Skip to main content

மகளிரில் மாணிக்கம் மணியம்மையார்

மார்ச் 10 மணியம்மையார் பிறந்த நாள்
 

மகள் வயதுடைய சின்னப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவரெல்லாம் தலைவரா, இவரின் பெண் விடுதலை என்பது நாடக பேச்சாகிவிட்டதே என குற்றச்சாட்டு வைத்தார்கள் அவரது எதிரிகள். அந்த பெரியவரும் – சின்னப்பெண்ணும் இறந்து பல ஆண்டுகள் ஆனப்பின்பும் திருமணத்தை சுட்டிக்காட்டியே அந்த பெரியவரின் புகழை இன்றும் அழிக்க துடிக்கிறார்கள். அப்படி பேசுபவர்கள் பெண் இனத்துக்காகவோ அல்லது அந்த சின்ன பெண்ணுக்காக பரிதாபப்படவில்லை. தனக்கு பின் தன் கொள்கைகளை பரப்ப ஒரு வாரிசை சட்டப்படி உருவாக்கிவிட்டு செல்கிறாறே என்கிற ஆத்திரம், விரக்தி, கோபம் தான் அவர்களை பேசவைத்தது. உண்மையில் அந்த பெண் பெரியாரை விரும்பியே மணந்துக்கொண்டார். சுகம் கிடைக்காது என தெரியும், அந்த பெரியவரின் கொள்கைகளை விரும்பி, சமுதாயத்தின் விடிவெள்ளியான அவர் நீண்ட காலம் வாழவேண்டும், அவரது கருத்துக்களை பரப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் மணந்தார். அந்த சின்னப்பெண் சரியாக தான் செய்தார் என்பதை இன்றைய தலைமுறை தமிழகமும் ஏற்றுக்கொண்டதால் தான் பெரியவர் மறைந்து 45 ஆண்டுகளை கடந்தும் அவரை தமிழகம், ஏன் இந்தியாவே கொண்டாடுகிறது. அவரது பெயரை கேட்டாலே எதிரிகள் பயந்து நடுங்குகிறார்கள். அந்த பெரியவர் நமது தந்தை பெரியார். அவரை விரும்பி மணந்த அந்த சின்னப்பெண் மணியம்மை.
 

periyar maniammai


வேலூர் மாநகரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் தொண்டர் கனகசபை – பத்மாவதி தம்பதியரின் மகளாக பிறந்தவர் 1920 மார்ச் 10ந்தேதி பிறந்தார் காந்திமதி. குடியாத்தம் நகரை பூர்வீகமாக கொண்ட பெரியாரின் தளபதிகளில் ஒருவரான தமிழ் ஆர்வலர் அண்ணல்.தங்கோ, கனகசபையின் வீட்டுக்கு இயக்க வேலையைாக அடிக்கடி வருவார், அப்படி வந்தவர் காந்திமதிக்கு அரசியல்மணி என பெயர்சூட்டினார். அண்ணல்தங்கோ மீது இருந்த மரியாதையால் அந்த பெயரிலேயே அவரை அழைத்தனர் பள்ளியில் சேர்த்தனர்.
 

பெரியார் கனகசபை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அரசியல்மணி, 9வது படிக்கும்போது பெரியாரை வீட்டில் பார்த்து பேசினார் என்கிற காரணத்தால் மணியம்மையை பள்ளியை விட்டு நீக்கினார்கள். பெரும் பிரச்சனையாகி பின் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வேலூரில் பள்ளி படிப்பை முடித்ததும் நெல்லை மாவட்டம் குலசேகரபட்டினத்தில் இருந்த சி.டி.நாயகம் தமிழ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் அரசியல்மணி.
 

1943ல் பெரியார் தனது தொண்டரும், நண்பருமான கனகசபைக்கு எழுதிய ஒரு கடிதத்தில், எல்லோரும் எப்படி இருக்கிங்க, உடலை கவனமா பார்த்துக்குங்க என சொல்கிறார்கள், அருகில் இருந்து கவனித்துக்கொள்ளத்தான் யாரும்மில்லை என ஆதங்கத்துடன் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை கண்டதும் கனகசபை துடித்துவிட்டார். வேலூரில் இருந்து குலசேகரன்பட்டினம் சென்றவர் தன் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்றார். பெரியாரை பார்த்து, இவள் என் மகள், இனி உங்களை உடன் இருந்து கவனித்துக்கொள்வாள் என்றார். அரசியல்மணியின் விருப்பத்தை கேட்டார் அரசியல்மணி, உங்களை கவனித்துக்கொள்வது என் கடமை என தன் விருப்பத்தை கூறியதும் சரியென்றார் பெரியார்.
 

பெரியாரின் பேச்சுக்களை குறிப்பெடுத்து அதனை தொகுத்து குடியரசு இதழ்க்கு அனுப்புவது, பெரியாரின் உடல் நலத்தை பராமரித்து சரியான நேரத்தில் உணவு, மருந்து பொருட்கள் வழங்குவது போன்ற பணிகளை செய்தார். அவரின் உதவியாளராக இருந்தார். பெரியார் செல்லும் கூட்டங்களுக்கு மணியம்மையும் உடன் செல்வார். இயக்கத்தின் நூல்களை கூட்டத்தில் விற்பனை செய்வார், கூட்டம் முடிந்ததும் பெரியாருடன் இணைந்துக்கொள்வார். அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்யத்துவங்குவார்.  
 

திராவிட கழகத்தின் இயக்க தொண்டர்களில் மூத்தவர்கள் அரசியல்மணியை, மணி, மணி என்றும், இயக்கத்தில் வயது குறைந்தவர்கள் மணியம்மா என பாசத்துடன் அழைத்தனர். பெரியாரை நன்றாக கவனித்துக்கொண்டார் மணியம்மை.
 

periyar maniammai with veeramani


1944ல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தான் நீதிக்கட்சி என்கிற பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. அந்த மாநாட்டில் தான் முதன்முதலாக அரசியல்மணி என்கிற பெயரில் மேடையேற்றி பேசவைக்கப்பட்டார். அதன்பின் இறக்கும் வரை பெரியாரின் கருத்துக்களை முழக்கமிட்டார். இவரின் பேச்சு திறமையை கேட்டவர் குடியரசு இதழில் வெளிவந்த இராமாயணத்தையும் – மகாபாரதத்தையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றை என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். இது அவரின் எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்தது.
 

பெரியாருக்கும் – அவரது அண்ணன் மகன் சம்பத் மீது அதிருப்தி உருவானது. இதனால் தன்னை கவனித்துக்கொள்ள இயக்கத்தின் சொத்துக்களை பராமரிக்க ஒரு துணை வேண்டும் என முடிவு செய்தார். அரசியல் எதிரியும், குடும்ப நண்பருமான காங்கிரஸ் கட்சியில் இருந்த ராஜாகோபாலாச்சாரியருடன் ரகசியமாக சந்தித்து பேசி, அவர் கருத்துப்படி 1949 ஏப்ரல் 9ந்தேதி பெரியார் – மணியம்மை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பின் அரசியல்மணி என்கிற பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என பெயர் மாற்றி சட்டப்படி அறிவிக்க வைத்தார் பெரியார்.
 

இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் முன்னணி தலைவராக நின்று களமாடி சிறைச்சென்றார் மணியம்மை. மேலும் பெரியாரைப்போல் அரசாங்கத்திடம் அடிமைப்பட்டு கிடக்க விரும்பாதவர் மணியம்மை. இளந்தமிழா புறப்படு போருக்கு என்கிற தமிழில் குடியரசு இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது என அரசாங்கம் வழக்கு தொடுத்தது. பதிப்பாசிரியர் என்கிற முறையில் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்ட மறுத்து 15 நாள் சிறை தண்டனை அனுபவித்தார்.
 

1954 ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதோடு, விடுதலை இதழின் பதிப்பாசிரியர், வெளியிட்டாளராக்கினார். திருச்சியில் பள்ளி, கல்லூரி தொடங்கிய பெரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகத்தையும், பெண்கள் விடுதியையும் ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தை மணியம்மையிடம் ஒப்படைத்தார்.
 

1973ல் தந்தை பெரியார் மறைந்தார். 1974 ஜனவரி 6ந்தேதி மணியம்மை திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் மறைவுக்கு பின் திராவிடர் கழகத்தை வழிநடத்தும் பொறுப்பு மணியம்மையார்க்கு வந்தது. தான் மறையும் வரை பெரியார் போட்டு தந்த பாதையில் வழித்தடம் மாறாமல் நடந்தார் மணியம்மை. அதற்கு சான்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தினார்.
 

இந்திய குடியரசுத்தலைவர் பக்ரூதின்அலியும், அவரை பொம்மை போல் ஆட்டிவைத்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி, பெரும் பதவியில் இருந்துக்கொண்டு முதன் முதலாக டெல்லியில் நடந்த ராமலீலா என்ற நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர். செல்லக்கூடாது என மணியம்மை வேண்டுக்கோள் விடுத்தார். அதை மீறி இருவரும் சென்றனர். பெரியார் திடலில், இராவண லீலை என்கிற விழாவை நடத்தி ராமன், சீதை உருவத்தை எரித்ததோடு, தமிழகம் வந்த மத்தியமைச்சர், இந்திராகாந்தி போன்றோர்க்கு கறுப்புக்கொடி காட்டி தொண்டர்களோடு கைதாகினார்.
 

இந்த கோபாத்தை இந்திராகாந்தி 1976ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவித்தபோது, மணியம்மையாரை பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது இந்திராகாந்தி அரசு. சிறையில் இருந்து வெளியே வந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் 1978 மார்ச் 16ந்தேதி மணியம்மையார் இயற்கை எய்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்