ADVERTISEMENT

சொற்களை ஒதுக்கி செயலில் பதில் சொல்லும் முதல்வரின் ஒரு மாத ஆட்சி..!

03:32 PM Jun 07, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


வெறும் டிவி சேனல்களுக்குப் பேட்டிக் கொடுத்துக்கொண்டு, வீடியோக்களை வெளியிட்டுக்கொண்டு சொற்களால் தன்னை அலங்கரித்துக்கொள்ளாமல், ஆட்சி பொறுப்பேற்று தனது முதல் ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலேயே, “அரசு அதிகாரிகள் பொய் சொல்ல வேண்டாம்... வீண் புகழ்ச்சி வேண்டாம்... உண்மையைச் சொல்லுங்கள்...” என செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தினார் மு.க. ஸ்டாலின். தற்போது இன்று (7/6/21) அவரது ஒரு மாத ஆட்சிக் காலத்தில் அவரின் செய்லபாடுகள் எப்படி இருந்தது, என்ன செய்தார். கொஞ்சம் திரும்பி பார்ப்போம்.

ADVERTISEMENT


“மற்றும் ஓர் ஊரடங்கை மக்களால் தாங்க முடியாது..” எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் சொன்னது. மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முதல்வராக மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பதவியேற்றார். எப்போதும் ஆட்சி பொறுப்பேற்கும் கட்சிக்கு கஜானா காலியாகி நிதி பற்றாக்குறை இருக்கும். அதே பிரச்சனை மே 7 அன்று பதவியேற்ற திமுகவிற்கும் இருந்தது. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்நேரத்தில் திமுகவின் ஆட்சியும், முதலமைச்சர் ஸ்டாலினின் செயற்பாடுகளும் எப்படி இருக்கின்றன என சமூகவலைதளங்களில் கருத்துகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் மு.க. ஸ்டாலின், மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாலையிலிருந்தே தனது செயற்பாடுகளைத் துவங்கிவிட்டார். முதலமைச்சர் பொறுப்புடன் மே 7இல் இருந்து தனது செயற்பாடுகளைத் துவங்கினார் ஸ்டாலின்.


நாடே அறிந்ததுதான், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் நான்கு திமுகவின் தேர்தல் வாக்குறுதி. ஐந்தாவது கையெழுத்து, விளிம்பு மற்றும் நடுத்தர மக்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலவுகளை அரசே ஏற்கும் என்ற திட்டம்.

மே 8ஆம் தேதி தமிழகத்தின் கரோனா பாதிப்பு 27,397. தலைநகர் சென்னையில் மட்டும் 6,846 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. கரோனா இரண்டாம் அலையில் நோய்த் தொற்று பரவலுடன் சேர்ந்து தமிழ்நாடு அரசு அதிகப்படியான உயிரிழப்புகளையும் சந்தித்தது. ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் மே மாதத்தில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தை அடையும் என அறிவித்திருந்தனர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர ஆயுதமாக பயன்படுத்தியது ஊரடங்கு. தடுப்பூசிகள், நோய்த் தொற்றை தடுக்க பயன்படுத்தப்பட்டாலும், முழு ஊரடங்கு மூலம் கரோனா சங்கிலியை உடைத்து பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

ஏப்ரல் இறுதியில், மற்றும் ஓர் ஊரடங்கை மக்களால் தாங்க முடியாது என அறிவித்திருந்த மு.க. ஸ்டாலின், மக்களின் உயிர்களைப் பாதுகாக்க மே. 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தார். அதோடு திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் பிறந்தநாள் அன்று துவங்கவிருந்த கரோனா நிவாரண நிதி திட்டத்தை முன்கூட்டியே தருவதாகவும், அது இரண்டு தவணைகளாக தரப்படும் என்றும் அறிவித்து 2,000 ரூபாயை மே 10ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். கரோனா பரவலைத் தடுத்தும், மக்களைப் பெரும் சிரமத்துக்குள்ளாக்காமலும் செயல் திட்டங்களை வகுத்தார்.

தங்கள் நேசத்திற்குரியவர்களின் உயிர்களைக் காக்க தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ரெம்டெசிவர் மருந்துக்காக மக்கள் 24 மணி நேரமெல்லாம் வரிசையில் நின்றனர். பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் அங்கு வீணானது. செய்திகளில் தினமும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் வெளியில் நிற்கும் கூட்டம் செய்தியானது. இதனைக் கவனித்த தமிழ்நாடு அரசு, ரெம்டெசிவர் மருந்து சேலம், கோவை உட்பட சில மாவட்டங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தது. அப்போதும் மக்களின் வேதனை அடங்கவில்லை. இதனைக் கவனித்த அரசு சில தினங்களில், தனியார் மருத்துவமனைகள் இணையம் மூலம் பதிவுசெய்து மருத்துவமனை நபர்களே தேவையான மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டது. உயிர் காக்கும் மருந்து எனச் சொல்லப்படும் ரெம்டெசிவர் விற்பனையகம் முன் அதன் பிறகு கூட்டம் காணமால் போனது.

உ.பி. போல் தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது. தமிழகத்தில் சில அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு சில மரணங்களும் ஏற்பட்டன. அதனைக் களைய ஒன்றிய அரசிடம் அதிக ஆக்சிஜன் ஒதுக்க வலியுறுத்தி உடனடியாக பெறப்பட்டது. அதேவேளையில் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டது. இவையெல்லாம் திமுக தலைமையிலான அரசின் மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதுமான நம்பிக்கையை அதிகப்படுத்தியது.

கரோனா தடுப்புக்காக எத்தனை ஏற்பாடுகள் செய்தாலும் அனைத்திற்கும் நிதி தேவைப்பட்டது. ஏற்கனவே கஜானா காலி; இது மக்களுக்கான அரசு, மக்களால் ஆன அரசு என்பதுபோல், கரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வலியுறுத்தினார் ஸ்டாலின். பெறப்படும் நிதி அனைத்தும் கரோனா தடுப்புப் பணிக்கு மட்டுமே செலவிடப்படும். பெறப்படும் நிதியும், செலவினங்களும் பொதுவெளியில் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். பி.எம்.கேர் டோண்ட் கேராக்கி, சைக்கிள் வாங்கவும் மற்றும் அவர்கள் சேமிப்பில் வைத்திருந்த பணத்தை சிறுவர்கள், ஒருமாத சம்பளத்தை வழங்கிய தனியார் காவலாளி என மக்கள் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அள்ளி வழங்கினர்.


கரோனா ‘வார் ரூம்’ திறந்து கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை குறித்த தகவலை மக்கள் எளிதில் அறிய வசதி செய்யப்பட்டது. ஒருநாள் இரவு 11 மணி அளவில் திடீரென அந்த வார் ரூமை ஆய்வு மேற்கொண்டார் ஸ்டாலின். அந்த நேரத்தில் உதவிக் கேட்டு அழைத்தவரின் அழைப்பை எடுத்துப் பேசினார். இதன் மூலம், அரசு தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளில் செயல்படுகிறது என்றும், மக்களை விட்டுவிடமாட்டோம் என்ற வகையிலும் நம்பிக்கை அளித்தது. சென்னையில் ஓரளவு தொற்று பரவல் கட்டுக்குள் வர கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. உடனடியாக அம்மாவட்டங்களின் மீது தனி கவனம் செலுத்தினார். கோவை இ.எஸ்.ஐ. மருத்துவனையில் பி.பி.இ. கிட் அணிந்து கரோனா வார்டுக்குள் சென்று அனைவருக்கும் நம்பிக்கை அளித்தார்.

இதுவெல்லாம் நடந்துக்கொண்டிருக்கும்போதே செங்கல்பட்டு அருகே திருமணி பகுதியில், 100 ஏக்கர் நிலத்தில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் மத்திய அரசுக்கு சொந்தமான எச்.எல்.எல். பயோடெக் என்ற தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்து அதில் தடுப்பூசி தயாரிக்க வலியுறுத்தினார்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து பூங்காவில் நேரடி ஆய்வு நடத்தி, அங்குள்ள அதிகாரிகளிடம் என்ன நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்கள் என்பன உள்ளிட்ட விஷயங்களைக் கேட்டறிந்து அடுத்து என்ன செய்யலாம் என்பதைக் குறித்தும் கலந்தாலோசனை நடத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மே 10ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் தளர்வுகளுடனான ஊரடங்கு, அதன்பிறகு அறிவித்த முழு ஊரடங்கு, தற்போது மீண்டும் ஊரடங்கில் ஏற்படுத்தியிருக்கும் தளர்வுகள் என எதிலும், டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்காமல், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் நிவாரண நிதி முழுக்க குடும்பத்தைக் காப்பாற்றவே செலவிடும்படி மக்களை வழிநடத்திவருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தற்போது நாம் திரும்பிப் பார்த்தது அனைத்தும் கரோனாவைக் கட்டுப்படுத்த ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மட்டுமே. இது தவிர நீட், பொருளாதாரம், அறநிலையத்துறை என இன்னும் பல நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.

தேர்தலுக்கு முன் வாரிசு, நிர்வாக திறமையின்மை, ஊழல் கட்சி, ரவுடி கட்சி என பல இழிப்பெயர்களுடனும் விமர்சனங்களுடனும் ஆட்சி பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின். ஆனால், தனது சில தின ஆட்சிக் காலத்திலேயே இந்த இழிப்பெயர்களைத் திசை தெரியாமல் விரட்டியடித்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எதிர்வரிசையில் இருக்கும் அரசியலர்களின் வாய்களிலிருந்து தற்போது வாரிசு எனும் முழக்கங்கள் வருவதில்லை. மாறாக மக்கள் வாய்களிலிருந்து செயல் எனும் சொல் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது நிர்வாகத்தின் மூலம் அனைவருக்கும் பதில் சொல்லிவருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT