ADVERTISEMENT

அவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்!

05:21 PM Dec 13, 2019 | Anonymous (not verified)

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைதாகி, 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் திகார் ஜெயிலிலிருந்து விடுதலையான ராஜ்யசபா எம்.பி. ப.சிதம்பரம், மறுநாளே பாராளுமன்றம் சென்றார். மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இருநாட்கள் பாராளுமன்றத்திற்கு விடுமுறை என்பதால், கடந்த சனிக்கிழமையன்று சென்னை வந்த ப.சி. விமான நிலையத்தில் மீடியாக்களிடம் பேசிய போது, மோடி அரசின் பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் விளாசியதோடு, இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உஷார்படுத்தினார்.

ADVERTISEMENT



அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை தனது சொந்த மாவட்டமான சிவகங்கைக்குப் போகும் திட்டத்துடன், ஞாயிறு காலை 10.40க்கு திருச்சி விமானநிலையம் வந்திறங்கினார்கள் ப.சி.யும் அவரது மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும். சரியாக நண்பகல் 12 மணிக்கு திருமயம் வந்திறங்கிய ப.சி.க்கும் கார்த்திக்கிற்கும் மேளதாளம், அதிர்வேட்டு வரவேற்பு என தூள் கிளப்பினார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். ப.சி.யின் வருகை குறித்து ஏற்கனவே காங்கிரஸ் நிர்வாகிகள் சொல்லியிருந்ததால், கட்சித் தொண்டர்களும் மக்களும் அதிகளவில் திரண்டிருந்தனர்.

திருமயம் மலைக்கோட்டையில் இருக்கும் கோட்டை பைரவர் கோவிலுக்குச் சென்ற ப.சி.க்கும் அவரது மகனுக்கும் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர் கோவில் அர்ச்சகர்கள். கண்மூடி மனமுருக பைரவரை வேண்டி நின்ற ப.சி.யிடம் "இந்தாங்கோ விடலைக்(தேங்காய்) காய். அத்தனை பிரச்சனைகளும் தீர இத சுக்குநூறா உடையுங்கோ' என அர்ச்சகர் சொன்னதும், வலது கையை ஆவேசமாக தூக்கி தேங்காயை சுக்கு நூறாக உடைத்தார் ப.சி.

தன்னை வரவேற்க காத்திருந்த அடிமட்டத் தொண்டர்களிடம் நெருங்கிச் சென்று, சிலரது பெயரைச் சொல்லி அன்புடன் பேசிய ப.சி.க்கு கைத்தறித் துண்டுகளும் மாலைகளும் அணி விக்கப்பட்டன. இது குறித்து அங்கிருந்த செந்தில் என்பவரிடம் பேசிய போது, “கைத்தறி நெசவாளர்கள், பூக்கட்டுபவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து எப்போதுமே கைத்தறித்துண்டுகளையும் மலர் மாலைகளையும்தான் வாங்குவார். ஆனால் இப்போது சால்வைகளையும் வாங்கியது எங்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முன்னெல்லாம் அவரைப் பார்க்கணும்னா பல செக்போஸ்ட்டுகளைத் தாண்டிப் போகணும். ஆனா இனிமே அப்படி இருக்காது'' என்றார் உற்சாகத்துடன்.

ADVERTISEMENT


திருமயத்தில் திரண்ட மக்களிடமும் தொண்டர்களிடமும் விடை பெற்றுவிட்டு, நேராக காரைக்குடி சென்றார் ப.சி. பழைய பேருந்து நிலையத்தில் பெருந்திரளாக திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், மேளதாளம், ஆடும் குதிரை வரவேற்பு என ஜமாய்த்தனர். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார் ப.சி. அங்கே ஏராளமான மீடியாக்கள் குவிந்திருந்தன. மீடியாக்கள் கேள்விகளை ஆரம்பிக்கும் முன்பே பேச ஆரம்பித்தார்.

"இன்று நடப்பது தர்மயுத்தம். ஏழு மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றி பெற்ற மோடி அரசு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் இப்போதைய நிலைமையே வேறாக உள்ளது. இந்த அரசு என்ன சொல்கிறதோ அதைத் தான் அனைவரும் செய்ய வேண்டும். அவர்கள் சாப்பிடச் சொல்வதை சாப்பிட வேண்டும், அவர்கள் பேசும் மொழியைப் பேச வேண்டும். இதையெல்லாம் எதிர்த்துக் கேட்டால், சமூக வலைத்தளங்களில் கருத்தைச் சொன்னால் தேசத்துரோகிகள். இப்படிப்பட்ட சர்வாதிகார பாணியில் செல்வதால்தான் நாடு பொருளாதார சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.


இதை எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும்? மக்களை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்துப் பேசுவேன், போராடுவேன், எழுதுவேன்'' என சரமாரியாக வெடித்தவர், "அதிகாரிகள் வர்க்கம் துணிவோடு தங்களது கருத்தை ஆள்வோருக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசு நெறிப்படும். இப்போது நாடு தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது. வெங்காயம் சாப்பிடுபவர்கள் எல்லாம் உயர்ந்த மனிதர்கள் அல்ல. 1 லட்சம்கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தப் போகிறார்கள். இன்னும் பத்து நாட்களில் மக்கள் மீது புது வரி பாயப் போகிறது. அதனால் சொல்கிறேன்.

இளைஞர்கள், படித்தவர்கள் மத்தியில் புரட்சி எண்ணம் வரவேண்டும். அந்த எண்ணம் வந்தாலொழிய இந்த மத்திய அரசு மாறாது'' என கோபாவேசத்துடன் தனது பேட்டியை முடித்தார் ப.சி. பின்னர் மானகிரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கச் சென்றார் ப.சி. இதற்கிடையே திகார் சிறையில் இருந்த 106 நாட்கள் இதுகுறித்து, "அச்சமில்லை அச்சமில்லை' என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளார் ப.சிதம்பரம். அந்த புத்தக வெளியீட்டு விழா, 2020 ஜனவரி 10—ஆம் தேதி சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் நடக்க உள்ளது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT