Skip to main content

அமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு!

எல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூலமாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.

 

admk"பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் அ.தி.மு.க. தோல்விக்கு காரணம்' என ஓப்பனாகவே பொதுக்கூட்டத்தில் பேசினார் அமைச்சர் சி.வி. சண்முகம். இதேரீதியில் பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலிக்கின்றன. எல்லவாற்றுக்கும் மேலாக, ஜூன் 8-ஆம் தேதி மதுரை கிழக்கு மாவட் டச் செயலாளரும் எம்.எல். ஏ.வுமான ராஜன்செல்லப்பா அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதைத் தொடர்ந்து 12-ந் தேதி மாவட்டச் செயலாளர் கள்-எம்.எல்.ஏ.க்கள்-நிர்வாகி கள் கூட்டத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "வாயை மூடிப் பேசுங்கப்பா' என்கிற அளவிற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.சும் கூட்டாக அறிக்கை வேறு கொடுக்க வேண்டியிருந்தது.

 

opsஇந்த நிலையில் திங்களன்று ராஜன் செல்லப்பா மதுரையில் தனியாக கூட்டத்தைக் கூட்டி, "உள்ளாட்சித் தேர்தலை புதிய தலைமையுடன் அ.தி.மு.க. சந்திக்கும்' என்று பகீர் கிளப்பி, பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜன் செல்லப்பா வாய்ஸையே குன்னம் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க. இராமச்சந்திரன் எதிரொலிக்க, என்னதான் நடக்குது அ.தி.மு.க.வில் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஏன் இந்த போர்க்குரல் என்ற கேள்வியை ராஜன் செல்லப்பாவிடம் முன்வைத்தோம்.

 

opsநம்மிடம் பேசிய அவர், இயக்கத்தோட வளர்ச்சிக்காக பொதுக்குழுவில் வைக்கவேண்டிய சில விஷயங்களை உங்களிடம் சொல்கிறேன். உண்மையில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கட்டுப்பாடோடு செயல்பட்டிருந்தால் அ.தி.மு.க. கோட்டையான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை இழந்திருக்க மாட்டோம். ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் இல்லாத நிலையில் அவர் ஆட்சிக் காலங்களைவிட பல திட்டங்களைச் செயல்படுத்திய எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி குறித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. அ.தி.மு.க.வுக்கு ஒரு வலிமையான தலைமை தேவை. அதனை பொதுக் குழுவை கூட்டி முடிவு செய்ய வேண்டும். டி.டி.வி. தினகரன் மாயை என ஆகிவிட்ட நிலையில் இனி அ.தி.மு.க-தி.மு.க என இரண்டு கட்சிகள்தான் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வரும். அதனால் அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.


தேர்தல் முடிவு வந்து ஒருமாத காலமாகியும் தோல்விக்கான காரணங்கள் குறித்து இன்னும் நாங்கள் சுயபரிசோதனை செய்யவில்லை. தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எனது மகனின் தேர்தல் தோல்விக்கான காரணத்தை இதுவரை தலைமை கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் மதுரையிலுள்ள உட்கட்சி பூசல்தான் தோல்விக்கு காரணம் என தலைமையிடம் சொல்லியிருப்பேன்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற ரவீந்திரநாத்குமார் தவிர இந்த ஆட்சி நீடிக்க காரணமாக இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க் கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு செல்லாதது தொண்டர்கள் மத்தியில் நெருடல்களை ஏற்படுத்தியுள்ளதோடு, இவர்களுக்கு ஏன் தலைமை வழிகாட்டவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் பத்து முறையாவது மந்திரிசபையை மாற்றியமைத்து இருப்பார். ஆர்வமில்லாத அமைச்சர்களை மாற்றியிருப்பார். மற்றவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பார். இரண்டு தலைமைக்குப் பதில் அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை என்ற எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். இந்த நல்ல கருத்திற்காக என்மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். எடுத்தாலும் கவலை இல்லை'' என்றார்.

  rajan chellapaராஜன் செல்லப்பாவின் கருத்தை வழிமொழிந்து அதற்கு முழு ஆதரவை தெரிவித்திருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் அதிரடியாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். என் மனதில் நீண்ட காலமாக நெருடலாகவே இருந்த கருத்தான ஒற்றைத் தலைமை இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தை சொல்லாமலேயே இருந்து வந்தேன். சரியான நேரத்தில் ராஜன்செல்லப்பா தெரிவித்ததும் அதனை ஆதரித்து எனக்கென்று தனிப்பட்ட முறையில் உள்ள சில கருத்துக்களை எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வெளிப்படையாகச் சொல்கிறேன். மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு ஓ.பி.எஸ். கேட்டது மிகப்பெரிய தவறு. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டது. ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இனியும் கட்சியை பலிகொடுக்க முடியாது. ஒற்றைத் தலைமையின்கீழ் கட்சி வரவேண்டும் என்பதுதான் என்னுடைய உறுதியான கருத்து'' என அடித்துச் சொன்னார்.

கட்சிக்குள் எழுந்திருக்கும் கலகக் குரல் முதல்வர் எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஓ.பி.எஸ்.ஸை மையப்படுத்தியே எதிர்ப்புகள் வருவதால், மிச்சமுள்ள இரண்டு ஆண்டுகளையும் ஆட்சியிலிருந்தபடியே காலம் தள்ளிவிட வேண்டும் எனக் கணக்குப் போட்டு செயல்படுகிறார். அ.தி.மு.க.வில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது தி.மு.க. ஏற்கனவே அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்த பிரமுகர்கள் மூலம் ஆளுங்கட்சியினருக்கு வலை வீசுவதைத் தொடர்கிறது. அ.தி.மு.க.வினரின் கலகக்குரல் தனது ஆபரேஷனுக்கு சாதகமாகும் என தி.மு.க. நினைக்க, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பெங்களூரு சிறையிலிருந்து சசிகலாவும் கவனித்து வருகிறாராம்.

இதை படிக்காம போயிடாதீங்க !