Skip to main content

சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். இருக்கை எங்கே? காத்திருக்கும் ட்விஸ்ட்!  

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

o panneerselvam and edappadi palanisamy tn assembley  issues

 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி என இரட்டை தலைமை செயல்பட்டு வந்தது. அதன் மூலம் எஞ்சியிருந்த 4 ஆண்டுகள் ஆட்சியில் இருவருமே சேர்ந்தே பயணித்தனர். ஆனால இருவருக்கும் ஒரு கட்டத்தில் நீயா நானா போட்டி நிலவவே, இரட்டை தலைமையால் எந்த முடிவும் சரிவர எடுக்க முடியவில்லை என்று கூறி மீண்டும் ஒற்றைத்தலைமை கோரி போர்க்கொடி தூக்கப்பட்டது. 

 

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியுமாகப் பிரிந்தனர். கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்ட நிலையில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராக கண்டனக் கோஷங்களை எழுப்ப, உடனடியாக மேடையிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். அதன்பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படவே அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுகவின் பொதுக்குழு கூடும் என அறிவித்தார்.

 

சொன்னபடியே ஜூலை 11 ஆம் தேதி கூட்டமும் கூடியது, இடைக்கால பொதுச்செயலாளராக இ.பி.எஸ்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதோடு, ஓ.பி.எஸிடம் இருந்து கட்சியின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமாருக்கு கொடுக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

 

இதையடுத்து கிட்டத்தட்ட கட்சி இ.பி.எஸ் வசமானது. பின்பு மார்ச் 26 தேதி உட்கட்சி தேர்தல் நடத்தி அதிமுகவின் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதும் இ.பி.எஸ். தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தார். ஆனாலும் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காமல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் என்றே குறிப்பிட்டு வந்தது. 

 

இந்த நிலையில் வரும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடவுள்ளதாகவும், அதேசமயம் அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலும் வரவிருப்பதால் கட்சி பணிகளுக்காக தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தை இபிஎஸ் நாடினார். 10 நாட்களில் இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய முடிவ எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், இன்று இ.பி.எஸ்ஸை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை தலைமை பிரச்சனையில் இரட்டை இலையை தனதாக்கிக் கொண்டுள்ளார் இபிஎஸ்.  

 

இது ஒரு புறம் இருக்க, நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இ.பி.எஸ் பக்கம் வந்தபோது எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பி.எஸ்ஸை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆக்க வேண்டும் என சபாநாயகரை சந்தித்து இ.பி.எஸ். அதிமுக தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு மவுனம் காத்து வந்த நிலையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பி.எஸ்ஸும், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இ.பி.எஸ்ஸுமே அமர்ந்திருந்தனர். இ.பி.எஸ். அதிமுக வெளிநடப்பு செய்யும்போது எல்லாம் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். சட்டப்பேரவையில் அமர்ந்து தக் லைஃப் செய்து வந்தார். 

 

o panneerselvam and edappadi palanisamy tn assembley  issues

 

2023 - 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடருக்காக சட்டமன்றம் கூடியது முதலே ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஒதுக்க வேண்டும் என இ.பி.எஸ். தரப்பிலிருந்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவிடம் மீண்டும் கோரிக்கை வைத்தார். ஆனாலும் ஓ.பி.எஸ்ஸே அந்த இருக்கையில் தொடர்ந்தார். 

 

தேர்தல் ஆணையம் இன்று (20ம் தேதி) இ.பி.எஸ்ஸை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைக் கொண்டு ஆர்.பி.உதயகுமார் அந்த இருக்கைக்கு வருவார் என அதிமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஓ.பி.எஸ். செய்த மேல்முறையீடு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அதன் காரணமாக ஓ.பி.எஸ்ஸே அந்த இருக்கையில் தொடர்வார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.  

 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் யார் அமருவார்? இ.பி.எஸ். நியமித்த ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமரவைக்கப்படுவாரா? இ.பி.எஸ். நீக்கிய ஓ.பி.எஸ்க்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கப்படும் என்பது நாளை காலை சட்டமன்றம் கூடும் போது தெரியும்.