/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/one stop centre 01.jpg)
பாலியல் துன்புறுத்தலோ, வரதட்சணைக் கொடுமையோ எதுவாகிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உற்ற தோழியாய் உடன் இருந்து உதவ சேலத்தில் 'ஒன் ஸ்டாப் செண்டர்' என்ற பிரத்யேக உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
புகுந்த வீட்டில் கணவர் மற்றும் மாமனார், மாமியார், கணவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க இந்திய அரசு ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ஐ அமல்படுத்தி உள்ளது. வரதட்சணை கொடுமைகள் குறித்த புகார்களை மட்டும் விசாரித்து வந்த இ.த.ச. பிரிவு 498ஏ&இல் இருந்து இந்த சட்டம் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட சமூகநல அலுவலர் தலைமையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகார்களை குறித்து விசாரிக்க ஒரு பாதுகாப்பு அலுவலர் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தவிர, கள அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு அலுவலரின் ஒப்புதலின்றி விவாகரத்து வழக்குகள்கூட நேரடியாக நீதிமன்றத்தில் தொடர முடியாது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/one stop centre 02.jpg)
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக தமிழக சமூகநலத்துறை இன்னொரு புதிய பாதையிலும் தடம் பதித்துள்ளது. முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 'ஒன் ஸ்டாப் செண்டர்' (One Stop Centre) (சுருக்கமாக, ஓஎஸ்சி!) என்ற பெயரில் உதவி மையங்களை தொடங்கியுள்ளது.
மற்ற மாவட்டங்களில் அண்மையில் இந்த உதவி மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், சேலத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் 'ஒன் ஸ்டாப் செண்டர்' செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலத்தில் இப்போதைக்கு இந்த ஓஎஸ்சி உதவி மையம், அம்மாபேட்டையில் உள்ள மாநகராட்சி அண்ணா மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
உற்றார், உறவினர்களால் துரத்தப்பட்டு, புகலிடம் தேடி வரும் அபலைப்பெண்களுக்கு ஆபத்பாந்தவனாய் வந்து உதவ காத்திருக்கிறது இந்த உதவி மையம். சொல்லப்போனால் இந்த மையங்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உற்ற தோழி எனலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/one stop centre 03.jpg)
ஓஎஸ்சி மூலமாக, பாதுகாப்பிற்கான அவசர சேவைகள், மருத்துவ வசதி, காவல்துறையில் புகார் கொடுக்கும் வசதி, தங்கும் வசதி, சட்ட உதவி, மனநல ஆலோசனை, காணொளி மூலம் உரையாடும் வசதி ஆகிய ஏழு வகையான சேவைகளை எந்தவித கட்டணமுமின்றி வழங்கப்படுகிறது. இவற்றில் உணவு உபசரிப்பும், உடைகளும்கூட அடங்கும். பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகபட்சமாக ஐந்து நாள்கள் வரை இந்த மையத்தில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்போதைக்கு சேலம் ஓஎஸ்சி உதவி மையத்தில் ஐந்தே ஐந்து படுக்கைகள் மட்டுமே உள்ளன. இந்த உதவி மையத்தில் தங்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஐந்து நாள்களுக்குள் உரிய தீர்வுகள் கிடைக்காதபட்சத்தில், ஓமலூரில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற 'ஸ்வேதார்' காப்பகத்திற்கு அனுப்பி தங்க வைக்கப்படுவர்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சமூகநலத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பாதிக்கப்பட்ட பெண் யாராக, எந்த ஊராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக தங்குவதற்கும், இதர சட்ட உதவிகளை வழங்கவும் ஓஎஸ்சி உதவி மையம் தயாராக இருக்கிறது. இந்த மையத்திற்கென பிரத்யேக பெண் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/one stop centre 04.jpg)
ஆரம்ப நிலையில், இப்போதைக்கு சேலம் அம்மாபேட்டையில் மட்டும் ஒரே ஒரு 'ஒன் ஸ்டாப் செண்டர்' உதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தொடங்க வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் இதுபோன்ற உதவி மையத்தின் சேவையைப் பெற, 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. சேலத்திலும் அதுபோன்ற வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு போலீசாருக்கான அவசர உதவி எண் 100 மூலம் தொடர்பு கொண்டாலோ, மாவட்ட ஆட்சியர், சமூகநலத்துறை அலுவலக எண்களைத் தொடர்பு கொண்டாலோ ஓஎஸ்சி உதவி மையங்களின் சேவைகளைப் பெற முடியும்,'' என்றனர்.
Follow Us