Advertisment

ஓபிஎஸ்-பண்ருட்டி ராமச்சந்திரன் ரகசிய சந்திப்பு! எடப்பாடி பழனிசாமி டென்ஷன்!

ddd

Advertisment

அதிமுகவின் செயற்குழு கூடவிருக்கும் சூழலில் சில முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்! அந்த வகையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனை நேற்று மிக ரகசியமாக சந்தித்துள்ளார் ஓபிஎஸ்! அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஜே.சி.டி.பிரபாகரன் (இருவரும் வன்னியர்கள்) ஆகிய இருவரையும் தன்னுடன் ஓபிஎஸ் அழைத்து சென்றுள்ளார். ஓபிஎஸ்-பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்திருக்கிறது.

தன்னை சந்திக்க வந்த ஓபிஎஸ்-ஐமுக மலர்ச்சியுடன் வரவேற்றுள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன். மிக ரகசியமாக நடந்த அந்த சந்திப்பில், இரண்டு தலைவர்களும் தரப்பும் பரஸ்பர உடல் நலம் விசாரித்துக் கொண்டதற்கு பிறகு நடப்பு அரசியல் குறித்து விரிவாக விவாதித்துள்ளனர். குறிப்பாக பழைய சம்பங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஓபிஎஸ், “2011-ல் அம்மா ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் நீங்கள்தான். அதிமுகவுடன் தேமுதிகவை கூட்டணியில் சேர வைத்ததிலிருந்து நீங்கள் எடுத்த ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிமுகவுக்கு வலிமையை கொடுத்தது. அன்றைக்கு உருவான கூட்டணி பலம்தான் திமுக ஆட்சியை வீழ்த்தி அம்மாவை (ஜெயலலிதா) அரியணையில் ஏற்றியது”என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதற்கு, “அன்றைக்கு ஜெயலலிதாவும் சசிகலாவும் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கேற்ப கூட்டணி உருவானது. கூட்டணி வலிமை ஒரு புறமிருந்தாலும் அதிமுகவின் செல்வாக்கும் ஆட்சி அமைய முக்கிய காரணம்”என்று தெரிவித்திருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

Advertisment

இந்த நிலையில், “அரசியலில் இருந்து நீங்கள் விலகியிருப்பது அதிமுகவுக்கு இழப்பு! அதனால் பழையபடி நீங்கள் அரசியல் நடவடிக்கையை தொடர வேண்டும். உங்கள் ஆலோசனைகள் கட்சிக்கு தேவைப்படுகிறது. வருகிற 28-ந்தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டியுள்ளோம். அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்,மறுக்கக்கூடாது!‘’ என்று வலியுறுத்தியுள்ளார் ஓ.பி.எஸ்.ஸும் கே.பி.முனுசாமியும்.

dddd

இதனையடுத்து, அதிமுகவின் செயற்குழுவில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதா மறைவும், சசிகலா சிறை வாழ்வும் அரசியலில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை விலக வைத்திருந்தது. அதற்கேற்ப அவரது உடல் நிலையும் ஒத்துழைக்க மறுத்தது. தற்போது பண்ருட்டி ராமச்சந்திரனின் உடல் நிலை நன்றாக இருக்கும் நிலையில் அவரை சந்தித்து ஓபிஎஸ் விவாதித்திருப்பது அதிமுகவில் மேலிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபகாலமாக, வன்னியர் சமூதத்தின் ஆதரவை பெறும் வகையில் வன்னியர் சமூக தலைவர்களை ஒரே நேர்க்கோட்டுக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் ஓபிஎஸ்! வன்னியர் சமூகத்தின் ஆகப் பெரிய தலைவராக மதிக்கப்படும் ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் கடந்த வாரம் வந்தபோது அவரை பாராட்டியும் புகழ்ந்தும் ஓபிஎஸ் பதிவு செய்தது கூட இப்படிப்பட்ட பின்னணியில்தான்.

அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனின் உடல்நிலை அண்மைக்காலமாக பாதித்திருப்பதால் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக தலைமை! அந்த வகையில், மீண்டும் தீவிர அரசியலில் இறங்க, பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் அழைத்து வருவதால், அதிமுகவின் அவைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்படலாம் என்றும் அதிமுக மேல்மட்ட தகவல்கள் கூறுகின்றன! ஆனால், ஓபிஎஸ்ஸின் வன்னியர் வியூகத்தை ஜெயிக்க வைக்க எடப்பாடி விடுவாரா? என்கிற கேள்விகளும் அதிமுகவின் எடப்பாடி ஆதரவு அமைச்சர்களிடையே எதிரொலிக்க செய்கிறது! ஓபிஎஸ்-பண்ருட்டி சந்திப்பை அறிந்து டென்ஷனாகியிருக்கிறார் எடப்பாடி.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe