Advertisment

எஸ்.கே.எம். மயிலானந்தனுக்குப் பத்மபூஷன் விருது அறிவிப்பு!

skm-mayilanthan

எஸ்.கே.எம். மயிலானந்தன் ஒரு சிறந்த தொழில் முனைவர், சமூக மற்றும் நுகர்வோர் ஆர்வலர் ஆவார். எஸ்.கே.எம். குழும நிறுவனங்களை நிறுவி அதன் தலைவராக உள்ளார். 2013ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது இவராற்றிய சமூகப்பணிகளுக்காக வழங்கப்பட்டது. 202ஆம் ஆண்டு டெல்லி என்.சி.ஆர். மற்றும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் அவரது சமூக சேவைகளைப் பாராட்டி அவருக்குப் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் ஓர் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்த  மயிலானந்தன்  தனது பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.

Advertisment

அவர் 1983ஆம் ஆண்டில் கோழிப்பண்ணையாளர்கள் நலச் சங்கத்தைத் தொடங்கி அதன் நிறுவனத் தலைவரானார். தற்போதைய வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு நவீன கிராமப்புற சந்தைப்படுத்தல் பண்டமாற்று முறையை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார். கிராமப்புறங்களில் உள்ள படித்த மற்றும் படிக்காத மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அவர் முன்னோடியாக செயல்பட்டு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளை வழங்கினார். சந்தை மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விவசாயிகளின் பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்யவும்,கோழிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் கோழிப்பண்ணையாளர்களுக்கு அதைப் பற்றி கல்வி புகட்டவும் 150க்கு மேற்பட்ட கருத்தரங்குகளையும், விவசாயிகளின் கூட்டங்களையும் அவர் ஏற்பாடு செய்தார். 

Advertisment

அவர் கோழி நண்பன் என்ற கோழி வளர்ப்பு குறித்த மாத இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் ஆனார். குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிக்கத் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்தில் முட்டையையும் கொண்டு வந்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். மயிலானந்தன் ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த மையத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளில் துணை மையங்களும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் மன்றங்களும் உள்ளன. இந்த மையம் நுகர்வோரின் பயன்பாட்டிற்காக “குடிமக்கள் சாசனம்”குறித்த புத்தகம் வெளியிட்டுள்ளது. 

skm-mayilanthan-1

ஈரோடு பாதுகாப்பு மையம் ஆற்றிய சேவைகளைப் பாராட்டி இந்திய அரசு 1993ஆம் ஆண்டு“தேசிய சிறந்த நுகர்வோர் பாதுகாப்பு மையம்”விருது மற்றும் ரூ.50000 பரிசுத் தொகையையும் வழங்கியது. மயிலானந்தன் 1999ஆம் ஆண்டு சாமிநாதபுரத்தில் ராஜீவ் நகர், காந்திநகர் ஆகிய இரண்டு தலித் கிராமங்களைத் தத்தெடுத்து அவ்விரு கிராமங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுடன் மருத்துவ வசதிகளையும் இலவசமாக இன்று வரை வழங்கிவருகிறார். மேலும் இந்த இரண்டு தலித் குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் திருமணம், பிரசவம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கும் தேவையான நிதியுதவிகளைச் செய்துவருகிறார். அவர் சங்கமம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற்காக எரிவாயு தகனமேடையை அமைத்துள்ளார். 

பெண்கள் அவர்தம் வாழ்வாதாரத்தை தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் தொழிற்பயிற்சிகளான தையல், அழகுக்கலை மற்றும் கேக் பேக்கிங் போன்ற பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறார். மயிலானந்தன் கடந்த 37 ஆண்டுகளாக உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு “யோகமும் மனித மாண்பும்” என்ற பெயரில் பட்டப்படிப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் மாணவர் சமூகத்திற்கும் மதிப்பு அடிப்படையிலான பண்பாட்டுக் கல்வியைப் பரப்பி வருகிறது. இது 34 பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 251410 மாணவர்கள் இந்தப் படிப்புகளைப் பயின்றுள்ளனர். உலக சமுதாய சேவா சங்கம் மூலம் கிராமங்களை அமைதியான கிராமங்களாக மாற்றும் நோக்குடன்,“கிராம சேவைத் திட்டம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  

padma-award-2026

தமிழ்நாட்டில் 389 கிராமங்களைத் தத்தெடுத்து இதுவரை 1.5 லட்சம் கிராம மக்களுக்கு அவர்கள் இடத்திலேயே இத்திட்டம் மூலம் யோகா மற்றும் தியானம் மற்றும் அறநெறி சார்ந்த பயிற்சிகள்; இலவசமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. யோகா மற்றும் தியானத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மிக்க சேவைக்காக, அவர் இந்திய யோகா சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.மயிலானந்தன் 1992ஆம் ஆண்டில் “பெரியார் நகர் பூங்கா பராமரிப்பு அறக்கட்டளை”யை நிறுவி,பெரியார் நகர் பூங்காவைக் கட்டினார். இவர் தூய்மை மற்றும் பசுமைத் திட்டத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். இப்பணியைப் பாராட்டி “சுற்றுச்சூழல் காவலர் விருது” தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழங்கியது. பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் தேசிய உணர்வு, விழிப்புணர்வு, தேசபக்தி ஆகியவற்றை வளர்க்கவும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை ஊக்குவிக்கவும் 1999ஆம் ஆண்டில் “தேசிய நல விழிப்புணர்வு இயக்கம்” என்ற அமைப்பினை நிறுவினார். 

தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராக, அதன் தொடக்கத்திலிருந்தே அவர் முழு அர்ப்பணிப்புடன் தனது சேவைகளை ஆற்றி வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அமைதிப் பேரணிகள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கங்களை ஏற்பாடு செய்தார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அவர் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2 கோடி நிதியுதவி உலக சமுதாய சேவா சங்கம் மூலம் வழங்கினார். ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளைத் தலைவராக இருந்து இலக்கியவாதிகளை எஸ்.கே.எம். இலக்கிய விருது கொடுத்து ஊக்குவித்து வருகிறார். இது தவிர, நுகர்வோர் மையம் வெயிட்டுவரும்; “நுகர்வோர் காவலன்”என்ற தமிழ் மாத இதழின் ஆசிரியராக 33 ஆண்டுகளாகவும், 37 ஆண்டுகளாக “மனவளக் கலைஞன்”மற்றும் “அன்பொளி”ஆகிய ஆன்மீக மாத இதழ்களின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து வருகிறார்.

central-vista-1

மயிலானந்தன் தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் (8 முறை), தேசியப் பாதுகாப்பு விருதுகள் (2 முறை), விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு விருது (5 முறை), 1978ம் ஆண்டில் இந்திய ஜேசீஸ் அமைப்பின் தேசிய சிறந்த பத்து பிரிவில் சிறந்த இளம் சாதனையாளர் விருது, 2004ஆம் ஆண்டில் ரோட்டரி இன்டர்நேனல் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் தமிழ்நாடு வணிக தனிநபர் பிரிவின் கீழ் சிறந்த வருமான வரி செலுத்துவோர் விருது (2 முறை) உட்படப் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். தற்போது இவருக்குப் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோழிப்பண்ணையாளராகக், கறிக்கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளராக இருந்த எஸ்.கே. மயில்சாமி இருந்த இவரது பெயரை 1996 இல் அமைந்த திமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் தனக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரை எடுத்துவிட்டு புதிய பெயர் வைக்க எஸ்.கே. மயில்சாமி, முதல்வர் கலைஞரிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் பெயரில் மயிலாநந்தன் என முதல்வர் கலைஞர் இவருக்குப் பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Announcement Award Erode padma awards padma bushan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe