Skip to main content

மீண்டும் மீண்டும் பொள்ளாச்சியில் பயங்கரம்!

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

"ஐயோ... தன்யாவைக் காணோம்' என கோவை திப்பனூரில் ஒலித்த குரலும் அதைத் தொடர்ந்து அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தின் தாக்கமும்  இன்னும் அடங்கவில்லை. அதற்குள் "ஐயோ பிரகதியை காணோம்' என கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தார் பிரகதியின் அப்பாவான வெள்ளைச்சாமி. "20 வயது ஆன என் பொண்ணு இங்கே ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரியில் பி.எஸ்.சி. படிச்சுட்டு இருக்கா. அவளுக்கு நாட்டுதுரைங்கற பையனோட வர்ற ஜூன் மாசம் 13-ந் தேதி கல்யாணம் நடக்கவிருந்துச்சு. கடந்த வெள்ளிக்கிழமை 1:45 மணிக்கு என் மனைவி ராணிக்கு போன் செஞ்சா. "அம்மா, திண்டுக்கல்லுக்கு வர்றதுக்காக பஸ் ஏற நிக்கறேன்'ன்னு சொன்னா. அதுக்கப்புறம்  நிச்சயம்பண்ணின நாட்டுதுரை, என்  பொண்ணுக்கு போன்பண்ணி "எங்கே இருக்கே'ன்னு கேட்டதுக்கு "பல்லடத்துகிட்ட வந்துட்டு இருக்கேன்'னு சொல்லியிருக்கா. ஆனா, என் பொண்ணு பிரகதி இப்ப வரைக்கும் வீடு வரலைங்க'' என கண்ணீரோடு புகார் கொடுக்க... ரகசியமாய் விசாரிக்க ஆரம்பித்தது போலீஸ்.

 

pragathi



அடுத்தநாள் மாலை பொள்ளாச்சி பூசாரிப்பட்டியில் பிரகதி அரை நிர்வாணமாய் அலங்கோல நிலையில் கிடந்தாள். உடனே பூசாரிப்பட்டி லிமிட், கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், காட்டூர் போலீசுக்கு தகவல் கொடுக்க... பரபரப்பாகிவிட்டது  கோவை. பிரகதியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், கோவை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்ய உடலைக் கொடுத்தனர்.

அங்கே நம்மிடம் பேசிய பிரகதியின் அண்ணன் அரவிந்த்குமார், "சார், எங்களுக்கு டவுட் மாமா முறையில இருக்கற சதீஸ் குமார்தான். ஏன்னா அவன் தான் என் தங்கச்சியை லவ் பண்ணினான். நாலு வருசத்துக்கு முன்னால அவன் என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கறேன்னு வந்து நின்னான். ஆனா எங்க அப்பா, "என் பொண்ணை நல்லா படிக்க வைக்கணும் தம்பி... நீ  வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணிக்க'ன்னு சொல்லிட்டாரு. கோபமா அப்ப போனவன் கேரளாவுல ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிட்டான். ஆனா இப்பவும்  என் தங்கச்சி பின்னால சுத்திக்கிட்டு தான் இருக்கறான்னு கேள்விப்பட்டோம்.
 

pollachi



என் தங்கச்சியை கல்யாணம் பண்ணவிருந்த நாட்டுதுரை போன் பண்ணினப்போ... "பல்லடத்துல இருக்கறேன்'னு என் தங்கச்சி பொய் சொல்லியிருக்கா. "நாட்டுதுரை போன் பண்ணும் போது "கேரளா பார்டர்ல தான் அவ போன் டவர் காட்டி இருக்கு'ன்னு போலீஸார் சொன்னாங்க. அப்பவே நாங்க முடிவு பண்ணிட்டோம். சதீஷ்குமார்தான் கொலை பண்ணியிருக்கான்னு. ஆனா அவன் மட்டும் பண்ண வாய்ப்பில்லை. கூட எவனோ அ.தி.மு.க. கட்சிக்காரன் இருக்கான். ஆனா அவனை போலீஸ் மறைக்கிறாங்க. இன்னும் நாங்க சொன்ன அந்த சதீஷை ஏன் போலீஸ் கைது பண்ணாம  இருக்காங்கன்னு தெரியலை'' எனச்சொல்ல இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டான் சதீஷ்குமார்.

கைதான சதீஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், "நான் பிரகதியை லவ் பண்ணினேன். அவளும் லவ் பண்ணினா. அவகூட நான் ஏற்கனவே உறவுகொண்டேன். அதனாலதான் அவளை கல்யாணம் பண்ண விருப்பப்பட்டேன். ஆனா வெள்ளைச்சாமி… பொண்ணை தர மாட்டேன்னு சொல்லிட்டாரு.  நான் கேரளாக்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக் கிட்டு குழந்தை பெத்துட் டாலும் பிரகதிதான் எனக்கு உசிரு. அப்படி உசிரா இருக்கற என்கிட்டயே "நாட்டுதுரைங்கிறவரை கல்யாணம் பண்ணப் போறேன்'ன்னு பிரகதி சொன்னா. என்னால தாங்க முடியலை. பத்திரிகை கொடுக்கணும்னு சொன்னா. "நேரா வந்து வாங்கிக்கிறேன்'னு நான் சொன்னேன். காலேஜுக்கு வரச்சொன்னா. கார் எடுத்துக் கிட்டு அவளை பிக்-அப் பண்ணினேன்.  கேரளா பார்டர் பக்கம் கூட்டிட்டு போனேன். அங்க கார்ல வச்சு அவளை அனுபவிச்சேன். "நீ  யாரையும் கல்யாணம் பண்ணக்கூடாது'ன்னு சொன்னேன். ஆனா அவ, "இதுதான் கடைசி. நான் இனிமே உன்கூட வர மாட்டேன்'னு சொன்னா. என்னால தாங்க முடியலை. நான் சொல்றதுக்கு எல்லாம் எதிராவே பேசினா. அந்தக் கோபத்துலதான் கத்தியால அவ கழுத்தை அறுக்க போனேன். அவ தடுக்க ஆரம்பிச்சா. அவ விரலை கட்  பண்ணிட்டுதான்  அவ கழுத்தை அறுக்க முடிஞ்சது. என்ன பண்றது... ஏது பண்றதுன்னு தெரியாம  அவ உடம்பை ஒரு நைட்டு முழுக்க கார்ல வச்சு சுத்திட்டேயிருந்தேன். அதுக்கப்புறந்தான் பூசாரிப்பட்டியில பிரகதியை தூக்கி வீசினேன்'' என அவன் வாக்குமூலம் கொடுத்தான்.

கோமங்கலம் இன்ஸ்பெக்டர் வைரமை  தொடர்பு கொண்டோம். "சார், இப்போ எதையும் சொல்ல நேரமில்லை'' என கட் செய்துவிட்டார். ஒட்டுமொத்தமான போலீஸார் தரப்பிலோ, "பிரகதி வழக்குல இந்த சதீஷ்குமார் மட்டும்தான் சம்பந்தப்பட்டிருக்கான்' எனச் சொல்கிறார்கள். "இந்த ராமநாயக்கன் புதூர்ல இருக்கற மயானத்துல தான் என் தங்கச்சி பிரகதியை புதைச்சுட்டு இருக்கறோம். அவளை ஒருத்தன் தான் கொன்னான்னு போலீஸ் சொல்றதை நாங்க நம்பவேயில்லை. எஸ்.பி.யா இருந்த பாண்டியராஜன்தான் பொய் சொன்னாருன்னா இப்ப போட்ருக்கற போலீஸாரும் பொய் சொல்றாங்க.  நாங்க போராடுவோம்'' என்கிறார்கள் பிரகதியின் அண்ணனான அரவிந்தும், அவன் நண்பர்களும்.  பொள்ளாச்சி நிறைய உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது.