ADVERTISEMENT

வாடகை வீடு அவலம்! வீட்டைப் பூட்டிய ஓனர் விரட்டப்பட்ட டாக்டர்!

11:02 PM Sep 18, 2020 | manosoundar

ரோனா சூழலில் வாடகை வீட்டில் வசிக்கும் டாக்டர்கள், நர்ஸுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் நிலை என்ன என்பதற்கு பிரபல மருத்துவர் கருணாநிதி படும்படும் பாடே உதாரணமாக இருக்கிறது. நம்மிடம் விரிவாகப் பேசினார் டாக்டர் கருணாநிதி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

"சென்னை தி.நகர் மங்கேஷ் தெருவிலுள்ள நல்லி அபார்ட்மெண்டில் வாடகைக்கு குடியிருக்கேன். இதன், உரிமையாளர் பார்த்தசாரதி -ராஜீவ் தம்பதி வெளி நாட்டில் இருப்பதால், ராஜீவின் அக்கா கணவர் மாருதி (ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்) என்பவர் மூலம் 14,000 ரூபாய் வாடகையை செலுத்திவந்தேன்.

முக்கியமான வணிக ஏரியாவில் இருப்பதால், வீட்டை விலைக்கு கேட்டு புரோக்கர்கள் வந்தபடியே இருப்பார்கள். 8 மாதங்களுக்கு முன்பு வீட்டு உரிமையாளர் தம்பதியிடம் இத்தகவலை தெரிவித்தேன். அவர்களும், "நல்லவிலைக்கு வந்தால் கொடுத்துவிடலாம்'' என்று கூறினார்கள்.

கடந்த, 4 மாதங்களுக்கு முன்பு நல்லி பொன்னுசாமி என்னிடம், "இந்த வீட்டை ஜி.ஆர்.டிக்காரங்க விலைக்கு கேட்குறாங்க. எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீங்க?'' என்று கேட்டார். இந்த, வீட்டின் உரிமையாளர்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். நீங்க, சொன்ன தகவலை அவர்களிடம் சொல்கிறேன்" என்றேன். "நீங்கள் இதற்கு உதவினால் உங்களுக்கும் வேறு வீடு பார்த்து கொடுக்கிறேன்" என்று உறுதியளித்தார்.

2020 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவிலிருந்து வீட்டின் உரிமையாளர்களான பார்த்தசாரதி-ராஜீவ் தம்பதியர் திருமண விஷயமாக சென்னை வந்தவர்கள், தி.நகர் பாண்டிபஜாரிலுள்ள ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்து பேசியபோது, "நாங்க வீட்டை விற்றுவிட்டோம். வீட்டை காலி பண்ணப்போறேன்னு நீங்க ஒரு மெயில் அனுப்புங்க'' என்று ஷாக் கொடுத்தார்கள். 10 நாள் கழித்து தனது ஆடிட்டர் இளங்குமரனின் ஆஃபிஸுக்கு வாங்க என்று அழைத்தார்கள் பார்த்தசாரதி- ராஜீவ் தம்பதியர். அங்கு போனபோது நல்லி பொன்னுசாமியும் வந்திருந்தார். ‘அட்வான்ஸோடு 50,000 ரூபாய் கொடுக்கிறேன் காலி பண்ணு’ என்று மிரட்டல் தொனியில் பேசினார் ஆடிட்டர் இளங்கும ரன். பணம் கொடுக்கிறது இருக்கட்டும்ங்க. கரோனா சூழல்ல டாக்டரா இருக்கிற எனக்கு யாரு வீடு கொடுப்பா? திடீர்ன்னு காலி பண்ணச் சொன்னா எப்படின்னு கேட்டதுக்கு பதில் இல்லை. இதனால், நான் குடியிருக்கும் வீட்டை வாங்கிய ஜி.ஆர்.டி.யின் உரிமையாளர் ராஜேந்திரனை சந்தித்து முறையிடச் சென்றேன். அவர், சந்திக்காததால் மெயில் அனுப்பினேன். முறையான பதில் இல்லை'' என்றார் டாக்டர் கவலையுடன்.

இதற்கிடையே, கரோனா டெஸ்ட் எடுக்க மாநகராட்சி சார்பில் வந்த பணியாளர்கள், அதற்குரிய பாதுகாப்பு உடைகள்- மாஸ்க் அணியாததை சுட்டிக்காட்டி, ஐ.டி.கார்டை காட்டச் சொன்ன டாக்டர் கருணாநிதி மீது, திட்டமிட்டு பாலியல் புகார் கொடுக்கப்பட்டு பரபரப்பும் நெருக்கடியும் உருவானது. தியாகராய நகர் இன்ஸ்பெக்டர் விசாரித்து, அது பொய்ப்புகார் எனத் தெரியவந்துள்ளது.

அந்த பிரச்சனை முடிந்து வீட்டுக்கு வந்த டாக்டருக்கு மற்றொரு அதிர்ச்சி. வீட்டில் பூட்டுப் போடப்பட்டிருந்தது. ஜி.ஆர்.டி நிறுவனத்தார் பூட்டியிருக்கலாம் என பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜி.ஆர்.டி. மேனேஜர் விஜய்யிடம் கேட்டிருக்கிறார். தாங்கள் பூட்டுப் போடவில்லை என்றும், பூட்டை உடைத்து உள்ளே போகும்படி ஆடிட்டர் இளங்குமரனும் சொன்னார் என்று அவர் சொல்ல, பூட்டை உடைத்து உள்ளே போயிருக்கிறார் டாக்டர். மறுநாள், வாக்கிங் போய்விட்டு வந்தால் மீண்டும் இன்னொரு பூட்டு போடப்பட்டிருக்கிறது. பொருட்கள் எல்லாம் வீட்டுக்குள் சிக்கியுள்ள நிலையில், போலீசிடம் புகார் கொடுத்தும், சிவில் மேட்டர் எனப் புறக்கணித்துவிட்டதால், 20 நாட்களுக்கு மேல் நண்பர்கள் வீட்டில் தங்க வேண்டிய அவதிக்குள்ளாகியிருக்கிறார் டாக்டர் கருணாநிதி. இவற்றின் பின்னணியில் ஜி.ஆர்.டி.யின் பி.ஆர்.ஓ. சத்தியநாராயணன் இருக்கிறார் என்றார் டாக்டர் நம்மிடம்.

ஜி.ஆர்.டி. உரிமையாளர் ராஜேந்திரனை நாம் தொடர்புகொண்டபோது, "பி.ஆர்.ஓ. சத்தியநாராயணனிடம் பேசுங்கள். அவர்தான், இதை டீல் பண்ணுகிறார்'' என்றார். பி.ஆர்.ஓ. சத்தியநாராயணன், "ஆமாம்… நான்தான் வீட்டுக்கு பூட்டுபோட்டேன். அந்த வீட்டுக்கு நாங்கதான் ஓனர். அவர், எப்படி இங்க இருக்கலாம்? முன்னாள் ஓனரான ஆடிட்டர் இளங்குமரன்கிட்ட அவரோட அட்வான்ஸ் பணம் இருக்கு. வாங்கிக்கிட்டு கிளம்பவேண்டியதுதானே?'' என்றவரிடம், "எந்த நோட்டீஸும் கொடுக்கா மல் புதிய ஓனரான நீங்கள் வாடகைதாரரை வீட்டைவிட்டு விரட்டி பூட்டு போடுவது சட்டப்படி குற்றம்'' என்றபோது, "வேணும்னா வக்கீல் நோட்டீஸ் அனுப்பச்சொல்லுங்க பார்க்கலாம்'' என்றார் அதிகார தொனியில். ஆடிட்டர் இளங்குமரன், எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.

இதுகுறித்து, தி.நகர் ஏ.சி. கல்யாணை தொடர்புகொண்டு பேசியபோது, "விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார். கரோனா காலத்தில் ஒரு டாக்டரை தெருவில் நிறுத்தியிருக்கிறது, வாடகை வீடு அவலம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT