ADVERTISEMENT

தோற்க போகிற அதிமுகவுக்கு முதல்வர் வேட்பாளர் அறிவித்ததுதான் பன்னீர்செல்வத்தின் சாமர்த்தியம் - ஸ்டாலின் கிண்டல்!

12:39 PM Apr 02, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT



தமிழக தேர்தல்களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அந்த வகையில், போடி தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் பன்னீர்செல்வம் இங்கே பிரச்சாரம் செய்தார். தோல்வி பயத்தில் தற்போது எதை எதையோ உளறிக்கொண்டிருக்கிறார். அவர் தற்போது ஆத்திரத்தின் உச்சாணிக்கு சென்றுள்ளார். அதாவது, தோல்வி பயத்தில் என்ன பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று தெரியாமல், எதையாவது உளறிக்கொண்டிருக்கிறார். அடுத்து, முதல்வர் அவர்களை பதவிக்காக ஊர்ந்து சென்றார், தவழ்ந்து சென்றார் என்று கூறினோம். இதை எதையுமே நாம் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. இது அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. உடனே அவர், ‘நான் என்ன பாம்பா, பல்லி ஊர்ந்து செல்ல’ என்று கேட்டார். பாம்பு, பல்லியை விட துரோகத்துக்குத்தான் விஷம் அதிகம். இது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அவர், தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதே போடியில் முதல்வர் பேசியுள்ளார். அப்போது ஓபிஎஸ்ஸை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி தாக்கிவிட்டு சென்றுள்ளார். என்ன பேசினார் என்றால், ‘ஓபிஎஸ் இந்த மாவட்டத்துக்கு இறைவன் கொடுத்த கொடை’ என்று பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ஒரு மாதத்துக்கு முன்னாள் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

அதாவது, பன்னீர் செல்வத்தை இந்த மாவட்டத்தின் கொடை என்று சொல்லிவிட்டு, நீங்கள் இங்கேயே இருங்கள் சென்னை வந்துவிடாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதைக் கூட புரிந்துகொள்ள தெரியாமல் ஓபிஎஸ் தலையாட்டிக் கொண்டு சென்றுள்ளார். மேலும் அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அப்படி பார்த்தால் முதன்முதலாக யார் துரோகம் செய்தார்கள். ஆட்சிக்கு எதிராக வாக்களித்து யார்? தற்போது ஓபிஎஸ்-ஐ சிலர் தியாகி என்று கூறி வருகிறார்கள். உண்மை என்னவென்று பார்த்தால், அவர் தியாகி அல்ல, பெரிய புத்திசாலி. தோற்கப் போற அதிமுகவுக்கு முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என்று கூறினார் பாருங்கள், அதிலிருந்தே அவரின் புத்திசாலிதனம் தெரிய வரும். தோற்கப்போற கட்சிக்கு வேட்பாளர் அறிவிக்கிறார் என்றால் அவரின் தனித்திறமை தெரிய வருகிறது. அரசியலில் சில பேருக்கு மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் மூன்றுமுறை முதல்வர் பொறுப்பு பன்னீர்செல்வத்தை தேடி வந்தது. இந்தப் பதவியை வைத்து அவர் இந்த மாவட்டத்துக்கு ஏதாவது செய்தாரா? அவரால் யாராவது பயனடைந்துள்ளாரா? அந்தப் பதவியை வைத்து அவர் மட்டும்தான் பயனடைந்துள்ளார்.

மக்களை விடுங்கள், குறைந்தபட்சம் ஜெயலலிதாவுக்காவது உண்மையாக இருந்தாரா என்றால், அவருக்கும் உண்மையாக இல்லை. ஒரு தியான நாடகத்தை நடத்தினார், பதவிக்காக நடத்தினார். தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, தியானம் செய்தார். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் இவர் என்று இந்த தேனி மாவட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? தன்னை ஆளாக்கிய ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்த அவரைஈ இந்த மாவட்டத்தை விட்டு விரட்ட வேண்டுமா இல்லையா? இந்தக் கேள்வியைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன். இன்றைய தினம் இந்து பேப்பரில் பேட்டி ஒன்று பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார். சிறப்பு பேட்டியாக அது தற்போது வெளிவந்துள்ளது. அதில், உள் ஒதுக்கீடு விவகாரம் பற்றி பேசும்போது, அது தற்காலிகமான ஒன்று என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்தச் சட்டம் நிறைவேறியபோது பக்கத்தில் இருந்து வரவேற்றுள்ளார். ஒரு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமாரும் இதே கருத்தைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பேசிய ராமதாஸ் அவர்கள், தான் ஓபிஎஸ் கருத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்றும், ஆனால் முதல்வரிடம் இதுதொடர்பாக பேசியபோது இந்தச் சட்டம் நிரந்தரமானது என்று தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தங்கள் தொகுதிகளில் வெற்றிபெறுவதற்காக அவர்கள் இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT