Advertisment

“ பழனிசாமிதான் அந்த உண்மையான சார்” - பதிலடி கொடுத்த பழ.செல்வகுமார்

Pazha Selvakumar interview

‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க. சுற்றுச் சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் பழ.செல்வகுமார், நடப்பாண்டில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தின்போது ஆளுநர் வெளிநடப்பு செய்தது குறித்தும் யார் அந்த சார்? என அ.தி.மு.க.வினர் பேட்ஜ் அணிந்து வந்தது குறித்தும் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

Advertisment

ஆளுநர் ஆர்.என்.ரவி. செய்தது திட்டமிட்ட நிகழ்வு. கடந்தாண்டு என்ன செய்தாரோ அதையேதான் இந்தாண்டும் செய்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தமிழர்கள் தேசிய கீதத்தை அவமானப்படுத்துகிறார்கள் என மிகைப்படுத்திக் காட்ட நினைக்கிறார். அதோடு அவர், தமிழர்களுக்கு தேசப்பற்று இல்லை என ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிராக தமிழ்நாடு செயல்படுகிறது என்ற தோற்றத்தைக் காண்பிக்க முயற்சி செய்கிறார். கடந்த கால நாகாஅமைதி பேச்சு வார்த்தையின்போது அங்குள்ள அரசுக்கும் ஒரு குழுவுக்கும் இடையான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு தரப்பு நியாயத்தையும் கேட்டறிந்து ஒரு பொதுவான அறிக்கை தயார் செய்தனர். ஆர்.என்.ரவி அந்த அறிக்கையில் பேச்சுவார்த்தைக்கு மாறாகத் திருத்தி கையெழுத்திட்டு ஒரு அறமற்ற செயலை செய்திருந்தார். அதுமட்டுமல்லாது இப்போது தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் ஆர்.என்.ரவிக்கு ரூ.9 கோடிக்கு மேல் செலவு செய்யப்படுகிறது. அவர் சாப்பாடு, தங்கும் பங்களா, காருக்கு போடும் டீசல் என அனைத்திற்கான செலவும் தமிழ்நாடு கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான செயல்களைச் செய்து வருகிறார்.

Advertisment

பொள்ளாச்சி வழக்கில் அ.தி.மு.க.-வைச் சேர்ந்த வேலுமணிக்கு தொடர்பு இருக்கிறது என்று பேசப்பட்டது, அதே போல் அக்கட்சியில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது ஒரு நடிகை தொடர்ச்சியாகப் பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றினார் என சட்டமன்றம் வரை சென்று புகார் கொடுத்தது, இது போன்ற குற்றப் பின்னணியில் இருப்பவர்களை கட்சி பொறுப்பில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் அந்த உண்மையான சார். அ.தி.மு.க.வினர் சொல்வதுபோல் நீதி கிடைக்கும்வரை நாங்களும் விடமாட்டோம். மலேசியாவில் இருந்து மணிகண்டன் மீது புகார் தெரிவித்த பெண்ணுக்கும் ராயபுரத்தில் உள்ள சிந்துவுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் மத்தியில் இருந்து ஒரு குழு அனுப்பினார்கள். அந்த குழு விசாரித்ததை தமிழ்நாடு காவல்துறையிடம் தெரிவிக்காமல் நேரடியாக ஆளுநர் மாளிகை சென்று ஆர்.என்.ரவியைப் பார்த்து இதில் அரசை எப்படி சம்பந்தப்படுத்துவது என்று தெரியாமல் ஆளுநரிடம் ஓரு பேச்சு வார்த்தை நடத்திவிட்டுச் சென்றதாகத்தான் நான் பார்க்கிறேன். இந்த வழக்கு குறித்த நேர்மையான விசாரணை ஒருபக்கம் நடக்கும்போது, இதைப் பேசுபொருளாக மாற்ற வேண்டும் என ஒரு சிலர் வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். நகலை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். இதில் நீதிபதி தமிழ்நாடு அரசு ரூ.25 லட்சம் அபராதம் போட்டுவிட்டார் என்று தவறான தகவலைப் பரப்புகின்றனர். ஆனால் நீதிபதி, அந்த தொகையை எஃப்.ஐ.ஆர். லீக் ஆகக் காரணமாக இருந்தவர்களிடம்தான் வசூல் செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

நான் என்ன கேட்கிறேன் என்றால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக லீக் ஆனது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மத்திய அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ள வேண்டுமா? இல்லை எஃப்.ஐ.ஆர். நகலை பொது வெளிப்படுத்திய ஊடகங்களிடம் பணத்தை வாங்க வேண்டுமா? இல்லையென்றால் அந்த நகலை இஞ்ச் பை இஞ்சாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் படித்த பா.ஜ.க. மாநில தலைவர் பணத்தைத் தருவாரா? யாரிடம் வசூல் செய்ய வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை பல குழப்பங்களை ஆரம்பத்தில் கொண்டுவந்துவிட்டனர். இந்த வழக்கு பேசுபொருளாக ஆக மூலக்காரணமே அந்த எஃப்.ஐ.ஆர். நகல் பொதுவெளிக்கு வந்ததுதான். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதேபோல் பொதுவெளியில் எஃப்.ஐ.ஆரை படித்ததற்காக பா.ஜ.க. மாநிலத் தலைவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

admk eps governor tnassembly
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe