Skip to main content

ராகுல் பிரதமராவதை கட்சிகள் எதிர்க்கின்றனவா?

Published on 21/12/2018 | Edited on 21/12/2018
stalin

 

ராகுலை பிரதமராக முன்மொழிவதாக ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது. யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்றால் காங்கிரஸ் கூட்டணியிலேயே இல்லாத அகிலேஷ் எதிர்ப்புத் தெரிவித்தாராம். தொடக்கத்திலிருந்தே பிரதமர் வேட்பாளரை தேர்தல் முடிவுக்கு பிறகே முடிவு செய்யலாம் என்று கூறிவரும் மம்தா எதிர்ப்பு தெரிவித்தாராம்.

 

ஹய்யோ, ஹய்யோ என்று வடிவேலு மாதிரி தலையில்தான் அடித்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் திமுக நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது, கலைஞர் பாணியில் திமுக சார்பில் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக ஸ்டாலின் பிரகடனம் செய்தார்.

 

அவருடைய அறிவிப்பை கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும் ஏற்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியே தனது பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை முன்மொழியாத நேரத்தில், துணிந்து ஸ்டாலின் அறிவித்ததுதான் முக்கியத்துவம் பெற்றது.

 

அவர் அறிவித்தவுடனே, மேடையில் இருந்த பினராயியோ, சந்திரபாபு நாயுடுவோ மறுத்துப் பேசவில்லை. அவர்களுக்கும் ஸ்டாலின் கருத்தில் உடன்பாடு இருக்காதுதான். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரதமர் வேட்பாளர் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய மாட்டார்கள். அதேசமயம், திமுகவின் கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. ஏனெனில் அது திமுகவின் கருத்து மட்டுமே என்று அவர்களுக்குத் தெரியும்.

 

rahul gandhi


 

இப்போதைக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளில் தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்ற கருத்துடைய கட்சிகள் என்று பார்த்தால், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டுகளும்தான். உத்தரப்பிரதேசத்தைப் பொருத்தமட்டில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜும் அணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கின்றன. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் வர மாட்டார்கள். அதேசமயம், உத்தரப்பிரதேசத்தில் அவர்களுடைய அணியை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று ராகுல் கூறியிருக்கிறார்.

 

தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளும் எத்தனை இடங்களைப் பெறுகின்றன? தனியாக அணி அமைக்க விரும்பும் மாநிலக் கட்சிகள் எத்தனை இடங்களைப் பெற்றிருக்கின்றன? பாஜக எத்தனை இடங்களை பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் பார்த்தபிறகு பிரதமர் தேர்வு குறித்து பேச்சே நடத்த முடியும்.

 

ஆனாலும், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் காங்கிரஸ் தலைவர் ராகுலையே திமுக பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கும் என்பதைத்தான் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் முன்கூட்டியே பிரதமர் வேட்பாளர் என்று ராகுலை அறிவித்ததும் அவருடைய அறிவிப்பு நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியதும் பாஜக ஆதரவு ஊடகங்களையும், திமுக எதிர்ப்பு ஊடகங்களையும் கதறவைத்திருக்கிறது என்பதே நிஜம்.

 

நிச்சயமாக, நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தி இருக்கின்றன. தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் வெற்றிபெற்ற மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது மக்கள் ஆதரவை அதிகரிக்கவே செய்யும். காங்கிரஸ் முடிவைத் தொடர்ந்து பாஜகவும் சலுகைகளை அறிவிக்கத் தொடங்குகிறது. ஆனால், அது மக்கள் மத்தியில் காங்கிரஸுக்கே சாதகமாக மாறும். காங்கிரஸ் வெற்றி பெற்றதால் பாஜக பயந்து செய்கிறதே தவிர, மனமுவந்து செய்யவில்லை என்று சாதாரண மக்கள்கூட எளிதில் புரிந்துகொள்வார்கள்.

 

ஸ்டாலின் இன்னொரு விஷயத்தை அந்த மேடையில் அறிவித்தார். அதாவது, இப்போதுள்ள கட்சிகளுடன் மேலும் கட்சிகள் காங்கிரஸ் அணியில் இணையும் என்றார். அவருடைய அந்த வார்த்தைகள் இப்போது பலிக்கத் தொடங்கியுள்ளன. பாஜக கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து கட்சிகள் வெளியேறுவது இதை உறுதிப்படுத்துகிறது.

 

 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.