ADVERTISEMENT

ஆக்சிஜன் தட்டுப்பாடு! - மூச்சு முட்டும் தேசம்!

07:43 PM Apr 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தாக்கத்தின் 2-வது அலை வீரியம் எடுத்திருக்கும் நிலையில், பல மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விழிபிதுங்கி நிற்கிறது மருத்துவத்துறை!

இரண்டு நாட்களுக்கு முன்னர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், அடுத்தடுத்து 7 நோயாளிகள் உயிரிழந்தனர். பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன் வினியோகத்தில் ஏற்பட்ட தடையே இதற்குக் காரணம் என, உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை வழக்கம்போல் மறுத்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்த குழு அமைத்துள்ளனர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க் கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில், அடுத்தடுத்து 22 நோயாளிகள், ஆக்சிஜன் தடைபட்டதால் தங்களது ‘மூச்சை’ நிறுத்திக்கொண்டனர். இதனை நாசிக் மாவட்ட கலெக்டர் சுராஜ் மந்திர் உறுதிபடுத்தியிருக்கிறார்.

அதாவது, திரவ நிலையில் லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் ஆக்சிஜன், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ராட்சத சிலிண்டரில் நிரப்பப்படும். அங்கிருந்து மற்றொரு கலனுக்குச் செல்லும்போது, நீர்ம நிலையில் உள்ள ஆக்சிஜன், வாயு நிலைக்கு மாறிவிடும். பின்னர், அவை குழாய் மூலம் மருத்துவமனையின் ஒவ்வொரு வார்டுக்கும் எடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, ஐ.சி.யு. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, இந்தக் குழாய் மூலம் பிராண வாயு வழங்கப்படும். இதில் எங்கேயாவது குழாயில் உடைப்பு ஏற்பட்டால், ஆக்சிஜன் வினியோகம் தடைபடும். அப்படிபட்ட சூழலில், ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருக்கும் சிறிய ரக சிலிண்டர்கள் மூலம், நோயாளிக்கு பிராணவாயு வினியோகிக்கப்படும். இப்போது, சிறிய ரக சிலிண்டர்களின் தேவை அதிகரித்திருப்பதால், பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இப்படித்தான் வேலூரிலும் பிராணவாயு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், ஆக்சிஜன் வினியோகம் தடைபட்டது. இன்று (21-ஆம் தேதி) நாசிக்கில் நடந்ததும் அதேமாதிரி சம்பவம்தான். அதாவது, ராட்சத சிலிண்டரின் அடிப்பாகத்தில் உள்ள வால்வு உடைந்ததால், திரவ நிலையில் உள்ள ஆக்சிஜன் பஞ்சு பொதி போல வெளியேறிவிட்டது.

சரியான தொழில்நுட்ப வல்லுனர்கள் இல்லாத காரணத்தால், பழுதை உடனடியாக சரி செய்யமுடியவில்லை. இதை, வேலூரில் உள்ள மருத்துவக் குழுவினரும் ஒப்புக்கொண்டனர். நாசிக்கிலும் இதே நிலை தான் இன்று (21-ஆம் தேதி) ஏற்பட்டிருக்கிறது. அங்கும் பழுதை சரிபண்ண முடியாமல் ஊழியர்கள் திக்கித் திணறி நிற்பதை, காணொளியில் காண முடிகிறது.

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு?

தமிழகத்தைப் பொறுத்தவரை 7 நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்றன. இவற்றில் 3 நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்கின்றன. பிற நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்கின்றன. கடந்த ஆண்டு கரோனா உச்சத்தில் இருந்த ஜூலை மாதத்தில், ஆக்சிஜன் தேவை 280 மெட்ரிக் டன்னாக இருந்தது, இப்போது நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. எனவே, சராசரியாக 500 மெட்ரிக் டன் தேவைப்படும். அந்த அளவுக்கு இருப்பு உள்ளதாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார்.

ஆனால், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை, தமிழக அரசின் அனுமதியின்றி மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது” என அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதனிடையே, தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் தனியார் நிறுவனம், தற்போது கேரள மாநிலம் பாலக்கோட்டில் இருந்து, சென்னை, திருச்சி, கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு லாரிகள் மூலம் சப்ளை செய்து வருகின்றன.

”ஒரு லாரியில் இருந்து இறக்கப்படும் திரவ ஆக்சிஜனை, ராட்சத சிலிண்டரில் நிரப்பும்போது, நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, 36 மணிநேரத்தில் இருந்து 72 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். அதன் பிறகு, லாரி மூலம் மீண்டும் நிரப்ப வேண்டியதிருக்கும்” என்கிறார், அரசு மருத்துவமனையில் நாம் சந்தித்த லாரி ஓட்டுனர்.

மேலும் அவர் “லாரியை அதிவேகத்தில் ஓட்ட முடியாது. இரவு 12 மணிக்கு பிறகு லாரியை ஓட்டக் கூடாது. ஜிபிஎஸ் கருவி மூலம், ஆக்சிஜன் அனுப்பும் நிறுவனமும் எங்களைக் கண்காணிக்கும். வழித்தடத்தை மாற்றிச் சென்றாலும், உடனே எங்களைக் கூப்பிட்டு எச்சரிப்பார்கள். எல்லா மாநிலத்திலும், தற்போது ஆக்சிஜனுக்கு தேவை இருப்பதால், எங்களுக்கு வினியோகம் செய்வதில் சிரமம் இருக்கிறது” என்றார்.

ஒருபுறம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. மறுபுறம் ஆக்சிஜன் வினியோகத்தில் குளறுபடி.. இன்னொருபுறம் 3 லட்சத்தை நெருங்கிவிட்டது தினசரி கரோனா பாதிப்பு! இப்படி கையறு நிலையில் மூச்சு முட்டி நிற்கிறது, மோடியின் புதிய இந்தியா!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT