Skip to main content

எதிர்த்து பேசினால் பாலியல் புகார்? பெரியார் பல்கலை அட்ராசிட்டி! சிக்கலில் உதவி பேராசிரியர்!  

Published on 03/04/2022 | Edited on 03/04/2022

 

Periyar University Atrocity! Assistant Professor in Trouble!

 

சேலத்தை அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் ஊழல், தேர்வில் தில்லுமுல்லு, கவுண்டர் சமூக ஆதிக்கம், காவி அரசியலுக்கு ஆதரவு என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கித் திணறி வரும் இந்தப் பல்கலை, ஆசிரியர்களை மிரட்ட செக்ஸ் புகார் எனும் புது ஆயுதத்தை கையில் எடுத்திருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் பேராசிரியர்கள். 

 

சேலம் கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (32). பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும், பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். கடந்த மார்ச் 1ம் தேதி, பல்கலையின் சிண்டிகேட் கூட்டம் நடக்க இருந்தது. இந்தக் கூட்டத்தில், இயற்பியல் துறைத் தலைவராக பணியாற்றி வரும் குமாரதாஸ் என்பவர், நடப்பு ஆண்டு ஜூன் மாதத்துடன் பணி ஓய்வு பெற உள்ளதால், அவரை மீள் பணியமர்த்தம் செய்வது குறித்து அஜண்டா வைக்கப்பட்டு இருந்தது. 

 

Periyar University Atrocity! Assistant Professor in Trouble!
பிரேம்குமார்

 

பல்கலை ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் வயதை எட்டிவிட்டால், அதற்குப் பின்னர் அவரை மீள் பணியமர்த்தம் செய்யக் கூடாது என்று அரசு ஆணை உள்ளது என்றும், அதனால் குமாரதாஸுக்கு மீள் பணியமர்வு குறித்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தரக்கூடாது என்றும் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க நிர்வாகியாக பிரேம்குமார், உயர்கல்வித்துறை, சட்டத்துறை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். 

 

இதனால் மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் காட்டமான பல்கலை நிர்வாகம், ரகசியம் காக்கப்பட வேண்டிய சிண்டிகேட் தீர்மானத்தை பொதுவெளியில் பகிர்ந்ததாகக் கூறி அவரை பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் சஸ்பெண்ட் செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து பிரேம்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உரிய பதில்களை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் பல்கலைக்கு உத்தரவிட்டுள்ளது. 

 

இந்த நிலையில்தான், பிரேம்குமாரை வலுவாக எதிலாவது சிக்க வைக்க வேண்டும் என்று கருதிய பல்கலை நிர்வாகம், தற்போது அவருக்கு எதிராக ஒரு மாணவியை தூண்டிவிட்டு பாலியல் புகார் கொடுக்க வைத்திருக்கிறது பல்கலை. 

 

இது தொடர்பாக பெரியார் பல்கலை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் வைத்தியநாதன் நம்மிடம் பேசினார். ''பல்கலையில் நடக்கும் விதிமீறல்களை, ஒரு சங்கவாதியாக விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பல்கலை நிர்வாகம் உள்நோக்கத்துடன் பிரேம்குமாரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கக் கூட போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. 

 

Periyar University Atrocity! Assistant Professor in Trouble!
வைத்தியநாதன்

 

சஸ்பெண்ட் நடவடிக்கையை நீதிமன்றம் மூலம் பிரேம்குமார் முறியடித்து விடுவார் என்பதால், அவரை வேறு புகாரில் சிக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பல்கலை செயல்பட்டு உள்ளது. அதனால்தான் எம்.ஏ., வரலாறு படித்து வரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை தூண்டிவிட்டு, தன்னிடம் உதவி பேராசிரியர் பிரேம்குமார் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்; தொட்டு பேசுகிறார்; சாதி பெயரைச் சொல்லி திட்டினார் என்றெல்லாம் பொய் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள். அதன்பேரில் சூரமங்கலம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

அதுவும் மாணவியை புகார் அளிக்க விடாமல், அவருக்கு பதிலாக பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் புகார் அளித்துள்ளார். அந்த மாணவியிடம் இது தொடர்பாக யாரும் பேசி விடக்கூடாது என்பதற்காக, விடுதியில் தனி அறையில் நிர்வாகம் அடைத்து வைத்திருக்கிறது. சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்துதான், ஒவ்வொரு மாணவ, மாணவியாக தேடிச்சென்று பேராசிரியர்கள் சிலர், பிரேம்குமாருக்கு எதிராக ஏதேனும் புகார்கள் இருக்கிறதா என்று மெனக்கெட்டு விசாரித்திருக்கிறார்கள். புகார் அளித்த மாணவியும் கூட நிர்வாகத்தின் மிரட்டலுக்கு பயந்துதான் இதற்கு சம்மதித்திருக்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களால் பல்கலையில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக ஆசிரியர்களுக்கு வாய்ப்பூட்டு போட பார்க்கின்றனர்,'' என்றார் வைத்தியநாதன். 

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்தான், பிரேம்குமாரின் சொந்த ஊர். கல்லூரியிலும், பாரதிதாசன் பல்கலையிலும் படித்தபோது மூன்று தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறார் என பிரேம்குமாரின் பின்னணி குறித்துச் சொல்கிறார்கள். 

 

போலீசார் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, பிரேம்குமார் தலைமறைவு ஆனார். அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ''என் மீது புகாரளித்ததாகச் சொல்லப்படும் மாணவி, திருமணமானவர். அவர் சரியாக வகுப்புக்கு வருவதில்லை. அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொள்வார். சரியாகவும் படிக்க மாட்டார். பாடம் நடத்தியபிறகு கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். அவரிடம் மட்டுமல்ல; பொதுவாக எல்லா மாணவர்களிடமும் நான் கொஞ்சம் கண்டிப்புடன் தான் இருப்பேன். 

 

இதுவரை அந்த மாணவியை எந்த இடத்திலும் தனியாக சந்தித்ததுகூட இல்லை. ஆசிரியர் & மாணவி என்ற உறவைத் தாண்டி எங்களுக்குள் எந்த ரகசிய பேச்சும் இருந்ததில்லை. இதெல்லாம் அந்த மாணவிக்கும் தெரியும். அவரும் மனமுவந்து இப்படியொரு புகாரை கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். 

 

தமிழ்த்துறைத் தலைவர் பெரியசாமி என்பவரை சிண்டிகேட் உறுப்பினராக நியமித்தது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்தேன். அதன்பிறகு, பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள் பணியமர்த்தும் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தேன். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு பெரியசாமியின் தூண்டுதலால் எனக்கு எதிராக பொய் புகார்களை கட்டமைக்கிறார்கள்,'' என்கிறார் பிரேம்குமார். 

 

Periyar University Atrocity! Assistant Professor in Trouble!
சங்கீதா

 

மாணவியின் செக்ஸ் புகார் குறித்து விசாரிக்க பேராசிரியர்கள் சங்கீதா ராஜூ, முருகேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாலியல் புகார் குறித்து விசாரிப்பதற்காக பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர அமைப்பில் இந்த மூவருமே இல்லை. ஆனால், நிர்வாகம், பிரேம்குமாருக்கு எதிராக தங்களுக்கு சாதகமான விசாரணை அறிக்கையை பெறுவதற்காகவே பேராசிரியர் சங்கீதா தலைமையில் குழு போட்டுள்ளதாகவும் ஒரு பேச்சு உலாவுகிறது. 

 

இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது, ''சிண்டிகேட் அஜண்டா விவரங்களை கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்பே வெளியிட்டது பல்கலை விதிகளுக்கு எதிரானது. அதனால்தான் உதவி பேராசிரியர் பிரேம்குமாரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். அவருக்கு அஜண்டா விவரங்களை கொடுத்தது யார் என்று சொல்லி இருந்தால் அன்றைக்கே அவர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்காது. 

 

Periyar University Atrocity! Assistant Professor in Trouble!
ஜெகநாதன்

 

அதேபோல் மாணவி ஒருவர், அவர் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். அதையும் விசாரணை நடத்தி உறுதிபடுத்திய பிறகு, அவருடைய ஒப்புதலின்பேரில் பிரேம்குமார் மீது போலீசில் பதிவாளர் மூலம் புகார் தரப்பட்டுள்ளது. எல்லாம் சட்டப்படிதான் செய்திருக்கிறோம்,'' என்றார். 

 

ஆளுக்கு தகுந்தாற்போல் சாசன விதிகளை வளைத்துக் கொள்வதும், வளைந்து கொடுப்பதும் பெரியார் பல்கலைக்கு ஒன்றும் புதிதில்லை என கவலை தெரிவிக்கிறார்கள் பேராசிரியர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்