Advertisment

ராகுல் காந்தி வழக்கு கடந்து வந்த பாதை! 

The path taken by the Rahul Gandhi case!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கர்நாடகா மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரைவிமர்சித்த அவர், "எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று பேசியிருந்தார். இதற்கு, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்னேஷ் குமார், ‘மோடி சமூகத்தை ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டார்’ என குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற வந்த வழக்கில் சூரத் நீதிமன்றம், இந்த ஆண்டு(2023) மார்ச் மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், அவர் மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசத்தையும் சூரத் நீதிமன்றம் வழங்கியது.

Advertisment

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதன் பின்னர், சூரத் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து சிறைத் தண்டனைக்கு தடை விதிக்குமாறு, தனக்கு ஜாமீன் வழங்கிய சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல் காந்தியின் சிறைத் தண்டனைக்குத்தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதையடுத்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி ராகுல் காந்தி இரண்டாவது மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி ‘ராகுல் காந்திக்கு சூரத் உயர்நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை சரியானது தான். மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள், பொது வெளியில் இதுபோன்று அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. அதனால், இந்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது’ எனக் கூறி ராகுல் காந்தியின் மனுவைத்தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், அவதூறு வழக்கை தொடர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ பூர்னேஷ் குமாருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பா.ஜ.க எம்.எல்.ஏ பூர்னேஷ் குமார், உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல், அவரது மேல்முறையீட்டுமனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். அதே சமயம் தன் மீது உள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் அளித்த அந்த மனுவில், “கடந்த ஜூலை 7 ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காவிட்டால், பேச்சுரிமை, கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பது போலாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்ஹாமற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். அவர் வாதத்தில், “ராகுல் காந்தி தற்போது கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். குஜராத் உயர்நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் கடந்த 111 நாட்களாக அவரால் எம்.பி. பணிகளை சரிவர செய்ய முடியவில்லை. மேலும், அந்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கக் கூடும். மக்களவை உறுப்பினர் பதவி தகுதியிழப்பால் அவரால் கடந்த முறைநடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் அவர் பங்கேற்க முடியவில்லை. எனவே, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத்தடை விதிக்க கோரிக்கை வைக்கிறேன்” என்று வாதாடினார்.

இதற்குப் பதில் அளித்த பூர்னேஷ் குமார் சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “அந்த மொத்தப் பேச்சும் 50 நிமிடங்கள் நீடித்தன. தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களில் அதற்கான ஆதாரங்களும் வீடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. அதில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், அவதூறு வழக்கில் தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் சூரத் நீதிமன்றம் கூறவில்லை. தண்டனை விதிக்கப்பட்டதால் தனிநபர் மட்டுமின்றி, தேர்ந்தெடுத்த தொகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதாகத்தீர்ப்பளித்துள்ளார்கள்.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெறும் மழைக்காலக் கூட்டத் தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் வருகிற மக்களவைத்தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

modi Gujarat
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe