ADVERTISEMENT

கை தட்டினால் போதுமா... மருத்துவம் பார்த்த டாக்டருக்கு இந்த நிலைமையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

03:06 PM Apr 23, 2020 | Anonymous (not verified)


கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனச் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமாயின.

வானகரம் அப்போலோவில் கரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குளஸ், டி.பி.சத்திரம் பகுதியிலுள்ள கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்தபோது, அப்பகுதியினர் திரண்டு விரட்டியடிக்க, அண்ணாநகர் பகுதியிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் புதைக்கப்போனபோது அங்கும் ஆம்புலன்ஸ் அடித்து உடைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள்மீது கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.

ADVERTISEMENT


இதற்கு முன் இதே வானகரம் அப்போலோவில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் உடலைப் புதைக்கச்சென்ற போதும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஜெயமோகன் இறந்தபோதும் புதைக்க எதிர்ப்பு கிளம்பியதாகத் தகவல் பரவியது.

கரோனாவுக்கு எதிராகப் போராடி மக்களின் உயிரைக்காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், சிகிச்சையின்போது நோயாளிகளிடமிருந்து தொற்றும் கரோனாவால் உயிரிழக்கும் டாக்டர்களின் உடலை ‘இங்கு புதைக்கக்கூடாது’ என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது அறியாமையா? அரசின் அலட்சியமா? என்று விசாரிக்க ஆரம்பித்தோம்…

நம்மிடம் பேசிய பொதுநல ஆர்வலர் கோபால கிருஷ்ணனோ, "ஊரடங்கில் பெரும்பாலும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு இந்தக் சுடுகாட்டில் தான் புதைக்கப் போகிறார்கள் என்கிற தகவல் முன்கூட்டியே எப்படித் தெரியும்? காரணம், சுடுகாட்டில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம்தான் முன்கூட்டியே தகவல் பரப்பப்பட்டு பிரச்சனையாக வெடிக்கிறது. டாக்டர்களைப் புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பது மாபெரும் குற்றம் என்றாலும் அதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற மருத்துவ ரீதியான தகவல்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் டாக்டர்கள் மூலம் விழிப்புணர்வூட்டியிருக்கவேண்டும்.

ADVERTISEMENT




மயானத்தில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்குச் சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியிருக்கவேண்டும். 144 தடையுத்தரவு போடப்பட்ட சூழலில் 4 பேர் ஒன்று கூடினாலே விரட்டும் போலீஸ் 50 பேர், 60 பேர் கூடும் அளவுக்கு எப்படி அலட்சியமாக இருந்தது? அம்பத்தூரில் ஏற்கனவே இப்படியொரு சம்பவம் நடந்தபிறகும்கூட கீழ்ப்பாக்கத்தில் டாக்டரின் உடலை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் அடித்து உடைக்கும் அளவுக்கு விட்டது மாநகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது'' என்கிறார் கோபத்துடன்.



கரோனா பாதிக்கப்பட்டவரைப் புதைக்கும் போதோ எரிக்கும்போதோ கரோனா தொற்று ஏற்படுமா? என்று இந்தியத் தொற்றுநோய் மருத்துவர்கள் கூட்டமைப்பின் (Clinical Infectious Diseases Society) முன்னாள் செயலாளரும் தற்போதைய கவர்னிங் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதனிடம் நாம் கேட்டபோது, "கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவரை எப்படிப் புதைக்கவேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதன்படி, அடக்கம் செய்யும்போது யாருக்கும் தொற்றாது. மனித உடம்பில் 70 சதவீதம் தண்ணீர் இருப்பதால் கரோனா தொற்றுள்ளவர் இறந்தாலும் அவரது உடம்பிற்குள் கரோனா வைரஸ் சுமார் 24 மணி நேரத்திற்கு இருப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால், கரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவரின் உடலிலிருந்து வெளியாகும் கண்ணீர், இரத்தம் உள்ளிட்ட திரவங்களை தொடுவதன்மூலம் பரவலாம். அதனால்தான், உடலை நேரடியாகத் தொட்டு அடக்கம் செய்யக்கூடாது.

உடல் முழுவதும் நன்றாக பேக் செய்திருக்கவேண்டும். உறவினர்கள் முகம் பார்க்க மட்டும் பாலித்தீன் போன்ற கண்ணுக்குத் தெரியும்படி பொருளால் மூடிவிட வேண்டும். சுற்றி, சோடியம் ஹைப்போ குளோரைடு தெளிக்கவேண்டும். புதைப்பதாக இருந்தால் வழக்கத்தைவிட ஆழமாகக் குழிதோண்டி புதைக்கவேண்டும் என்றெல்லாம் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். ஆனால், எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் இடங்களில் அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இதன்மூலம் கரோனா பரவாது என்பதால் அச்சப் படத்தேவையில்லை'' என்கிறார் அவர்.

மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனரும் பிரபல மருத்துவருமான டாக்டர் கலாநிதியின் கருத்து இன்னும் சிந்திக்க வைக்கிறது, கரோனா தொற்றக்கூடிய 20 சதவீதம் பேருக்குதான் அறிகுறிகள் தெரியும். அதில், 3 சதவீதம்பேர் சிகிச்சை பலனின்றி இறந்துபோகிறார்கள். மற்றவர்கள், டாக்டர்களின் கடினப்போராட்டத்தால் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால், மீதமுள்ள கரோனா தொற்றுள்ள 80 சதவீதம் பேருக்கு கரோனா இருப்பதே தெரியாது. அவர்கள், மூலம் கரோனா பரவிக்கொண்டுதான் இருக்கும். அப்படியிருக்க, ஐ.சி.எம்.ஆர். விதிப்படி மிகக் கவனமாக அடக்கம் செய்யப்படும் கரோனா தொற்றிய டாக்டர்கள் அல்லது நோயாளிகள் மூலம் கரோனா தொற்றும் என்று நினைத்து எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்? துபாய்க்குச் சென்று பப்புல குடிச்சிட்டு இறந்துபோன நடிகைக்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்கிறார்கள். ஆனால், மக்களைக் காப்பாற்ற, தங்களது வீட்டுக்குச் சென்று பிள்ளைகளைக்கூட பார்க்காமல் தனிமைப் படுத்திக்கொண்டு கரோனாவிடம் போராடி அதன்மூலம் இறக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள், அடிப்படை சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு ராணுவ மரியாதையுடன் கொடுக்க வேண்டுமல்லவா?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கண்ணன் நம்மிடம், “கரோனா தொற்றால் ஒருவர் இறந்துபோனதுமே அவர் மூலம் அக்கம்பக்கத்திலுள்ள மக்களுக்கு கரோனா பரவாது. உயிரோடு இருப்பவர்கள் மூலமே கரோனா அதிகமாக பரவுகிறது. வைரஸ் கிருமியிலிருந்து சுமார் 10 சதவீதம்வரை பாதுகாக்கும் துணி மாஸ்க், 50 சதவீதம் பாதுகாக்கும் டூ லேயர் மாஸ்க், 85 சதவீதம்வரை பாதுகாக்கும் த்ரி லேயர் மாஸ்க், 95 சதவீதம் பாதுகாக்கும் என்-95 மாஸ்க், 99 சதவீதம் பாதுகாக்கும் என் -99 மாஸ்க் என அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி வெளியில் சென்றால் சோப்பு போட்டு கழுவி சுத்தமாக தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று நோயாளிகளைப் பார்க்காமல் இருந்திருந்தால் டாக்டர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நோயாளிகள் மூலம் கரோனா தொற்றிய டாக்டரின் உடலைப் புதைக்கச் சென்றபோது ஐம்பது அறுபது கற்களால் கட்டைகளாலும் தாக்கி விரட்டினார்கள். அப்படியே, போட்டுவிட்டு ஓடிவந்தோம். இந்த, நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது'' என்று கண்கலங்கி வேதனையோடு ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.


யார் இந்த டாக்டர் சைமன் ஹெர்குளிஸ்?

பிரபல நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சைமன் ஹெர்குளஸ கடந்த 19-ம் தேதி புதைக்கச்சென்ற மருத்துவர்களில் ஒருவரான பிரதீப் நம்மிடம் அவர்குறித்து பேசினார். நாகர்கோயில் வடக்கன்குளத்தைச் சேர்ந்த சைமன் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ். அறுவை சிகிச்சை, செண்ட்ரலிலுள்ள எம்.எம்.சி.யில் எம்.சி.ஹெச் எனப்படும் நரம்பியல் படிப்பை முடித்து, லண்டனின் எஃப்.ஆர்.சி.எஸ். படிப்பையும் முடித்தவர். தண்டுவட அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகம் மட்டுமல்ல 30 நாடுகளிலுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவர். பணமில்லாதவர்களுக்கு குறைந்த செலவிலும் சிலநேரங்களில் இலவசமாகவும் சிகிச்சை அளித்தவர் என்கிறார் இவரது மருத்துவ நண்பர்.

56 வயது. உடல்பருமன், சர்க்கரைநோய், பணி நிமித்தமான டென்ஷன் என எப்போதுமே பரபரப்பாக இருந்தவர், திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத்திணறலுக்கு ஆளானதால் கடந்த மார்ச்-29 ந்தேதி சென்னை கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதுதான், கரோனா தொற்றியது தெரியவந்தது. இவரது, மகள் எம்.டி. படித்த டாக்டர். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார். அவருக்கு, அறிகுறியே இல்லாமல் கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வானகரம் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது, டாக்டர் சைமனின் மகளுக்கு ஏதோ ஒரு நோயாளியின் மூலம் தொற்று ஏற்பட்டு பலவீனமாக இருந்த டாக்டர் சைமனுக்குத் தொற்றி உயிரிழப்பை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கிறார்கள் மருத்துவர்கள். இருப்பதற்கு பதிலாகக் கரோனாவால் இறந்தவர் மூலம் பரவும் என்று எதிர்ப்பு தெரிவிப்பது அறியாமை''’என்கிறார்.


தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களோ, “புதைக்கப்போவது டாக்டர் என்று தெரியாது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழிதோண்டியதால் ஒட்டுமொத்த கரோனாவால் இறந்து போனவர்களையும் இரவு நேரத்தில் இங்கு வந்து புதைக்கிறார்கள் என்று நினைத்து தாக்கிவிட்டோம்'' என்று கூறியிருக்கிறார்கள். அரசும், இரு டாக்டர்களின் உயிர் பலியான அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அலட்சியம் காட்டியுள்ளன. முன்கூட்டியே, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் இப்படி நடந்ததைத் தடுத்திருக்கலாம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT