மன உளைச்சலுக்கு ஆளான ப.சிதம்பரம்! திகார் என்றதும் டென்ஷனான ப.சிதம்பரம்!

அமலாக்கத்துறையும் தன்னை கைது செய்யக்கூடும் என நினைத்த சிதம்பரம், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை நீதியரசர்கள் பானுமதி, போபண்ணா ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணையில் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், "முன்ஜாமீன் கேட்பது அடிப்படை உரிமை. அந்த உரிமை சிதம்பரத்திற்கு மறுக்கப்படுகிறது. அவர் எங்கும் தப்பித்துச் செல்லமாட்டார்' என வாதிட்டார்.

p.chidambaram

அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘"சிதம்பரம் தப்பிச்செல்வாரா? மாட்டாரா என்பதை விசாரணை அமைப்புதான் முடிவு செய்யும். சிதம்பரம் செய்திருக்கும் குற்றம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது. அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் விஜய் மல்லையா, நீரவ்மோடி போன்றவர்களின் வழக்குகள் பாதிக்கும்' என்றார். இரு தரப்பின் வாதங்களை கேட்ட நீதியரசர்கள், "செப்டம்பர் 5-ந்தேதி இம்மனு மீது முடிவெடுக்கப்படும்' என்றும் "அதுவரை சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது' எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

congress

இதனையடுத்து, செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பளித்த நீதியரசர்கள், "முன்ஜாமீன் என்பதை அடிப்படை உரிமையாக கருத முடியாது. சரியான பாதையில் இந்த வழக்கு பயணிப்பதாக நாங்கள் கருதுகிறோம். விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும்' என கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், "ஜாமீன் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு செய்யலாம்' எனவும் தெரிவித்தனர் நீதியரசர்கள்.

சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப் பட்டதால் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு எந்த தடையும் இல்லை. இதனால், உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட சி.பி.ஐ. காவல் முடிந்ததால் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்திய சி.பி.ஐ., "சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பி நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்' என வாதிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபில், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஏற்கனவே ஜாமீன் தரப்பட்டிருக்கிறது. அதனால் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அதுதான் இயற்கை நீதி' என்றார் அழுத்தமாக. இதனை கடுமையாக மறுத்த சி.பி.ஐ. வழக்கறிஞர்கள், "சிதம்பரம் வெளியே இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. சிறைக்கு அனுப்புங்கள்' என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில்சிபில், "அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கு செல்லவும் சிதம்பரம் தயாராக இருக்கிறார். அதனால் சிறைக்கு அனுப்புவதை தவிர்த்து ஜாமீன் வழங்க வேண்டும்' என அழுத்தம் கொடுத்தார். நீதிபதி அஜய்குமார், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்து அவரை 19-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சிதம்பரத்திற்கு எதிரான விவகாரங்கள் குறித்து டெல்லியில் விசாரித்த போது, ""ஐ.என். எக்ஸ். மீடியா வழக்கில் 15 நாட்கள் சி.பி.ஐ. கஸ்டடி யில் இருந்த சிதம்பரம், மன ரீதியாக மிகவும் பலகீன மடைந்திருக்கிறார். சி.பி.ஐ. கேட்ட பல கேள்விகள் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கஸ்டடி முடிந்ததும் திகார் சிறைக்கு அனுப்பி வைப்பதற்கு வசதியாக ஜாமீன் கிடைக்காமல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.பி.ஐ. முன்கூட்டியே செய்து முடித்துவிட்டது. பொரு ளாதார குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களை அடைத்து வைப்பதற்கென்றே திகாரில் தனி ப்ளாக் உள்ளது. அங்கிருக்கும் 7 ஆம் எண் கொண்ட அறை சிதம்பரத்திற்காக தயார் செய்யப்பட்டிருக் கிறது. "சி.பி.ஐ. கஸ்டடி முடிந்ததும், அமலாக்கத் துறை உடனடியாக கைது செய்யவேண்டாம். அவர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிறையிலேயே அமலாக்கத்துறை அவரை கைது செய்யட்டும். சிறையில் சில நாட்கள் இருக்கும்படி அவரை விட்டுப்பிடித்து அதன்பிறகு அமலாக்கத்துறை கஸ்டடி எடுத்தால் போதும்' என அட்வைஸ் செய்திருக்கிறது உள்துறை. இந்த அட்வைஸை அமித்ஷாவின் கட்டளையாகவே எடுத்துக்கொண் டனர் சி.பி.ஐ. அதிகாரிகள். கோர்ட் உத்தரவுப்படி இசட் பிரிவு பாதுகாப்புடன் கட்டில், மெத்தை, போர்வை என வசதிகள் செய்யப்பட்டாலும் திகார் என்றதும் திகிலாகிவிட்டார் ப.சி.

சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் மூன்று மாதம் சிறையில் இருந்து அமித்ஷா அனுபவித்த வேதனைகளை ஓரிரு நாட்களிலேயே சிதம்பரம் உணர வேண்டும் என்கிற மேலிடத்தின் விருப்பத்திற்கேற்பவே சிதம்பரம் விசயத்தில் நடந்து வருகின்றன'' என்கிறார்கள்.

congress inx media case p.chidambaram tihar jail
இதையும் படியுங்கள்
Subscribe