Skip to main content

பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?

Published on 14/12/2017 | Edited on 14/12/2017
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு? 

சென்னை கொளத்தூர் அருகே நகைக்கடை ஒன்றில் கடையின் கூரையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு கொள்ளையர்கள் நகைகளுடன் செல்லும் சிசிடிவி பதிவு கிடைத்தது. அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள், சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



தனது குழுவினருடன் பெரியபாண்டி

தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய நாதுராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை பிடிக்க மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, தலைமையில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்ட 4 பேர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். நேற்று கொள்ளையர்களை அவர்கள் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெரியபாண்டி உயிரிழந்தார். அவருடன் சென்ற கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ளது ராமாவாஸ் கிராமம். இந்த பகுதியில்தான் கொள்ளையர்கள் தங்கியிருந்துள்ளனர். சுமார் 4 நாட்கள் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி தலைமையில் ராஜஸ்தான் சென்ற காவலர்கள், அங்கு கிடைத்த தகவல்களின் மூலம் கொள்ளையர்கள் இருந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 2 மணிக்கு ராமாவாஸ் கிராமத்திற்குச் சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டில் இருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் நடந்த மோதலில்தான் கொள்ளையர்கள் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியை சுட்டு கொன்றதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து மற்ற 4 போலீசாரும் தப்பிசென்றுள்ளனர்.

இதில்தான் மிகுந்த சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது, காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மீது பாய்ந்த குண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியில் இருந்து பாய்ந்ததா? அல்லது சகபோலீசார் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததா? என்பது ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.



கொள்ளையர்கள் தினேஷ் சுவுத்ரி மற்றும் நாதுராம்

மேலும், தமிழக போலீசாருக்கு வந்த தகவல்கள் தவறானது என கூறப்படுகிறது. அதாவது கொள்ளையர்கள் தங்கியிருந்த இடத்தில் 3 பேர் மட்டுமே இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், சம்பவ இடத்தில் 10க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருந்துள்ளனர். தமிழக போலீசார் 3 பேர் மட்டுமே அந்த இடத்தில் இருப்பதாக நினைத்து உள்ளே சென்றுள்ளனர். போலீசார் உள்ளே நுழைந்ததும் கொள்ளையர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதில் நிலைதடுமாறிய போலீசார் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால், இதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளார். அப்போதுதான் பெரியபாண்டியனுடன் வந்த சக தமிழக போலீசார் அவரைக் காப்பாற்ற கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது கொள்ளையர்களை நோக்கி சுடப்பட்ட அந்த குண்டு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது பாய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என ராஜஸ்தான் போலீசார் கருதுகிறார்கள்.

இங்குதான் மேலும் பல கேள்விகள் எழுகின்றன. அதாவது கொள்ளையர்கள் தங்கள் தலைமை காவலரை சுடும்போது, அவருடன் வந்த மற்ற நான்கு சக காவலர்களும் ஏன் கொள்ளையர்களை நோக்கி பதிலுக்கு சுடவில்லை? கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் வரை வந்த தமிழக போலீசார், உயர் அதிகாரிகளிடம் கொள்ளையர்களைச் சுட அனுமதி வாங்கவில்லையா? அப்படி அனுமதி வாங்கியிருந்தால் ஏன் கொள்ளையர்களை நோக்கி திருப்பி சுடவில்லை? கொள்ளையர்கள் இரும்பு கம்பி, கற்களால் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படியென்றால், கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கொள்ளையர்கள் ஒருவர்கூட சிக்காமல் தப்பியோடியது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்த நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தங்களுக்கு தெரியவில்லை என்று ராஜஸ்தான் போலீசார் கூறியிருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.



குண்டுக் காயங்களுடன் சடலமாக பெரியபாண்டி

பெரியபாண்டி மரணத்தில், தமிழக போலீஸாரின் டீம் ஒர்க் குறித்து பல உயரதிகாரிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். அதாவது, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது, அந்த மாநில போலீஸாருடன் தகவல்களை பரிமாறும் அளவுக்கு உயரதிகாரிகள் தலைமையில்தான் போலீஸ் குழு அமைத்திருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் மிகச்சிறிய குழுவை எப்படி உயரதிகாரிகள் அனுமதித்தார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

- இசக்கி

சார்ந்த செய்திகள்