Skip to main content

40 ஆண்டு காலமாக இந்திய அரசியலை ஆளுமை செய்யும் வெங்காயத்தின் கதை!

இந்திய அரசியலில் வெங்காயம் செய்த அரசியல் என்பது மிகப்பெரியது என்றால் பலரால் அதை நம்ப முடியாது. பல முறை புதிய பிரதமர்களையும், முதல்வர்களையும் உருவாக்கி உண்மையான ராஜகுரு நான்தான் என்று பலமுறை நிரூபித்துள்ளது வெங்காயம்.  அந்த நீண்ட நெடிய வரலாறை அறிய கிட்டதட்ட 40 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல வேண்டும். எமர்ஜென்ஸி தந்த வலியால் 1977 ஆம் ஆண்டு நாடு மொராஜ் தேசாய் என்ற புதிய பிரதமரை உருவாக்கிய நேரம் அது. 500 நாட்கள் கடந்து ஆட்சி நிர்வாகம் அமைதியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், 79ம் ஆண்டின் இறுதியில் ஜனதாவில் பிளவு ஏற்படவே மொராஜ் சேதாய் பதவி விலகினார். புதிய பிரதமராக சரண் சிங் தேர்வானார். அதுவரை மக்களும், கூட்டணி கட்சிகளுமே பிரதமர்களை தீர்மானித்து வந்த நிலையில், முதல் முறையாக வெங்காயம் அரசியல் களத்தில் குதித்தது. அதுவரை சராசரி விலையில் விற்றுவந்த வெங்காயத்தின் விலை, தங்கத்தின் விலைபோல அதிரடியாக கூடியது.

 

sfg
சில நாட்களில் காட்சிகள் மாறும் என்று எதிர்பார்த்த அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது வெங்காயம். அனுதினமும் வெங்காயத்தின் விலை புதிய உச்சத்திற்கு சென்றது. மக்கள் செய்வதறியாது கையை பிசைந்தனர். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்ற வசனத்தை போல பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களில் குதித்தார்கள். அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் கையை பிசைந்தார்கள். இது ஒருபுறம் என்றால், 77ம் ஆண்டு அடைந்த தேர்தல் தோல்வியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் இருந்த, இந்திரா காங்கிரஸ் தலைவர்களுக்கு வெங்காயத்தின் விலை ஏற்றமும், அதனை சந்திக்க முடியாமல் ஆட்சியாளர்கள் தவிப்பதும் அரசியல் ரீதியாக தங்களுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக பார்த்தனர். தங்களை மக்கள் முன் மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள இதைவிட சிறந்த வாய்ப்பு எதுவும் அமைத்துவிட போவதில்லை என்பதை உறுதியாக நம்பினர். 

 

களத்தில் குதித்தார் இந்திரா. ஏழைபாழைகளின் எளிய உணவான வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த கூட தகுதியில்லாத இந்த அரசாங்கம் மக்களுக்காக என்ன செய்துவிட போகிறது என்று கேள்வி எழுப்பினார். இவரின் கேள்வி ஏற்கனவே விலை உயர்வால் வருத்தத்தில் இருந்த மக்களிடம் அரசுக்கு எதிரான கோபமாக மாறியது. வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் நிலை மாறி வெங்காயத்தை வாங்க செல்லும் மக்களுக்கும் கண்ணீர் வரும் என்ற நிலைக்கு, அன்றைக்கு வெங்காயத்தின் விலை புதிய உச்சத்துக்கு சென்றது. நான் வந்தால் வெங்காய விலை உயர்வு காணாமல் போகும் என்று சாவால் விட்டார் இந்திரா. அன்றைய அரசியல் சூழலும் இந்திராவுக்கு சாதகமாக, ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக சரண் சிங் பதவி விலகினார். இந்திராவின் பேச்சை நம்பிய மக்கள் 80-களில் வந்த பொதுத்தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வெற்றியை பரிசாக கொடுத்து மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைத்தனர். பிரதமர் பதவியில் அமர்ந்த இந்திரா, வெங்காய விலை உயர்வு சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிய வெங்காய முதலாளிகள் குடோன்களில் பதுக்கிய வெங்காய மூட்டைகளை சந்தைக்கு கொண்டுவந்தார்கள். வெங்காய விலை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. " மிசாவில் அரசியல்வாதிகளை பந்தாடிய இந்திரா, எங்களை தூக்கி வெங்காய குண்டர்கள் என்று சொல்லி உள்ளே போட எவ்வளவு நேரம் ஆகிவிட போகிறது" என்று வெங்காய பதுக்கல்காரர்கள் வெளிப்படையாக கூறியதே வெங்காய விலை உயர்வுக்கு எது காரணம் என்று நாம் அறிந்துகொள்ள போதுமானது. 

 

ghஇந்திய அளவில் வெங்காயம் இந்த அதிரடிகளை நிகழ்த்தியுள்ளது என்றால், தில்லி மாநில அரசியலில் வெங்காயம் ருத்ரதாண்டவம் ஆடியது என்றுதான் சொல்லவேண்டும். 93ம் ஆண்டு தில்லி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, தன்னுடைய முதல்வர்களை ஒருபுறம் மாற்றிகொண்டே வந்த நிலையில், வெங்காயத்தின் அதிரடி விலை  உயர்வு அவர்களின் ஆட்சியையே மாற்றியது. காங்கிரஸ் கட்சிக்கும் வெங்காயத்துக்கும் என்ன நெருக்கமோ தெரியவில்லை, எப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தை இழந்து நிற்கும் சூழல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஆபத்தாண்டவனாக வெங்காயம் துணை நிற்கிறது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெங்காயம், தில்லி மாநில அரசிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தில்லி மாநில முதல்வராக இருந்த மறைந்த சுஷ்மா சுவராஜிவிடம் இருந்த தில்லி மாநில ஆட்சியை பறித்த வெங்காயம், காங்கிரஸின் ஷீலா தீட்சித்திடம் மடைமாற்றியது. இவ்வாறு வெங்காயம் ஆடிய அரசியல் ஆட்டம் என்பது பொதுமக்களுக்கு இணையாக அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது என்றால் அதில் இருவேறு மாற்றுக்கருத்து இடமிருக்காது என்பதே எதார்த்த உண்மை!


 

 

இதை படிக்காம போயிடாதீங்க !