Skip to main content

"எதுவும் பேச முடியாமல் நொந்து போன ஓ.பி.எஸ்"...ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்! 

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

இடைத்தேர்தலின் வெற்றி அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளின் தலைமையின் செல்வாக்கிற்கான பலப் பரீட்சையாகப் பார்க்கப்படுவதால் தொகுதிகளை கைப்பற்ற இரு கட்சிகளும் முஷ்டிகளை உயர்த்தி வருகின்றன. தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டு பூத் கமிட்டிகளை கவனிக்கும் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன. அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி விக்கிரவாண்டிக்கு முத்தமிழ்ச் செல்வனையும், நாங்குநேரிக்கு நாராயணனையும் வேட்பாளர்களாக அறிவித்துள்ளனர் இ.பி.எஸ்.சும் ஓ.பி. எஸ்.சும். விக்கிரவாண்டியில் மட்டும் போட்டியிடும் தி.மு.க.வில் புகழேந்தி களமிறக்கப்பட்டிருக்கிறார். நாங்குநேரியை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ள நிலையில், 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் சோனியாகாந்தியின் பார்வைக்கு கொண்டு போகப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்ய 30-ந்தேதி கடைசி நாள் என்பதால் 29-ந் தேதிக்குள் தங்களது வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருந்தனர் கதர்சட்டையினர்.

 

admk



தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளிலுமே கட்சியின் நீண்ட கால உழைப்பாளிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் சீட் கிடைக்காத பிரபலங்களின் பொறுமல் சத்தம் அ.தி.மு.க.வில் அதிகம் எதிரொலிக்கிறது. இது குறித்து அ.தி. மு.க.வில் நாம் விசாரித்த போது, "தேர்தல் தேதி அறிவித்ததுமே, விருப்ப மனு கொடுப்பதற்கான தேதியை இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் அறிவித்தனர். நேர்காணலை நடத்தி வேட்பாளரை முடிவு செய்வதற்கு முன்பாக, விக்கிர வாண்டி தொகுதியின் வேட்பாளரை முடிவு செய்வதில் அமைச்சர் சண்முகத்திடம் ஆலோசித்தார் எடப்பாடி. அப்போது, "நாடாளுமன்றத் தேர்தலின் போதே உங்கள் சகோதரர் ராதாவுக்காக சீட் கேட்டீர்கள். அது முடியாமல் போய்விட்டது. தற்போது விக்கிர வாண்டியில் ராதாவை நிறுத்தலாமே' என எடப்பாடி சொல்லியிருக்கிறார். ஆனால், சி.வி. சண்முகமோ, மகனின் உடல்நிலை தேறாததில் மனம் உடைந்து போயிருக்கிறார் ராதா. அதிலிருந்து இன்னும் மீளவே இல்லை. அதனால் தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் அவர் இல்லை. "என் குடும்பத்திற்கு சீட் வேண்டாம். யாரை நிறுத்துகிறீர்களோ அவரை ஜெயிக்க வைக்கிறேன்' என தெரிவித் திருக்கிறார் சண்முகம்.

 

admk



அப்போது பேசிய எடப்பாடி, "முன்னாள் எம்.பி. லஷ்மணனை நிறுத்த ஓ.பி.எஸ். விரும்புகிறார். அவருக்கு வாய்ப்பளித்தால் கட்சித் தொண்டர்கள் சோர்வடைந்து போவார்கள். வருகிற வாய்ப்புகளெல்லாம் பிரபலங்களுக்கே கொடுத்து விட்டால் தொண்டர்கள் எங்கே போவார்கள்? அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் உங்கள் சிபாரிசுக்கே முக்கியத்துவம் உண்டு. நீங்கள் சொல்பவரையே நிறுத்தலாம்' என சொல்ல, அதன் பிறகே தனது ஆதரவாளரான முத்தமிழ்ச் செல்வனை சிபாரிசு செய்திருக்கிறார் சண்முகம். இந்த விசயத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார் எடப்பாடி. அதாவது, தி.மு.க. வில் பொன்முடி தலைமையில்தான் விக்கிர வாண்டி தொகுதி இருக்கும். அவரை சமாளிக்க சண்முகம்தான் சரியான நபர். சண்முகத்தின் சிபாரிசு இல்லாதவரை நிறுத்தினால் அவரது ஒத்துழைப்பு நிச்சயம் இருக்காது. அதனால், சண்முகத்தின் கேண்டிடேட்டுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் வெற்றியும் நமக்கு உறுதியாகும். அதே சமயம், ஓ.பி.எஸ்.சின் சிபாரிசையும் காலி செய்திடலாம் என கணக்கிட்டே காய்களை நகர்த்தினார் எடப்பாடி.

 

dmk



அதற்கேற்ப, நேர் காணல் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.செ.க்களிடம் ஆலோசித்த எடப்பாடி, சண்முகத்தின் சிபாரிசுக்கே ஜெ போட்டனர். சண்முகத்தின் சிபாரிசை எதிர்த்து ஓ.பி.எஸ்.சால் எதுவும் பேசமுடியாமல் நொந்து போனார். விக்கிர வாண்டியை பொறுத்த வரை அ.தி.மு.க.- தி.மு.க. இடையே போட்டி இல்லை; இன்னாள் அமைச்சர் சண்முகத்துக்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும்தான் போட்டி. விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பேருமே மெகா ஜாம்பவான்கள் என்பதால் தேர்தல் நெருங்க நெருங்க பல அதிரடிகள் அரங்கேறும்.

 

by election



அதேபோல, நாங்குநேரி தொகுதியைப் பொறுத்த வரை, அத்தொகுதியை கேட்டு பொன்னார் மூலமாக ஓ.பி.எஸ்.சை தூது அனுப்பியது பா.ஜ.க. தேர்தல் உடன்பாடு குறித்து அ.தி.மு.க.- பா.ஜ.க.வுக்கிடையே ஏற்கனவே இருக்கும் ஜென்டில்மேன் அக்ரிமெண்டை சுட்டிக் காட்டி (கடந்த இதழில் எழுதியிருக்கிறோம்) மறுத்துவிட்டார் எடப்பாடி. இந்த தொகுதியில் தனது ஆதரவாளரான வழக்கறிஞர் மனோஜ் பாண்டியனை நிறுத்த விரும்பினார் ஓ.பி.எஸ். அதனால் பா.ஜ.க. வுக்காக அழுத்தம் கொடுக்கவில்லை. ஓ.பி.எஸ்.சின் சிபாரிசு மட்டுமல்லாமல் எடப்பாடியிடமே மனோஜ்பாண்டியன் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்தார். ஆனால், மனோஜுக்கு சீட் கொடுத்து அவர் ஜெயித்து விட்டால் அவரை கட்டுக்குள் வைத்துக்கொள்வது கடினம் என எடப்பாடிக்கு சொல்லப் பட்டிருந்ததால் மனோஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இங்கேயும் ஓ.பி.எஸ். தோற்றுப்போய்விட் டார். ஆக, வேட்பாளர் முடிவில் எடப்பாடியின் திட்டமே ஜெயித்திருக்கிறது' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் சீனியர் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து தேர்தல் களத்தை சூடாக்கியிருக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீரும். இந்த நிலையில், அ.தி.மு.க.விற்கான ஆதரவை தோழமைக் கட்சிகளில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மட்டுமே அறிவித்த நிலையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கட்சிகள் அறிவிக்காமல் காலம் தாழ்த்தின. இதன் சூட்சுமத்தை அறிந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தோழமைக்கட்சிகளின் தலைமையை சந்தித்து ஆதரவு கேட்கும்படி அறிவுறுத்தினார். இதனால், எடப்பாடியுடன் கேரளா செல்லவிருந்த தங்கமணியின் புரோகிராம் மாறியது. பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளின் தலைமையை இந்த மூவர் குழு சந்திப்பதற்கு முதல்நாள் இரவு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசிடமும், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவிடமும் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இதனைத் தொடர்ந்து விஜயகாந்தை சந்தித்தது மூவர் குழு.


இது குறித்து விசாரித்தபோது, "தங்களை சந்தித்த அமைச்சர்கள் குழுவினரிடம், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எங்களை நீங்கள் உதாசீனப்படுத்துகிறீர்கள். விஜயகாந்தின் உடல்நிலையால் கட்சி பலகீனமடைந்திருப்பதாக நினைத்து உதாசீனப்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனா, தே.மு.தி.க. எந்த நிலையிலும் பலகீனமாக இல்லைங்கிறதை உள்ளாட்சி தேர்தல் நிரூபிக்கும். சமீபத்தில் நடந்த முப்பெரும் விழாவின் எழுச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியிருந்தும் எங்களை புறக்கணிப்பது வருத்தம்தான்'' என பிரேமலதா சொல்லியிருக்கிறார்.

அதனை மறுத்துப்பேசிய தங்கமணியும் ஜெயக்குமாரும், "தோழமைக் கட்சிகளை புறக்கணிப்பது அ.தி.மு.க.வுக்கு பழக்கம் கிடையாது. திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதாலும் வேட்புமனுவுக்கு குறைந்த நாட்களே இருந்ததாலும் வேட்பாளர் தேர்வில் சீரியஸ் காட்டவேண்டியதாக இருந்தது. தேர்தல் தேதி அறிவித்ததுமே உங்களிடம் கலந்துபேசணும்னு நீங்க நினைச்சிருக்கலாம். நாங்க பேசாதது உங்களுக்கு உதாசீனப்படுத்துவதாக தெரிந்திருக்கும். மற்றபடி தே.மு.தி.க.வை புறக்கணிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எப்பவும் நீங்கள் தோழமைக்கட்சிதான்' என சமாதானப்படுத்தினர். "நல்லாயிருக்கீங்களா? எடப்பாடி வரலையா?' என கேட்டதைத் தவிர, தேர்தலை பற்றி எதையும் அமைச்சர்களிடம் பேசவில்லை விஜயகாந்த். அதன்பிறகு, தேர்தல் என்றாலே முக்கியமாக பேச வேண்டிய சில விசயங்கள் பேசப்பட்டன. தே.மு.தி.க.வின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தன. அது சுமுகமானதும் பிரேமலதா ஆதரவை தெரிவிப்பார்' என்கிறது அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரம்.

பா.ம.க.வையும் அணுகியுள்ளது மூவர் குழு. பேச வேண்டிய முக்கிய விசயங்கள் பேசப்பட்டன. ஆனால், சில விசயங்கள் இழுபறியாக இருந்ததால் வியாழன் வரை ஆதரவு விசயத்தில் உறுதி காணப்படவில்லை. அரசியல் சார்பற்ற வன்னியர் சங்க நிர்வாகிகளோ, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறவை ஏற்படுத்திக் கொள்ள 10 கட்டளைகளை முன்னிறுத்தினார் டாக்டர் ராமதாஸ். ஆனால், அதில் ஒன்று கூட நிறைவேறவில்லை. அப்படியிருக்க இடைத்தேர்தலுக்கு எதற்கு ஆதரவளிக்க வேண்டும்? வன்னியர் சமூகத்துக்கான சில முக்கிய அவசர அவசியமான கோரிக்கைகள் இருக்கின்றன. அதனை நிறைவேற்றுவதில் எடப்பாடிக்கு எந்த நட்டமும் இல்லை. அதனால் அவற்றை நிறைவேற்ற பா.ம.க. அழுத்தம் தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வேறு கோணத்தில் விவாதம் நடப்பதால் அதில் பல ரகசியங்கள் உள்ளன என்கிறார்கள் காட்டமாக.

ஆளும்கட்சி அதிகாரம், பணபலம், அமைச்சர் சண்முகத்தின் அரசியல் என மூன்றிலும் அ.தி.மு.க. வலிமையாக இருப்பதால் அதனை சமாளிக்க வேண்டிய பெரும் சுமை தி.மு.க. பொன்முடிக்கு இருக்கிறது. மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. 2016-ல் தனித்துப்போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகளை வாங்கியிருப்பதால் பா.ம.க. வின் பலமும் அ.தி.மு.க. வுக்கு இருப்பதால் வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதில் மட்டுமே தி.மு.க. வின் வெற்றி இருப்பதாக தி.மு.க. தலைமையிடமும், பொன்முடியிடமும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள். இதனால், தி.மு.க.வின் "அட்சய பாத்திரமான' ஜெகத்ரட்சகன் எம்.பி.யை உள்ளடக்கி பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இதற்கிடையே, தலைமையின் அறிவுறுத்தலின் படி கேட்கப்படுகிறது என சொல்லி, தி.மு.க. வில் உள்ள 65 மா.செ.க்களிடமும் (பொன்முடி நீங்கலாக) இடைத் தேர்தல் நிதியாக மாவட்டத்துக்கு 10 எல் வேண்டும் என அறிவாலயத்திலிருந்து கேட்கப்பட்டிருக்கும் விவகாரம் தி.மு.க. மா.செ.க் களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதற்கிடையே, தி.மு.க.வே தேர்தல் பணியை துவக்குவதற்கு முன்பாகவே, காங்கிரஸின் செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை அறிமுகப்படுத்தும் பணியை துவக்கி விட்டார் காங்கிரஸ் செயல்தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.! இது, தி.மு.க.வுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. நாங்குநேரியை காங்கிரஸுக்கு ஒதுக்கியபோதே, அ.தி.மு.க.வுக்கு இணையாக செலவு செய்யக்கூடிய நபரை தேர்தலில் நிறுத்துங்கள். தேர்தல் செலவுக்கு தி.மு.க.வை தொந்தரவு செய்ய வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழ கிரிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில், நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்து எம்.பி.யாகிவிட்ட வசந்தகுமாரிடம், "நாங்குநேரி யின் மொத்த தேர்தல் செலவையும் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என அழகிரி வலியுறுத்த, அவரோ தெறித்து ஓடுகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர் ஒருவர், "எனக்கு எம்.பி.சீட் கொடுங்கள். நான் ஜெயித்து விடுவேன். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஒன்று குறையும். அதேசமயம், நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக யார் நின்றாலும் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டு அவரை ஜெயிக்க வைக்கிறேன் என உறுதி தந்தார் வசந்தகுமார். அதனால்தான் அவருக்கு எம்.பி.சீட் தரப்பட்டது. இப்போது, பணம் என்றதும் தேர்தலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாத மாதிரி ஓடுகிறார்'' என்கிறார் காட்டமாக. பணத்தை பிரதானமாக வைத்தே தேர்தலை எதிர்கொள்வதால் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளில் கரன்சி கட்டுகள் உடைபடும் சத்தம் பலமாக இருக்கிறது.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.