை முதல்வராக்கலாம் என்று பல விவாதங்களுக்குப் பிறகு தரம் சிங்கை முதல்வராக்கினர். 2004ஆம் ஆண்டு தரம் சிங் தலைமையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைத்தன. அதிருப்தி அடைந்த குமாரசாமி தன் நாற்பத்தி இரண்டு எம்எல்ஏக்களுடன் கூட்டணியில் இருந்து விலக அரசாங்கம் குளறுபடியானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


ஆட்சி கலைக்கப்பட்டு குமாரசாமிக்கே மீண்டும் முதல்வர் வாய்ப்பு வந்தது. 2006ஆம் ஆண்டில் குமாரசாமி கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்றார். எல்லோரும் 'இந்த குமாரசாமி, அரசியல்வாதியானதே ஒரு விபத்து, இவருக்கு என்ன அரசியல் தெரியும்... அப்பாவின் பெயரை வைத்து வந்தவர்' என்றெல்லாம் சொல்லி அவரை விமர்சித்தனர். கர்நாடகாவின் முதலமைச்சராக அவர் இருந்த காலம் பிப்ரவரி 2006 முதல் அக்டோபர் 2007 வரை தான். பாஜகவின் ஆதரவோடு நடந்த இந்த ஆட்சி அக்ரீமெண்ட் பாணியில் நடந்தது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பாஜகவுக்கு முதல்வர் பதவி தரவேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். முதலில் விலக மறுத்து பிடிவாதம் பிடித்த குமாரசாமி, பின்னர் பதவி விலகினார். ஆனால் பாஜகவுக்கு ஆதரவு தர மாட்டோமென்று அடம் பிடித்தார். குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்று, பின்னர் ஒரு வழியாக உடன்பாடு ஏற்பட்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்து எடியூரப்பா முதல்வராக வழிவிட்டார்.



அரசியல் வாழ்க்கை இப்படியென்றால் , தனிப்பட்ட முறையிலும் கொஞ்சம் கவனிக்கப்பட்ட மனிதர்தான் குமாரசாமி. அரசியலுக்கு முன் சினிமா தயாரிப்பில் கலக்கினார் இந்த ராஜ்குமார் ரசிகர். அப்படி ஏற்பட்ட நட்பில் நடிகை குட்டி ராதிகாவுடன் (தமிழில் 'இயற்கை' படத்தில் நடித்தவர்) நெருக்கமாகி இருவரும் இணைந்து வாழ்ந்தது கர்நாடகாவில் சர்ச்சையானது. ஏற்கனவே திருமணமானவரென்பதால், இவர் மீது ஒரு வழக்கும் கூட தொடுக்கப்பட்டது.


2013ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். நடந்த முடிந்த தேர்தலில் இவர் கிங் மேக்கராக இருப்பார் என்று கருத்துக்கணிப்புகள், ஊடகங்கள் கணித்தபொழுது, "நான் கிங் மேக்கராகவெல்லாம் இருக்க மாட்டேன். 'கிங்'காகத்தான் இருப்பேன்" என்று கூறினார். பலரும் அதை கிண்டல் செய்தனர். ஆனால், இப்பொழுதுள்ள நிலையைப் பார்த்தால் கிங் ஆகிவிடுவாரோ என்று தோன்றுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT