Skip to main content

இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்! 

இந்த உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு பெண் ஒடுக்குமுறையைச் சந்தித்துக் கொண்டுதான் இருப்பாள். அதனால்தானோ என்னவோ பெண்களை ‘சர்வதேச தலித்’துகள் என்று பலரும் சொல்கின்றனர். இது அவமானக் குறியீடு அல்ல. அது அவர்களுக்கு விதிக்கப்படும் பாகுபாடுகளின் வெளிப்பாடு.



அந்தவகையில், இந்து ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட பார்சி பெண், தனது பெற்றோர்களின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்த, வால்சாத் பார்சி அஞ்சுமான் என்ற பார்சி அறக்கட்டளை அனுமதி வழங்க மறுத்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் கூர்லோக் எம். குப்தா.

தனக்கு வழங்கப்பட வேண்டிய தார்மீக உரிமையை மீட்டெடுக்க, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உடன் உச்சநீதிமன்ற வாசலை நாடியிருக்கிறார் கூர்லோக். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கூர்லோக்கிற்கு ஆதரவாக வாதிட்ட இந்திரா ஜெய்சிங், திருமணம் ஆனபிறகும் ஒரு பெண் தனது அடையாளத்தை, கண்ணியத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் உரிமைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

கூர்லோக்கின் இந்த வழக்கை எதிர்த்து வாதிட்ட பார்சி அறக்கட்டளை, நீதிபதிகளின் தொடர் வாதங்களால் பின்வாங்கியது. இந்த வழக்கைப் பொருத்தவரை, நீதிபதிகள் கூறிய ஒவ்வொரு கருத்தும் கவனிக்கத்தக்கவை.

வழக்கின் முதல் விசாரணையில் இருந்த நீதிபதி தீபக் மிஷ்ரா, ‘ஒரு பெண் தனக்கு விருப்பமான ஆணைத் திருமணம் செய்துகொள்வது என்பது தன்னை அடமானம் வைத்தல் என்றாகாது. எப்போதும் பெண்ணுக்கு என்ற தனித்த பண்புநலன்களும், சமூக அந்தஸ்துகளும் இருக்கின்றன. குறிப்பாக பிடித்த மத அடையாளங்களை எப்போதும் பின்பற்றலாம்’ என சிறப்பு திருமண சட்டத்தைக் குறிப்பிட்டு கூறினார்.



சிறப்பு திருமண சட்டம் 1954ஐப் பொருத்தமட்டில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜோடி தங்கள் திருமணத்திற்குப் பின்னும், தங்கள் சொந்த மத அடையாளங்களோடு வாழலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது.

இதையடுத்து, பார்சி அறக்கட்டளை கூர்லோக் எம். குப்தா தன் பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தமது மத குருக்களிடம் ஆலோசித்த பின்பே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மீண்டும் இதுபோலத் தொடராமல் இருப்பதற்காக இந்த அனுமதி இடைக்கால அல்லது தற்காலிகமானது மட்டுமே என்றும் அந்த அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், அந்த அமர்வில் இருக்கும் நீதிபதிகள் சிறப்பு திருமண சட்டம் 1954ன் படி இந்த வழக்கில் இருக்கும் நீண்டகால பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள் என தெரிவித்துள்ளது.

இதுமாதிரியான வழக்குகள் இந்திய நீதிமன்றங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. பன்முக கலாச்சாரங்களையும், பண்பாட்டுப் பிரிவுகளையும் கொண்ட இந்த நாட்டில் பெண்களை மட்டும் அடக்கி, ஒடுக்கியே வைத்திருக்கும் கொடுமைகள் இங்கு தொடர்கதைகளாகவே இருக்கின்றன.

இங்கு கலாச்சாரப் பெருமைகளாக சொல்லப்படும் எந்த காரணியும், பெண்களை தனி படிநிலையில் வைத்துப் பார்க்கும் அளவுகோலை இயல்பாகவே ஆண்களிடம் கொடுத்து வைத்திருக்கிறது. அதனால்தான் எந்த மதமானாலும், அதில் பெண்களை மட்டும் பத்திரப்படுத்துகிறோம் என்கிற பெயரில் அவர்களின் உரிமைகளை தெரிந்தே நசுக்கிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம்.



ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆணைத் திருமணம் செய்துகொள்ளவும், பிடித்த மதத்தை தேர்வுசெய்து வாழவும் இருக்கவேண்டிய இயல்பான உரிமைகள் அவர்களுக்கானதாகவே கொடுக்கப்படவேண்டும். இல்லையென்றால், முத்தலாக் பெயரிலும், ஹதியாக்களாகவும், கூர்லோக்குகளாகவும் பெண்கள் நீதிமன்ற வாசலில் நீதிகேட்டு நின்றுகொண்டுதான் இருப்பார்கள்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்