ADVERTISEMENT

EXCLUSIVE : கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள், மனைவிக்கு மிக்சி, கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள்! - பழ.கருப்பையா பேட்டி   

05:05 PM Nov 09, 2018 | vasanthbalakrishnan

தீபாவளியன்று வெளியாகி வசூலோடு சேர்த்து சர்ச்சைகளையும் வாரிக்கட்டிக்கொண்டிருக்கும் படம் சர்கார். இதில் மோசமான அரசியல்வாதியாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான பழ.கருப்பையாவிடம் சர்கார் சர்ச்சைகள் குறித்தும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் பேசினோம்.

ADVERTISEMENT



கட்சிகள் கடந்து, அரசியல்வாதிகளைத் தாண்டி சமூக செயல்பாட்டாளர்கள், நேர்மையானவர்களை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற கருத்தை சர்கார் முன்வைக்கிறதா?

40, 50 ஆண்டுகளாக அரசியல் மிகவும் சீர்கெட்டுவிட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கும் வேட்பாளர்களிடம் 5 கோடி கொடு என கேட்கும் நிலைமையே கட்சிகளில் உள்ளது. அப்படி கேட்கும்போதே அரசியல் சீர்கெட்டுவிடும். புதுக்கட்சிகள் வரை அப்படியே இருக்கின்றன. எனக்குத் தெரிந்து கெஜ்ரிவால் மட்டுமே 20 லட்சம் வர வேண்டிய தொகுதிக்கு 21 லட்சம் வந்தவுடன், மீதி 1 லட்சத்தை திரும்ப கொடுத்தார். அதுபோல பணத்தின் தயவே இல்லாமல் ஆட்சிக்கு வந்த கட்சி, ஜனதா கட்சி. ஒரு வாக்கும், ஒரு ரூபாயும் தாருங்கள் என ஜெயப்ரகாஷ் நாராயணன் கேட்டார். மக்கள் அதை தந்தனர். வலிமை மிகுந்த இந்திராவை வென்று மொரார்ஜி தேசாய் ஆட்சி அமைத்தார். அண்ணா ஆரம்பித்த தி.மு.க வெறும் 11 லட்சத்தை வைத்து கொண்டு ஆட்சிக்கு வந்தது அன்று. ஆனால் இன்று தினகரனால் இவ்வளவு செலவு செய்ய முடியும், எடப்பாடியால் இவ்வளவு செலவு செய்ய முடியும், நம்மால் எவ்வளவு செய்ய முடியும் என்றே பேசுகின்றனர். 5 கோடி செலவு செய்தவன் 20 கோடி சம்பாதிக்கத்தான் பார்ப்பான். அப்பொழுதே ஊழல் தொடங்கிவிடுகிறது. அப்படிப்பட்ட ஊழைலை களைய வேண்டிய கடமை 'சர்கார்' போன்ற படத்துக்கு உள்ளது.

சமூக செயல்பாட்டாளர்களை அரசியலுக்குக் கொண்டு வருவது என்பது சரியான முடிவாக இருக்குமா?

இந்தப் படம் ஏன் எதிர்க்கப்படுகிறது என்பதைத்தாண்டி இதில் உள்ள கருத்துக்களை நீங்கள் பேசத் தொடங்கி உள்ளீர்கள். அரசியல்வாதி என்ற முறையில் பதில் சொன்னால், தனித்தனி வேட்பாளர்கள், தனித்தனி சின்னங்களில் நின்று வெற்றி பெற்றாலும் அவர்களை ஒன்று சேர்க்கும் சக்தியாக விஜய் உள்ளார். ஆனால் நடைமுறையில், தேர்தலில் வெற்றி பேற கட்சி என்ற அமைப்பு கட்டாயம் தேவை. மேலும் எந்த பொருளாதார திட்டம், என்ன சமூக திட்டங்களை நாம் வைத்திருக்கிறோம் என்பதெல்லாம் படத்தில் காட்டினால் படம் மஹாபாரதம் போல 6 மணிநேரம் ஓடும். எனவே இயக்குனர் இதற்குள் எல்லாம் செல்லாமல் மேலோட்டமாக தனக்குத் தெரிந்த தீர்வையும், தீமை எப்படி ஒழிந்தது என்பதையும் மட்டும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT



நீங்கள் தீமை என குறிப்பிட்டது அ.தி.மு.க என கொள்ளலாமா?

இது நிகழ்கால அரசியலை குறிப்பிடுகின்றதே தவிர குறிப்பாக அ.தி.மு.க வை மட்டும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர்கள் இப்பொழுது ஆட்சியில் இருப்பதால், படத்தில் குறிப்பிடுவது தங்களைத்தான் என்று மக்கள் நினைத்துவிடுவார்கள் என எண்ணி கோபப்படுகின்றனர். ஆனால் உண்மையிலேயே மிகவும் ஊழலான கட்சி அ.தி.மு.கதான். ஊழலை நியாயப்படுத்தியவர்கள் அவர்கள்தான். உனக்கான பங்கை நீ பெற்றுக்கொண்டு என் பங்கை எனக்குக் கொடுத்து விடு என்பது அவர்கள் நிலைப்பாடு. ஜெயலலிதாவுக்கு என் மேல் மதிப்பு அதிகம், அவர்களே என்னை வேட்பாளராகத் தேர்வு செய்து பதவி அளித்தார்கள். நான் பணம் ஏதும் தரவில்லை. அது தான் எனக்கு உறுத்தலை தந்தது, அவர் அன்பாகக் கொடுத்த பதவியில் இருந்து கொண்டது அவரை தவறாக பேச கூடாது என்றே பதவியை ராஜினாமா செய்துவிட்டு குறை கூறினேன். எதிர்க்கட்சியாக இருந்தபோதே என்னுடன் நிறைய விஷயங்களை விவாதிப்பார்கள், என் மேல் மதிப்பு வைத்திருந்தார். அவர் கேள்வி கேட்டாலே தம்பிதுரை கூட நின்றுகொண்டுதான் பதில் அளிப்பார். ஆனால் நான் அமர்ந்து கொண்டுதான் பதிலளிப்பேன். அது ஒன்றும் வகுப்பறை இல்லையே நின்று கொண்டு பதில் சொல்ல? இதெல்லாம் செய்ததால்தான் அவர்கள் வென்றுவிட்டார்கள் நான் தோற்றுவிட்டேன். அப்படிதோற்றத்திற்காக நான் வருத்தப்படுவதில்லை.

நிகழ்கால அரசியல் பேசும் படம் என்று சொல்கிறீர்கள், விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் சொல்கிறீர்கள், அப்படியென்றால் இந்த சர்ச்சைகளை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாரா?

காலத்தின் தேவை எதுவோ அதை பேசினால்தான் திரைப்படம் நிலைத்து நிற்கும். அரசியல் சீர்கெட்டு போன காரணத்தினால்தான் இன்று நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என நினைக்கின்றனர். இதுவே 1937ல் எந்த நடிகனாவது கட்சி ஆரம்பிக்க நினைத்தார்களா? ஏனென்றால் அன்று தியாகம் தேவைப்பட்டது. நாடு அடிமைப்பட்டுக்கிடந்த பொழுது சிறை சென்றவர்களே முதல்வர்கள் ஆயினர். ஆனால் கலைஞர் காலத்திற்குப் பிறகு தியாகம் என்ற ஓன்று அரசியலில் இல்லாமல் போய்விட்டது. இப்பொழுது பணம் மற்றும் கூட்டம் உள்ளவர்கள் மதிக்கப்படுகிறார்கள். எனவே நடிகர்கள் அரசியலுக்கு அணிவகுத்து வருகின்றனர். இது காலம் ஏற்படுத்திய நிலைப்பாடு. அன்று என்.எஸ்.கே அரசியலுக்கு வராமலே மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தினார். இதனால்தான் அண்ணாவே அவருக்கு சிலைவைத்தார். வெக்கைக்குப் பின் ஏற்படும்
மழை போல, தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலைக்கு பின் நல்ல அரசியல் தலைவர்கள் உண்டாவார்கள் என்பது என் எண்ணம்.

திராவிட அரசியல் எதிர்ப்பை இந்தப் படம் பதிவுசெய்கிறதா?

அப்படி எனக்குத் தோன்றவில்லை. திராவிட இயக்கத்தின் சிறந்த கொள்கைகளை தக்க வைத்துக்கொள்ள அதில் படிந்துள்ள சிறு சிறு அழுக்குகளை அகற்றிக்கொள்ளச் சொல்வதே இது மாதிரியான படங்களின் வேலை. மிகச் சிறந்த இனக் கொள்கை, மிகச் சிறந்த மொழிக் கொள்கைகளைக் கொண்டவை திராவிட கட்சிகள். அந்தக் கொள்கைகள் சிறு சிறு தவறுகளால் அழிந்துவிடக்கூடாது. யாருமே எதிர்க்கக் கூடாது என்று சொல்லாதீர்கள், அழுக்கு இருந்தால் சொல்லத்தான் செய்வார்கள், அதை திருத்திக்கொள்ளுங்கள். எதிரிகள் மிக அற்பமான காரணங்களைக் கூறி சிறந்த கொள்கைகளை வீழ்த்தி விடுவான் என பயப்படாதீர்கள், அதற்கு பதில் அந்தத் தவறுகளை திருத்திக்கொண்டு, கொள்கைகளை தாங்கிப் பிடியுங்கள்.



படத்தில் இலவசங்களை தூக்கி நெருப்பில் போடும் காட்சி அதிக அளவில் பேசப்படுகிறது, நீங்களும் இதை நியாயப்படுத்துகிறீர்கள், இது பற்றி?

முருகதாஸின் எண்ணங்கள் சரியென்றுதான் எனக்கும் தோன்றுகிறது. இலவசங்கள் கொடுக்கும் நிலைக்கு மக்களை தள்ளியது அரசே. உங்களின் மதுபானக் கடைகள் 22 ஆயிரம் கோடி வருவாய் எப்படி ஈட்டுகிறது? 500 ரூபாய் சம்பளத்துடன் வீட்டுக்குச் செல்ல வேண்டிய ஒரு கொத்தனார் வெறும் 100 ரூபாயுடம் செல்கிறான். இப்படி அவனை ஏழையாக்கிவிட்டு, பின் அவன் மனைவிக்கு இலவசமாக மிக்சியும், கிரைண்டரும் தருகிறீர்கள். அதற்கு பதில் டாஸ்மாக்கை மூடினால் அந்தப் பணம் மூலம் அவனால் அந்த இரண்டையும் வாங்க முடியும். இது நல்ல அரசாக இருந்தால், மக்கள் தங்களை சுயமாக காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு வசதிகளையும், அதற்கான கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். பேருந்துகட்டணத்தை உயர்த்தி, இலவச பஸ் பாஸ் தருவது என்பது, ஒரு குடும்பத்தில் உள்ள ஆறு பேரின் தலையில் சுமையை ஏற்றி அதில் ஒருவருக்கு சலுகை தருவது போல் உள்ளது. 3 பேருந்து வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் கூட வசதியாக இருக்கும் போது, ஆயிரக்கணக்கில் பேருந்து வைத்துள்ள அரசாங்கம் ஏன் நஷ்டத்தில் செல்கிறது. காரணம், அதில் நடைபெறும் ஊழலும், தவறான நடைமுறையும் தான். உதிரிபாகங்கள் முதல் டயர்கள் வரை புதிது என கூறி பழையவற்றை போடுகிறார்கள். பின் ஏன் நஷ்டத்தில் போகாது? இதுபோன்ற லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க வந்த 'சர்கார்' படம், அதனை சிறப்பாக செய்துள்ளது.100 டி.எம்.சி நீர் கர்நாடக வெள்ளத்தின் பொழுது வந்தது. அது கடைமடை பகுதிக்குச் செல்லாமலே கடலுக்குச் சென்று கலந்துவிட்டது. இதற்குக் காரணம், இந்த அரசாங்கம் தடுப்பணை கட்டவில்லை, நீர்ப்பாதைகளை தூர்வாரவில்லை. இதையெல்லாம் செய்யாமல் அவர்களை ஏழையாக்கிவிட்டால், அவர்களுக்கு இலவச அரிசிதான் கொடுக்க வேண்டும். வாழ்வாதாரத்திற்குத் தேவையான விஷயங்களை சரியாக செய்தால் இலவசங்கள் இல்லாமலேயே அவன் வாழ்க்கை முன்னேறும்.

மேலும்

நிகழ்கால அரசியல் பற்றி விஜயின் கருத்து என்ன?

மத்திய அரசை விமர்சிக்கும் ஒரு காட்சியோ, வசனமோ இடம்பெறவில்லையே?


உள்ளிட்ட இன்னும் சில கேள்விகளுக்கு பழ.கருப்பையாவின் பதிலைப் படிக்க க்ளிக் செய்யுங்கள்

சர்கார் படத்தில் மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்... - பழ.கருப்பையா பேட்டி

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT