Skip to main content

கிருஸ்துவர்களுக்கு போப் போல இந்துக்களுக்கு நித்தியானந்தா இருக்க ஆசைபடுகிறார் - பழ.கருப்பையா பேச்சு!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் சர்ச்சை நிலவி வரும் சூழலில்,  தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

சுவாமி நித்தியானந்தா  கைலாசா என்ற புது நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். அவர் மீது வழக்கெல்லாம் நடைபெற்று வருகின்றது. தன்னுடைய நாட்டிற்கு இந்து மதத்தினர் வருகை தர வேண்டும் என்று கூறுகிறார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சாமியார் என்பவர் யார். மதிய சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்று தெரியாதவர் தான் துறவி, அதற்கு வழியில்லாதவர் தான் உண்மையான சாமியார். இவர்கள் எல்லாம் சாமியாரா? புத்தர் ஒரு உண்மையான சாமியார். தன்னுடைய இரண்டு கைகளை நீட்டி நிற்பார். என்ன கொடுக்கிறார்களோ அதை மறுக்காமல் வாங்குவார். அவர்தான் உண்மையான துறவி. அதற்கு பிறகுதான் துறவு இந்தியாவில் பெருமை பெற்றது. இப்போது அவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இவ்வளவு பணம் வருகின்றது. எப்படி இவர்கள் ராஜபோகமாக வாழ்கிறார்கள். அதுவும் சில பேர் பஞ்சாயத்துக்கெல்லாம் செல்கிறார்கள். போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டிக்கொள்வது மட்டும்தான் தோல் ஆடையே தவிர இவர்களிடம் எந்த ஒழுக்கமும் இல்லை. இந்த கோயமுத்தூரில் இருக்கிறாரே ஜக்கி வாசுதேவ் என்ற ஒருவர், அவரிடம் என்ன கொஞ்ச பணமா இருக்கிறது. அதாவது அவர் அனைத்திற்கு ஆசைபடு என்று கூறுகிறார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறியதற்கு மாறாக அனைத்திற்கும் ஆசைபடு என்கிறார். எல்லாம் விதி, அவரை நம்பியும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஊழல் மந்திரிகளுக்கெல்லாம் இவர் ஆதரவு தெரிவிக்கிறார். சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். பணம் வைத்திருப்பவரெல்லாம் ஒரு சாமியா?

சனாதன தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளதாக ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா ஆகியோர் கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கைலாசா நாட்டை பற்றி உங்களின் கருத்தென்ன? 

நான் இந்துவே இல்லை என்று சொல்கிறேன், அப்புறம் என்ன சனாதன தர்மம். எங்களை மேல்நிலையில் உள்ளவர்கள் அடிமைப் படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டவைகளாகத்தான் நாங்கள் அதனை கருதுகிறோம். கைலாசா நாட்டை பற்றி கருத்து கேட்கிறீர்கள். பெண்களை திரட்டி வைத்துக்கொண்டு பல வேலைகளை அவர் செய்து வருகிறார். அவர் ஒரு புதிய வேலைகளை செய்ய பார்க்கிறார். அதாவது கிருஸ்துவர்களுக்கு ரோமாபுரியில் தலைவர் இருப்பதை போல், இந்துக்களுக்கு எல்லாம் தன்னை தலைவராக முன்னிறுத்த பார்க்கிறார். அதை சங்கராச்சாரியார்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவரை சூத்திரன் என்று ஒதுக்கிவிட்டு போய்விட மாட்டார்களா? இவரை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று நித்தியானந்தா நினைக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்றால் கிருஸ்துவர்களுக்கு இருக்கின்ற மாதிரி நான்தான் போப் என்று சொல்ல ஆசைப்படுகிறார். ஆனால் சங்கர மடத்தில் இருப்பவர்கள் இவரை தொட கூட மட்டார்கள். இதுதான் நிஜமான நிலை. ஆகவே அவரின் எண்ணம் எப்போதும் நிறைவேற போவதில்லை.