Skip to main content

நிலையான ஆட்சிக்கும், கர்நாடகத்திற்கும் ராசியே இல்லை... புலம்பும் கர்நாடக மக்கள்

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

2004 ஆண்டு, அதுதான் கர்நாடகாவிற்கு ஆரம்பித்தது. அன்று தொடங்கியது, இடையில் சித்தராமையாவால் நின்று பின் இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டது. ஆம் அதுதான் நிரந்தர ஆட்சி முக்கியமாக 2004 லிருந்து கர்நாடகாவை ஒருநபர் ஐந்தாண்டுகள் ஆண்டதாக வரலாறு இல்லை 2013வரை. இன்று மீண்டும் அதே நிலை ஏற்படுமோ என்ற குழப்பத்தில் கர்நாடக மக்கள் இருக்கின்றனர். 

 

karnataka election

 

 


2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதுவரை இல்லாத விதமாக பா.ஜ.க. 79, காங்கிரஸ் 65, மதச்சார்பற்ற ஜனதா தளம் 58 இடங்களையும் பெற்றது. காங்கிரஸும், ம.ஜ.த.வும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தரம் சிங்கும், துணை முதல்வராக சித்தராமையாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆட்சி 2006 வரையிலும்தான் நீடித்தது. தேவகௌடாவின் மகன் குமாரசாமி 46 எம்.எல்.ஏ.களுடன் பா.ஜ.க.வுடன் இணைந்தார். இதனால் 2006ன் தொடக்க காலத்தில் குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணைமுதல்வராகவும் ஆட்சியில் அமர்ந்தனர். இவர்களுக்குள் 20 மாதங்கள் நான், 20 மாதங்கள் நீங்கள் என்ற உடன்படிக்கை இருந்தது. முதல் இருபது மாதங்கள் குமாரசாமி ஆட்சி புரிந்தார். 2007 அக்டோபரில் மீண்டும் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. 2006ல் போட்ட உடன்படிக்கையை குமாரசாமி மீறினார். அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா முதலமைச்சராக ஆட்சிபுரிய குமாரசாமி அனுமதிக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின் 2008ல் தேர்தல் நடைபெற்றது.

2008 தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றது 110 இடங்களை கைப்பற்றியது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தென்னிந்தியாவில் பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சியமைத்தது அப்போதுதான். ஆனால் அந்த ஆட்சிக்காலம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. எடியூரப்பா நிறைய கலகங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் முக்கியமானது ரெட்டி சகோதரர்களின் பெல்லாரி சுரங்க ஊழல் மற்றும் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குகள். எடியூரப்பா வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து சதானந்த கௌடா பதவியேற்றார். விரைவிலேயே கௌடாவிற்கும், எடியூரப்பாவிற்கும் சண்டை தொடங்கியது. அது கிளர்ச்சிவரை சென்றது. கௌடாவை பதவியிலிருந்து நீக்காவிட்டால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார், இதனால் கட்சி மேலிடம் அவரை விடுவித்தது. அவரைத்தொடர்ந்து மற்றொரு லிங்காயத் தலைவரான (பா.ஜ.க.வில்) ஜெகதீஷ் ஷெட்டர் பதவியேற்றார். அந்த ஐந்து ஆண்டுகளிலேயே மூன்று முதலமைச்சர்கள் பதவியேற்றனர்.

 

 

அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. பெரும்பான்மையான இடங்களைப்பெற்று பா.ஜ.க.வை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது. உடுப்பி சிம்மகளூரில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வென்றது.

2012ம் ஆண்டு எடியூரப்பா பா.ஜ.க.விலிருந்து விலகி கர்நாடகா ஜனதா பக்‌ஷா என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார். அதற்குமுன் 2011ம் ஆண்டு ஸ்ரீராமலு பா.ஜ.க.விலிருந்து விலகி பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த பிரிவுகளெல்லாம் பா.ஜ.க.வை பலவீனப்படுத்தியது.

அடுத்து 2013 தேர்தல் 122 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலத்திற்கு பின்பு நிலையான ஆட்சியை வழங்கியவர் இவர்தான். தற்போது 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலும் இழுபறியிலேயே முடிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்தமுறை நிலையான ஆட்சி நடக்குமா என்று… இதே மனநிலையில்தான் கர்நாடக மக்களும் இருக்கின்றனர்.

Next Story

"பாஜகவுக்கு எதிரான அலை" - சரத் பவார் 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nationalist congress cheif Sharad Pawar says anti bjp wave is sweeping

 

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சட்டமன்றத்தில் தோல்வி; நாடாளுமன்றத்தில் கூட்டணி? - தேவகவுடா பதில்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

assembly election loss parliamentary election alliance devegowda answer 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.

 

சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது  எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.

 

மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.