Advertisment

பள்ளி மாணவர்களுக்கு ‘புது’ த்தேர்வு! -பேரச்சம் வேண்டாம்!

exam

Advertisment

பொதுத்தேர்வுகள் தொடங்கிவிட்டாலே வழக்கம்போல் அச்சமும் குழப்பமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், தற்போது தொடங்கப்பட்டிருப்பது ‘புது’த்தேர்வு என்பதால் பேரச்சத்துடன் இருக்கிறார்கள் மாணவர்கள்-பெற்றோர்களுடன் ஆசிரியர்களும்கூட!

தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்ற விழிப்புணர்வூட்டிவரும் கல்வியாளரும் தனியார் பள்ளி உதவி தலைமை ஆசிரியருமான ஜானகிராமனிடம் நாம் பேசியபோது, “அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Assessment Marks) என்ற புதிய முறையை பொதுத்தேர்வில் கொண்டுவந்துள்ளது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை. இதைக்கண்டுதான், மாணவர்கள் கொஞ்சம் அச்சத்துடன் இருக்கிறார்கள். அதாவது, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு என்பதே தவறானது.

மேல்நிலைக்கல்வி முதலாம் ஆண்டு, மேல்நிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். இதை மறந்து… தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மேல்நிலைக்கல்வியின் முதலாமாண்டு (+1 வகுப்பு) பாடத்தை நடத்தாமல் மேல்நிலைக் கல்வியின் இரண்டாம் ஆண்டு (+2 வகுப்பு) பொதுத்தேர்வுக்கான மாதிரிவகுப்பாகத்தான் நடத்திவந்தன. அதாவது, +1 கல்வியாண்டில் +2 பாடத்தைச்சொல்லிக்கொடுத்து +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? என்ற பயிற்சிக்களமாக பயன்படுத்தி வந்தார்கள்.

Advertisment

இப்படி, முதலாமாண்டு பாடத்தை நடத்தாமல்; படிக்காமல் போனதால்தான் ஐ.ஐ.டி., நீட் உள்ளிட்ட அகில இந்திய போட்டித்தேர்வுகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண் எடுக்கமுடியவில்லை என்றக் குற்றச்சாட்டு கல்வியாளர்கள் மத்தியில் எதிரொலித்தது. அதனால்தான், முதலாம் ஆண்டுக்கும்(+1 வகுப்புக்கும்) பொதுத்தேர்வை கொண்டுவந்தது தமிழக அரசு. தனி தனியாக 1200 மதிப்பெண்கள் என்றிருந்ததை மேல்நிலைக்கல்வியின் முதலாமாண்டுக்கு 600 மதிப்பெண்கள், இரண்டாமாண்டுக்கு 600 மதிப்பெண்கள் என பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், அகமதிப்பீடு மதிப்பெண்கள் என்னும் பெயரில் ஒவ்வொரு பாட ஆசிரியர் கையிலும் 10 மதிப்பெண்கள் உள்ளன. ஆனால், வருகைப் பதிவேடு, ஃபீல்டு ட்ரிப் அசைன்மெண்ட் என பல்வேறு காரணங்களை மையப்படுத்தி இந்த மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. 25 மதிப்பெண்களுக்கு 4 தேர்வுகள் வைக்கப்பட்டு அதில், பெரும் மதிப்பெண்களை 5 மதிப்பெண்ணுக்கு என வகுத்து அதையும் இந்த அகமதிப்பீடு மதிப்பெண்ணில் சேர்ப்பார்கள். இதில், ஒரு பாடத்தில் 1 மதிப்பெண் குறைந்துவிட்டாலும் சென்டம் வாங்கமுடியாது. அதனால், அனைத்துப் பாடங்களிலும் மிக கவனமாக படித்து பொதுத்தேர்வை எழுதினால்தான் சென்டம் வாங்கமுடியும். 85-100 சதவீதம் வருகைப்பதிவேடும் இருந்தால் முழுமையாக கொடுக்கப்படும் 3 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். 80 லிருந்து 85 சதவீதம் வருகைப்பதிவேடு என்றால் மூன்றிலிருந்து 1 மதிப்பெண் குறைந்துவிடும். 75 லிருந்து 80 சதவீத வருகைப்பதிவேடு என்றால் 1 மதிப்பெண்தான் கிடைக்கும். இதனாலும் சென்டம் எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம்”என்கிறார் அவர்.

prabha kalvimani

இதுகுறித்து பிரபல கல்வியாளர் பிரபா கல்விமணி நம்மிடம், “40 வருடங்களுக்கு முன்பே மேல்நிலைக்கல்வி முதலாமாண்டுக்கு பொதுத்தேர்வு வைத்திருக்கவேண்டும். தாமதமாக வந்திருந்தாலும் மாணவர்களுக்கு பயனுள்ள தேர்வு. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் மதிப்பெண்கள் தலா 50 என இருக்கும். அதில், பெரும்பாலும் மதிப்பெண்களை குறைக்கமாட்டார்கள் ஆசிரியர்கள். அதேபோலத்தான், ஆசிரியர்கள் அவ்வளவு சீக்கிரம் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை குறைக்கமாட்டார்கள். இதனால், சென்டம் வாங்குவது குறைந்துவிடுமோ என்று அச்சப்படத்தேவையில்லை. அதேபோல், ப்ளூ ப்ரிண்ட் கொடுக்கப்படவில்லை என்ற ஒரு சில மாணவர்கள் பெற்றோர்களின் குற்றச்சாட்டு தவறானது. ப்ளூ ப்ரிண்ட் எதற்கு? ஒரு புத்தகத்தை கொடுத்து அந்த புத்தகத்திலுள்ள அனைத்தையும் படித்துவிட்டீர்களா? என்பதை அறிவிதற்குத்தான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அப்படியிருக்கும்போது, ப்ளூ ப்ரிண்ட் என்கிற பெயரில் இந்தமாதிரியான கேள்விகள்தான் வரும். இதை மட்டும் படித்தால் போதும் என்றால் அப்படியே மக்கப் செய்யும் மக்குகளாகத்தான் நமது மாணவர்கள் மாறுவார்கள். அதனால், பாடத்தை புரிந்துபடித்து தேர்வை எதிர்கொள்ளவேண்டும். இன்னும் பல மாற்றங்களை கல்வியில் கொண்டுவந்து சி.பி.எஸ்.சி. மாணவர்களைவிட நமது மாணவர்கள் திறமையானவர்கள் என்பதை உருவாக்கவேண்டும்” என்றார்.

Jayaprakash Gandhi

பிரபல பேராசிரியர் ஜெயபிரகாஷ் காந்தி நம்மிடம், “ஐ.ஐ.டி., நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக தயார் ஆகிறவர்கள் மேல்நிலைக்கல்வியின் முதலாமாண்டு பாடத்தையும் கஷ்டப்பட்டு படித்து பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் படிக்கப்போகும் மாணவர்கள் ஏன் அவர்களைப்போல கஷ்டப்படவேண்டும் என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் சிலர். +1 என்பது முற்பாதி, +2 என்பது பிற்பாதி. அதனால், இடைவேளைக்குப்பிறகு ஒரு சினிமாவை பார்த்தால் புரியுமா? இதையெல்லாம்விட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட யு.பி.எஸ்.சி. தேர்வுகள், குரூப்-1, குரூப்-2 உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் என எழுதும்போது ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மாணவர்களுக்கும் +1 பொதுத்தேர்வு எழுதியது பயனுள்ளதாக இருக்கும். எந்த ஒரு மாற்றமும் இரண்டு பேட்சுகளுக்கு குழப்பமும் அச்சமும் வரத்தான் செய்யும். அடுத்தவருடம் +1 பாடத்திட்டம் வேறு மாறுகிறது. பொறியியல் கல்லூரிகளில் பாடத்திட்டம் மாறுவதால் தொடர்ந்து இதுபோன்ற ஓரிண்டேஷன் புரோகிராம்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்குத்தான், ஆசிரியர்களை வைத்து அரசாங்கம் ஒவ்வொரு பள்ளியிலும் (Orientation Programe ) விளக்கக்கூட்டம் நடத்தவேண்டும்; நடத்தியிருக்கவேண்டும்”என்கிறார் கோரிக்கையாக.

கல்வித்துறையின் மாற்றம்… மாணவர்களுக்கு முன்னேற்றமாக கருதி தேர்வை எதிர்கொள்வோம்! வெற்றிபெருவோம்!

exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe