Advertisment

உயிர்பலி, சவுக்கடி; சிங்கிள்ஸ்காக கொண்டாடப்பட்ட காதலர் தினம்..!

இந்த மூன்று வார்த்தைகளை இன்றைக்காவது அனுப்பிவிட வேண்டும் எனப் பல நாட்களாய் டைப் செய்துகொண்டிருந்த விரல்கள் தற்போது செண்ட் பட்டன் அருகே வந்துவிட்டது. ஒரு ரூபாய் நோட்டின் நடுப்பக்கத்தில் இதயம் வரைந்து அதற்குள் இருவர் பெயரையும் எழுதி நடுவில் அம்பு விட்டு, இண்டெர்வெல் பீரியர்டில் யாரும் பார்க்காதபோது அவளின் புத்தகப்பைக்குள் போட்டுவிட்டு ஓடிவந்ததை விட, இது சுலபமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், தொடு திரையைத் தொடுவதற்குள்ளாகவே வியர்த்துக் கொட்டுகிறது. பயத்தைத் தாண்டி குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு குட்டி ஸ்டோரியை அசைபோடலாம் என நினைக்கிறேன்.

Advertisment

Origin of valentine's day lupercalia

அது ஒரு காதலர் தினம்... ஆனால், மெரினா மணலிலும், தியேட்டர் கார்னர் சீட்டிலும், இருட்டு பப்களில் ஒளிச்சிதறலுக்கு நடுவே ஒயினுடனும் கொண்டாடப்படும் கப்புள்ஸ்களின் காதலர் தினம் அல்ல. ஊர் கூடி கொண்டாடிய சிங்கிள்ஸ்கான காதலர் தினம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அந்த கொண்டாட்டம் முடியும்போது எவரும் சிங்கிளாக இருப்பதில்லை.

திருவிழா துவங்கும் முன்பு, ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சாலையின் இருபுறமும் இளம்பெண்கள் தவிப்புடன் காத்திருந்தனர். செழுமையான பசும்புல் ரோமங்கள் கொண்ட ‘பாலண்டைன்’ மலையின் கால்களை, சுற்றிவளைத்து நெருக்கும் பாம்புபோல் அந்த கற்சாலை அமைக்கப்பட்டிருந்தது. எப்போதும் இல்லாத உற்சாகத்தில், காத்திருக்கும் பெண்களை வாழ்த்தியபடி மக்கள் மலையின் கிழக்கு நோக்கி நகர்ந்தனர். அது ஒரு குகை கோவில். ‘லூபர்கஸ்’ எனும் கடவுளின் பெயரால் அந்த குகை ‘லூபர்கல்’ என அழைக்கப்பட்டது. பாலண்டைன் மலையின் பல்வேறு திசைகளிலிருந்து ஆயிரக்கணக்கான ரோம் நகரவாசிகள் அங்குகூடியிருந்தனர். கோமு மற்றும் தூபா எனும் ரோமானிய இசைக்கருவிகள் முழங்கக் கொண்டாட்டம் துவங்கியது.

Advertisment

பரவசம் நிறைந்த அக்கூட்டத்தைக் கிழித்தபடி அரை நிர்வாணமாக இருக்கும் கோவில் பூசாரிகள், ஒரு வளர்ந்த ஆண் ஆட்டையும், ஒரு நாயையும் இழுத்துவந்தனர். அவர்கள் கோவிலின் மையத்தை அடைந்ததும் ஆரவாரம் அதிகரித்தது. ஒளி மங்கிய கோவிலின் நடுவே ஒரு பெண் ஓநாயின் சிலை. ஆம், அது தான் லூபர்கஸ். லூபர்கஸின் ஆளுயர வெங்கல சிலை மங்கலான ஒளியை உள்வாங்கி பளபளத்தது. சிலையின் முன் அமைக்கப்பட்ட பலிபீடத்தில் பூசாரிகள் இழுத்துவந்த ஆடும், நாயும் அமைதியாய் படுத்திருந்தன. மக்கள் ஆரவாரத்தில் பரவசம் மேலோங்க, பீடத்திற்கு முன் நின்ற பூசாரிகள் லூபர்கஸை வணங்கியபடி ஆட்டையும் நாயையும் பலியிட்டனர். இரு உயிர்களின் இரத்தமும் ஒன்றாக ஓநாய் மீது பீய்ச்சியடிக்க, வாழ்த்துச் சத்தம் வானை எட்டியது.

மேற்கொண்டு திருவிழாவை நடத்தப் பூசாரிகளில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பலியிட்ட கத்தியில் படிந்திருக்கும் இரத்தத்தை நெற்றியில் பூசி அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு,பலியிடப்பட்ட ஆட்டையும், நாயையும் கிழித்து ‘தாங்ஸ்’ சாட்டை செய்யப்பட்டது. தேர்வுசெய்யப்பட்ட பூசாரிகள் சாட்டைகளைக் கையில் எடுத்துச் சுழற்றி ஆடியபடி பாலண்டைன் மலையை வலம்வரக் கிளம்பினர். அவ்வாறு சுற்றிவரும்போது சாலையில் காத்திருக்கும் பெண்களைச் சாட்டையால் அடிக்க, அந்த அடிக்காகவே காத்திருந்த பெண்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். அடி வாங்கினால் விரைவில் திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு ஒருபுறம் ஆன்மிக சடங்குகள் நடைபெறும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுக்காக சிங்கிள்கள் தயாராகினர்.

Origin of valentine's day lupercalia

மக்கள் ஒன்றாகக் கூடி ஆடவும், பாடவும் வசதியாக உருவாக்கப்பட்ட இடம்தான் ‘கொமிட்டியம்’. பலி சடங்குகள் முடிந்தபிறகு நகரில் திருமணம் ஆகாத சிங்கிள் பெண்கள் தங்கள் பெயரை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கொமிட்டியத்தின் நடுவில் உள்ள ஜாடியில் போட்டனர். மலையைச் சுற்றச் சென்ற பூசாரிகள் திரும்பி வருவதற்குள் ஜாடி நிரம்பியது. இந்த நேரத்திற்காகக் காத்திருந்த சிங்கிள் இளைஞர்கள் ஆவலுடன் ஒருவர் பின் ஒருவராக ஜாடியின் அருகில் வந்தனர். இதற்கிடையில் முதலில் யார் வருவது என்பதற்கான சண்டைகள் தனிக்கதை. அப்படி ஜாடியின் அருகில் வந்தவர் அதிலிருந்து ஒரு சீட்டை வெளியில் எடுத்துப் பிரித்தார். சுற்றி நிற்கும் பெண்களின் இதயம் படபடத்தது. சிலர் அந்த சீட்டில் தன் பெயர் இருக்கவேண்டும் எனவும், சிலர் அய்யயோ வேண்டாம்... எனவும் வேண்டிக்கொண்டனர். அந்த இளைஞர் கையில் எடுத்த சீட்டை பிரித்து அந்த பெயரைச் சத்தமாகப் படிக்க, கூட்டத்தின் மத்தியிலிருந்து பெயருக்குச் சொந்தமாக இளம்பெண் வேகமாக ஓடிவந்து அவரை இருகக் கட்டிக்கொண்டாள். அந்தப் பெண் வேண்டியது நடந்தது போலும்.

cnc

ஆம், இனி அந்த ஜோடி அடுத்த வருடத் திருவிழா வரையிலும் ஒன்றாக வாழலாம். அதன்பிறகு இருவருக்கும் விருப்பம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம். பெரும்பாலும் இந்த திருவிழா திருமணத்தில் முடிவதுதான் அதிசயம். இப்படி சிங்கிளாக இருப்பவர்களைக் காதலுக்குள் தள்ளும் இந்த திருவிழாவின் பெயர் ‘லூபர்கெலியா’. பண்டைய ரோமின் கருவுறுதலுக்கான கடவுள் லூபர்கஸை வழிபடும் விதமாக, பேகன் இன மக்களால் பிப்ரவரி 13 முதல் 15 தேதிகளில் லூபர்கெலியா கொண்டாடப்பட்டது. தோராயமாக கி.மு.6 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்ட இந்த திருவிழா கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வாலண்டைன்ஸ் தினமாக மாற்றப்பட்டது. போப் முதலாம் கெலாஷியஸ், பேகன் இன மக்களின் லூபர்கெலியாவை நீக்கிவிட்டு, காதலர்களுக்குத் திருமணம் செய்துவைத்ததால் கொல்லப்பட்ட வாலண்டைனை நினைவுகூரும் வகையில் வாலண்டைன்ஸ் தினத்தைக் கொண்டுவந்தார். அது காதலர் தினமாகவே உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இப்போது, ஜாடியிலிருந்து சீட்டு எடுப்பது போலக் காதலைத் தேர்ந்துகொள்ள முடியாது எனினும், காத்திருப்பு, நிராகரிப்பு, ஏமாற்றம் என வழக்கமான பாடங்களை கற்றபிறகு வாழ்க்கைக்கான காதல் நம்மைத் தேர்ந்துகொள்ளும். கொஞ்சம் பொறுங்க., ஏதோ பதில் வந்துருக்கு. பாத்துட்டு வர்றேன்.

இதையும் படிங்க... : காதலர் தினத்திற்கு காரணமான கதை..!

lovers lovers day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe