Skip to main content

'கலையை வைத்து ஆட்சியை பிடித்தார்கள்... ஆனால் இன்று...' - பா.ரஞ்சித் பேச்சு!

Published on 03/10/2019 | Edited on 04/10/2019

நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த நாடகத் திருவிழா வரும் 6 ஆம் தேதி வரை, 5 நாட்கள்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் நாசர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
 

xh



இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது " மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மக்களின் உரிமைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நாடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது மிக அதிகம். பல பேருக்கு நாடகங்கள் என்றால் தொலைக்காட்சியில் வரும் நாடகங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நான் சிறுவயது முதல் கல்லூரி வரை நாடகங்கள் என்றால் தூர்தர்ஷனில் வரும் நாடகங்கள் என்றுதான் நினைத்திருந்தேன். நான் கல்லூரியில் சேர்ந்து முதல் ஆண்டு படிக்கும்போது ஒரு நாடகத்துக்கான கதையை தயார் செய்து அதில் நடிக்கலாம் என்று முடிவு செய்து என்னுடைய சீனியர் மாணவரிடம் கேட்டேன்.

ஆனால் நீ முதல் ஆண்டில் படித்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் நடிக்கலாம் என்றும், தற்போது அடுத்தவர்களின் நாடகங்களை கூர்ந்து கவனி என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் போட்ட நாடகத்தில் என்னை நடிக்க முடியுமா? என்று கேட்டார்கள். நானும் நடித்தேன். அந்த நாடகம் அசைவுகளையும், உடல் மொழியை அடிப்படையாக வைத்து பின்னப்பட்டவை. அந்த நாடகம் வெளிப்படுத்திய உணர்வுகள் அலாதியானது. உணர்வுப்பூர்வமானது. அத்தகைய ஆற்றல் உடைய இந்த கலையை வளர்க்க நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். கலையை அடிப்படையாக வைத்து ஆட்சிக்கே வந்துள்ளார்கள். எனவே, அதனை அழியாமல் பாதுகாக்க வேண்டும்" என்றார்.