Skip to main content

‘தற்சார்பு’ என்பது இந்தியாவுக்கு மட்டுமா? மாநிலங்களுக்குமா?

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

narendra modi


நான்காம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இந்த நெருக்கடியான காலத்தில் தற்சார்புடன் இருக்கவேண்டும். 21ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவுக்குச் சொந்தமானது. அந்தக் கனவு மெய்ப்பட, இந்தியாவின் தற்சார்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். ‘தற்சார்பு’த் தன்மையுடன் ஒரு நாடு வளர வேண்டும் என அதன் பிரதமர் விரும்புவது பாராட்டுக்குரியது. 
 

இந்தியா என்பது ஒரே நாடல்ல. புவியியல்  அமைப்பின்படியும் வரலாற்றுப் பார்வையின் அடிப்படையிலும் இது ஒரு துணைக்கண்டம். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, இந்தியா என்பது மாநில அரசுகளின் ஒன்றியம். (India that is Bharat shall be a union of States) 
 

 kalaignar farooq abdullah

 

பிரதமர் இப்போது தற்சார்பு பற்றிப் பேசுவதைத்தான், 1970களிலேயே ‘மாநில சுயாட்சி’ என உரக்க ஒலித்தது தமிழ்நாடு. கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா அரசும் அதன் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றியது. பல மாநிலங்கள் அத்தகையத் தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டாலும், மாநில உரிமைகளுக்கான குரலை அழுத்தமாக எதிரொலிக்கின்றன. 
 

இடதுசாரிகள் ஆளும் கேரளா, இடதுசாரிகளைத் தோற்கடித்து திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்குவங்காளம், பா.ஜ.க.வின் பழைய அரசியல் கூட்டாளியும்-நிரந்தரக் கொள்கைக் கூட்டாளியுமான சிவசேனா ஆளுகின்ற மராட்டியம், இந்தியாவில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநிலமான தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எனப் பல தரப்பிலிருந்தும் மாநிலங்களின் அதிகாரம் வலியுறுத்தப்படுகிறது. 
 

மாநிலங்களின் சுயாட்சி என்பது, மத்தியில் உள்ள ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் கூட்டாட்சித் தன்மையைப் பொறுத்தே அமையும். அதைத்தான், “மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி” என சற்றொப்ப அரை நூற்றாண்டுக்கு முன் தி.மு.க. அரசு முன்மொழிந்தது. (அதிகாரப் பகிர்தல்-அதிகாரப் பரவல் அடிப்படையிலான கூட்டாட்சியையும் சுயாட்சியையும், பதவி அடிப்படையிலான மத்தியில் கூட்டணி ஆட்சியுடனும், மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சியுடனும் ஒப்பிட்டு மனநிறைவடைந்த கட்சிக்காரர்களும் உண்டு)
 

உண்மையான கூட்டாட்சித்தன்மை இல்லாமல், மாநிலத்தில் சுயாட்சி என்பதோ, கூடுதல் அதிகாரம் என்பதோ நடைமுறைக்கு வராது என்பதை இந்தப் பேரிடர் காலம் மெய்ப்பித்து வருகிறது. புதிய கல்விக்கொள்கை, வரைவு மின்சார சட்டத் திருத்தம், காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி (நீர் ஆற்றல்) துறையுடன் இணைத்தது என மாநிலங்களின் மிச்சமுள்ள அதிகாரங்களையும் பறித்து, ஏற்கனவே குவிந்திருக்கும் தன் அதிகாரத்தின் மீது கூடுதலாகச் சேர்த்துக்  கொள்கிறது ஒன்றிய அரசு. 
 

மத்திய அரசின் கீழ் உள்ள துறைகள்-மாநில அரசின் கீழ் துறைகள்-இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள துறைகள் என மூன்று பிரிவுகளின் உள்ள துறைகளில், மூன்றாவது பிரிவின் மீது தன் அதிகாரத்தைச் செலுத்துவது ஒன்றிய அரசுகளின் நீண்டகால வழக்கமாக உள்ளது. அத்துடன், இரண்டாவது பிரிவில் உள்ளவற்றைத் தன் வசப்படுத்துவதும், முதல் பிரிவின் கீழ் புதுப்புது துறைகளை உருவாக்கிக் கொள்வதும் தொடர்கிறது.
 

பேரிடர் மேலாண்மை என்பது 2004 ஆழிப்பேரலைக்குப் பிறகு, மத்திய ஒன்றிய அரசு வலிமைப்படுத்திக் கொண்ட துறையாகும். தற்போது கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பரவக்கூடிய நோய் என்ற அடிப்படையில் இதனை ஒன்றிய அரசு பேரிடர்  மேலாண்மை ஆளுகைக்குள் கொண்டு வந்து, மாநிலங்கள் மீது அதிகாரம் செலுத்துகிறது. 
 

rrrr


அதே நேரத்தில், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் களப்பணிகளை மேற்கொள்ளும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் (பொது சுகாதாரம்), தூய்மைப் பணியும் மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருப்பவை. எனவே மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நோய்த்தொற்று நிலைமையைப் பொறுத்து, கட்டுப்பாடுகளைக் கூடுதலாக்கவோ குறைக்கவோ அதிகாரம் உள்ளது. 
 

கேரள அரசு அதனை மேற்கொள்ள முன்வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு எதிரான நிலையை எடுத்து, கட்டுப்படுத்தியது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாவட்டங்களை ஒன்றிய அரசு வகைப்படுத்தியதிலும் மாநிலங்களின் மீதான ஆதிக்கம் இருந்தது. பெரியளவிலான மாவட்டங்களில் ஒரு பகுதியில் உள்ள நோய்த்தொற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சிவப்பு மண்டலமாக அறிவிக்கும்போது, மொத்த மாவட்டமும் முடக்கப்பட்டு, தொழில்கள் பாதிக்கப்படுவதால் மாநிலத்தின் வருவாய் இழப்பு குறித்து ஒன்றிய அரசு அக்கறை காட்டவில்லை, இது பற்றி, பல மாநிலங்களும் குற்றம்சாட்டியுள்ளன. மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிதியும் வந்து சேரவில்லை.

 

pppp


 

ஒன்றிய அரசின் அதிகாரத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை விதிகளின் அடிப்படையில், மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ள நோய்த்தொற்றுத் தடுப்புத் துறைகளை மீறி செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல எனக் குறிப்பிடும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பிரசாந்த பூஷன்-ஷ்யாம் அகர்வால் இருவரும், மேலும் சிலவற்றையும் சுட்டிக்காட்டுகின்றனர். 
 

ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான அதிகார வரம்புகள் பற்றிய சர்ச்சைக்குரிய துறைகளில் எடுக்கப்படும் முடிவுகள் இணக்கமானவையாக இருக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியிருப்பதையும், ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களை அரசியல் சட்டம் வழங்கியிருந்தாலும், மாநில அரசுகளும் இறையாண்மை கொண்டவை என்பதை பல்வேறு காலங்களிலும் வழங்கிய தீர்ப்புகளில் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். (Riding roughshod over State Governments- THE HINDU May 13, 2020) 
 

http://onelink.to/nknapp

 

தற்சார்பு-உள்நாட்டுச் சந்தை-தன்னிறைவு உள்ளிட்டவை இந்திய ஒன்றிய அரசுக்கு மட்டும் உரியவையன்று. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அவை உண்டு. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே கூட்டாட்சித் தத்துவம்தான். இதனையும் உச்சநீதிமன்றம் பலமுறை நினைவுபடுத்தியுள்ளது. அதை மறந்தும் மறுத்தும், மாநில அதிகாரங்களைப்  பறித்துக்கொண்டு, ‘எல்லாமே நான்தான்’ என மத்திய அரசு செயல்படுவது என்பது தற்சார்பு அல்ல, ஜனநாயக விரோதம் கரோனாவை விட கொடூரம். 



 

 

Next Story

சர்ச்சையான முன்னுரை; மோடி நூல் வெளியீட்டில் பங்கேற்காத இளையராஜா

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Ilayaraja not participate modi and ambedkar book launch

 

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு  இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்தனர். இதன்பிறகு  இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகம் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற  விழாவில் புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், குஷ்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

 

 

Next Story

உங்க வாரிசுகள் ரொம்ப மோசம்... கடும் அதிருப்தியில் மோடி! கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021
ddd

 

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.

 

டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

 

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் களமிறக்கப்பட்டது. அதில் பெங்களூருவில் ஜெயச்சந்திரா என்பவர் சிக்கினார். லட்சக்கணக்கில் புதிய 2000 ரூபாய் வைத்திருந்தார் என சி.பி.ஐ. அவரை கைது செய்தது. கர்நாடகாவின் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என தமிழர் ஒருவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவருக்குப் புதிய நோட்டுகளைக் கொடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கியான தனலட்சுமி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் கர்நாடகா வங்கி அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.

 

ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரி அவர். ராமலிங்கம் என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என அறியப்பட்ட அவர், கர்நாடகாவில் சாலை போடும் பணியை செய்துவருகிறார் என சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திருமணம் செய்துள்ள திவ்யாவின் இளைய சகோதரியான சரண்யாவை திருமணம் செய்தவர். அவர் பெயர் சந்திரகாந்த் ராமலிங்கம். அதாவது எடப்பாடியின் மகனின் சகலை. அவர் நடத்திவரும் கம்பெனியின் உரிமையாளர் மிதுனின் மாமனாரான ராமலிங்கம்.

 

2018-ஆம் ஆண்டு எஸ்.கோபி என்கிற சாலை போடும் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 200 கோடி பணத்தை ரெய்டுக்குப் பயந்து 14 பி.எம்.டபுள்யு காரில் பதுக்கி வைத்தது இந்த கம்பெனி. 12,000 கோடி ரூபாய்க்கு சென்னையில் புறவழிச் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றிருந்தது. 5000 கோடிக்கு மாநிலம் முழுவதும் சாலை அமைத்துக் கொண்டிருந்தது இந்தக் கம்பெனி. வெங்கடாசலபதி அண்ட் கோ என்கிற கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு சப்-காண்ட்ராக்ட் பெற்ற வெங்கடாசலதிபதி அண்ட் கோவின் உரிமையாளர், 2016-ஆம் ஆண்டு பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்த் ராமலிங்கம் மற்றும் எடப்பாடியின் மகன் மிதுன் ஆகியோரின் மாமனார் ராமலிங்கம்.

 

இந்த வழக்குகள் பற்றிய கவலை எடப்பாடிக்கு எப்போதும் இருந்தது. அதே 2016-ஆம் ஆண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை 20 கோடி ரூபாய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, அவரிடம் கைப்பற்றப்பட்ட 136 கோடி ரூபாய்க்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் தொடர்பிருந்தது. அதைக்காட்டி மிரட்டித்தான் ஓ.பி.எஸ். பணிய வைக்கப்பட்டார். அதேபோல் எனது உறவினர்களையும் பா.ஜ.க. அரசு வழக்குகளைப் பதிவு செய்து சிறையிலடைக்கிறது என கூவத்தூர் முகாமில் சசிகலாவிடம் வருத்தப்பட்டார் எடப்பாடி. சசிகலாவை விட்டுப் பிரிந்து பா.ஜ.க. வசம் எடப்பாடி சென்றதற்கு, இந்த வழக்குகள் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

ddd

ஒன்றிய அரசு சார்ந்த இந்த வழக்குகள் முடியவில்லை. தொடர்ந்து தலைவலியாகவே எடப்பாடிக்கு இருந்துவருகிறது. அதில் ஒரு முடிவு ஏற்படுவதை பா.ஜ.க. விரும்பவேயில்லை. அடிக்கடி புண்ணை குத்துவதைப் போல எடப்பாடியை பா.ஜ.க. காயப்படுத்தி வந்தது. இதை பொறுக்க முடியாத எடப்பாடி, பலமுறை மோடியிடமும் நிர்மலா சீதாராமனிடமும் முறையிட்டார். ஆனால் பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் சொன்ன சசி இணைப்பு உட்பட, சீட் ஒதுக்கீடு என அனைத்திலும் முரண்டுபிடித்தார் எடப்பாடி.

 

தேர்தலில் எடப்பாடி தோற்றதும், மறுபடியும் எடப்பாடிக்கு எதிராக வழக்கை பா.ஜ.க. கையிலெடுத்தது. அத்துடன், எடப்பாடி அமைச்சரவையில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது வருமானவரித்துறை எடுத்த ரெய்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டது. அதேநேரத்தில் தி.மு.க.வுடன் பா.ஜ.க. நெருக்கம் காட்டி கலைஞரின் படத்தை திறக்க ஜனாதிபதியை அனுப்பி வைத்தது. ஜெ.வின் படத்தை திறக்க பிரதமரை அழைத்தும் வரவில்லை. ஜெ.வை ஊழல் குற்றவாளி என மோடி அன்று சொன்னார். இப்போது எடப்பாடி குடும்பம் சார்ந்த ஊழல் வழக்குகளையும் கிளறுகிறார்.

 

அதுபோலவே ஓ.பி.எஸ்.ஸின் இரு மகன்களான ரவீந்திரநாத் எம்.பி, ஜெய்பிரதீப் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால், அது குறித்தும் டெல்லி சந்திப்பின்போது மோடி கடுமை காட்டியிருக்கிறார். அத்துடன் சசிகலா விவகாரம் உட்பட அனைத்தையும் பேசி முடிக்கத்தான் அவசர அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டனர் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

ddd

ஒருபக்கம் தி.மு.க. எங்களை ஊழல் குற்றம்சாட்டி தாக்குகிறது. அந்தவேளையில் மத்திய அரசு, அ.தி.மு.க.வினர் மீதான வருமானவரித்துறை வழக்குகளை வேகப்படுத்தி நோட்டீஸ்கள், சம்மன்கள் அனுப்புவது எந்தவிதத்தில் நியாயம் என மோடியிடம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாகக் கெஞ்சிக் கேட்டார்கள். ஓ.பி.எஸ்.ஸின் மகன், எடப்பாடியின் மகன் ஆகிய இருவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என மோடி அதிருப்தி தெரிவித்தார். தி.மு.க.வின் ரெய்டுகளுக்கு எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. சசிகலா விவகாரத்தில் நீங்கள், நாங்கள் சொன்னதை கேட்கவில்லை என அதிருப்தியை தெரிவித்தார். பஞ்சாயத்து அமித்ஷா வசம் சென்றது. அமித்ஷாவும் மோடி சொன்னதையே திருப்பிச் சொன்னார். எங்களை ஏன் தாக்குகிறீர்கள்? என எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் கூறியதைக் கேட்க, பஞ்சாயத்து தலைவராக நிதியமைச்சர் நிர்மலாவுக்கு உத்தரவிட்டனர் மோடியும் அமித்ஷாவும்.

 

இருவரின் பேச்சைப் பொறுமையாகக் கேட்ட நிர்மலா, "இந்த வழக்குகளில் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அந்த துறைகள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என பதில் சொல்லிவிட்டார். நிர்மலா சொன்ன பதில் மோடியும் அமித்ஷாவும் சொன்ன பதில், என்பதைப் புரிந்துகொண்ட ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும், இனிமேல் நாம் ஒற்றுமையாக இருப்போம். அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. நம்மிடம் வரவேண்டும். அப்பொழுது பேசிக்கொள்ளலாம்'' என முடிவு செய்து சென்னைக்குத் திரும்பினர்.

 

"அந்த ஒற்றுமை உணர்வு அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் ஓ.பி.எஸ். சசிகலா பற்றி அளித்த பேட்டியிலும் எதிரொலித்தது' என நடந்ததை சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

இதற்கிடையே, இனி தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேதான் போட்டி என தமிழக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இதில் என்ன செய்வது என குழப்பத்தில் அ.தி.மு.க. ஆழ்ந்துள்ளது.