Advertisment

OPS மகன்கள் இடையே யுத்தம்... தம்பிக்கு அனுபவமில்லை என அண்ணன் ஆதரவாளர்களின் கருத்தால் பரபரப்பு!

opr-ops-pradeep

Advertisment

அப்பாவைப் போலவோ, அண்ணனைப் போலவோ அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஆன்மிகமும், ரியல் எஸ்டேட் தொழிலுமே முதன்மையானது என்றிருந்தார் ஓ.பி.எஸ்.சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப். இப்போது அண்ணனுக்குப் போட்டியாக தம்பியும் இறங்கியிருப்பதால்தேனி மாவட்ட அ.தி.மு.க.-வில் பரபரப்புபற்றிக்கொண்டிருக்கிறது.

கரோனா நிவாரண உதவிகளை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதியில் இருக்கும் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் வழங்கியதுடன் மட்டுமல்லாமல், கரோனா நிவாரண நிதியாக தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடியை நிதியாக முதல்வருக்கு அனுப்பி எடப்பாடியிடமே பாராட்டைப் பெற்றிருக்கிறார் ஜெயபிரதீப். இவரின் இந்தத் திடீர் அரசியல் விஜயம் குறித்து மாவட்ட பொறுப்பிலுள்ள சில ர.ரக்கள் நம்மிடம் பேசியபோது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முரசொலியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், திருப்பூரில் ஜெயபிரதீப் வீடு கட்டி ரோபோக்களை வேலைக்கு வைத்திருக்கிறார் என்றும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசு கட்டிடத்தில் கம்பெனி நடத்துகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கண்டு டென்ஷன் அடைந்த ஜெய பிரதீப், "ஸ்டாலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், ரோபோக்கள் எதுவுமில்லை, சொந்தக் கட்டிடத்தில் தான் கம்பெனி செயல்படுகிறது. யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது'' என்றும் ஆடியோ வாய்ஸ் மூலம் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்து, அரசியலில் அச்சாரம் போட்டார்.

தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சையதுகான், கட்சிக்காரர்களைச் சரிவர மதிப்பது கிடையாது. கட்சியையும் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே துணை முதல்வர் ஓ.பி.எஸ். நான்கு தொகுதிகளில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 3 ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களைப்போட்டு கட்சியை வளர்த்து வருகிறார். அதுபோல் தேனி, போடி ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறார். மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கப் போகிறார். சையதுகான் ஒரு பகுதிக்கு மாவட்டச் செயலாளராகவும் மற்றொரு பகுதிக்கு இளையமகன் ஜெய பிரதீப்பை மாவட்டச் செயலாளராகவும் போடப்போகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

Advertisment

கட்சியில் பலர் இருக்க, ஜெயபிரதீப்பை முன்னிலைப் படுத்துவதை எதிர்த்து, நாங்களும் ஓ.பி.எஸ்.சிடம் நேரடியாகவே முறையிட்டு இருக்கிறோம்'' என்றனர் ஆதரவாளர்கள்.

மேலும், சிறுபான்மைச்சமூகத்தைச் சேர்ந்த சையதுகானை மாவட்ட செயலாளராக போட்டு இருந்தும் கூட, கடந்த எம்.பி. தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் முஸ்லிம் ஓட்டுகள் விழவில்லை. முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக எம்.பி. ஓ.பி.ஆர் (ரவீந்திரநாத் குமார்) குரல் கொடுத்தார் என்பதற்காக கம்பம் சென்ற ஓ.பி.ஆரை முஸ்லிம்கள் பலர் காரை தடுத்து நிறுத்தித் தாக்கினார்கள். அதுபற்றி மாவட்டம் முறையிட்டும் கூட முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்க தலைமை முடிவுசெய்து இருப்பதன் மூலம் அந்தப் பதவியை எனக்குத் தர வேண்டும் எனக்கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், எடப்பாடி வரைகூட மோதி வருகிறார். ஏற்கனவே துணை முதல்வரை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்த ஜக்கையன் இப்ப பதவிக்காக பின்னாடியே ஓடி வருகிறார்.

இருந்தாலும் ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆக இருப்பதால் தொகுதி மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். நல்லது கெட்டதில் கலந்து கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட ஓ.பி.ஆரை மாவட்டச் செயலாளராக போட்டால்தான் கட்சியை வளர்க்க முடியும். அதைத்தான் ஓ.பி.ஆரும் விரும்புகிறார். ஏற்கனவே ஆறு தொகுதிகளைக் கொண்ட பிற மாவட்டங்களை இரண்டாகப் பிரித்துப் பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளே இருப்பதால் பிரிக்க வாய்ப்பில்லை. அதனால் ஏற்கனவே இருக்கக் கூடிய மாவட்டச்செயலாளர் சையதுகானை மாற்றிவிட்டு எம்.பி. ஓ.பி.ஆரை மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டுமே தவிர, அரசியல் அனுபவம் இல்லாத அவருடைய தம்பி ஜெயபிரதீப் எல்லாம் போடக் கூடாது’என்கிறார்கள் ஒன்றிய பொறுப்பிலுள்ள ஓ.பி.ஆர் ஆதரவாளர்கள் சிலர்.

http://onelink.to/nknapp

"ரவீந்திரநாத்குமாருக்கு எம்.பி. சீட் கொடுக்கும் போதே ஜெயபிரதீப் பையும் அரசியலில் இறக்கி பதவி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு ஏற்கனவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திடீரென அரசியல் களத்தில் குதித்த ஜெயபிரதீப்புக்கு மாவட்டச் செயலாளராக வேண்டும் என்ற ஆசையும் இருந்து வருகிறது. அதுபோல் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யாக இருந்தாலும் கூட, மாவட்டச் செயலாளராக வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருக்கிறது'' என்கிறார்கள்.

இப்படி ஒரே பதவிக்கு அண்ணன் தம்பிக்கு இடையே போட்டி வெடித்திருப்பதால் அ.தி.மு.க.-வில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

Theni aiadmk op ravindranath ops
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe