Skip to main content

"வடகிழக்கு எரிகிறது"... ஏன்..?

Published on 12/12/2019 | Edited on 13/12/2019

"வடகிழக்கு எரிகிறது" குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து ப.சிதம்பரம் கூறிய வார்த்தைகள் இவை. இவற்றை மத்திய அரசை நோக்கிய ப.சிதம்பரத்தின் விமர்சனமாக மட்டுமல்லாமல், வடகிழக்கின் களநிலவரத்தை வெளிக்கொணரும் ஒரு கூற்றாகவே பார்க்க வேண்டியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை வடகிழக்கு இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்திருத்தம். அதிலும் குறிப்பாக போராட்டங்களின் தலைநகராக மாறியிருக்கிறது அசாம் மாநிலம். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் வீதியில் நின்று போராடுகிறார்கள், உரிமைகளை பறிக்காதீர்கள் என கோஷமிடுகிறார்கள், 144 தடை உத்தரவை மீறியும் போராட்டங்கள் தொடர்கின்றன. மறுபுறம் ஜம்மு காஷ்மீரில் உள்ள துணை ராணுவப்படைகள் அசாம் நோக்கி நகருகின்றன, இணைய சேவைகள் முடக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். இப்படி மக்களை வீதி வரை அழைத்து வரும் அளவு இந்த மசோதாவில் என்ன இருக்கிறது? ஜம்மு காஷ்மீரில் உள்ள துணை ராணுவப்படையை மத்திய அரசு அசாமை நோக்கி அனுப்பி வைக்க என்ன காரணம்..?

 

north east states reaction on citizenship amendment bill

 

 

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ராமர் கோவில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றிற்கு அடுத்து மிக முக்கியமானது என்றால் இந்த குடியுரிமை மசோதா எனலாம். மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று முழு பலத்துடன் ஆட்சியில் அமர்ந்த பாஜக, மேலே கூறியவற்றில் முதல் இரண்டு வாக்குறுதிகளையும் கிட்டத்தட்ட நிறைவேற்றியுள்ள நிலையில், தற்போது இந்த மூன்றாவது வாக்குறுதியையும் நிறைவேற்றும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு விவகாரங்கள் தொடர்பான முடிவுகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட இன்று இந்த மசோதா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிகம். அதற்கான முக்கிய காரணம், இந்த மசோதாவால் பலனடையப்போகும் மற்றும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் மக்களின் எண்ணிக்கை மற்ற இரண்டு விவகாரங்களால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிக அதிகம் எனலாம். 

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாத மற்ற மதத்தினரான இந்து, பௌத்தர்கள், கிறிஸ்தவர், பார்சி, மற்றும் ஜைனர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இஸ்லாமியர்கள் ஏன் இதில் சேர்க்கப்படவில்லை..? இந்தியாவின் 14ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு மீறுகிறது. இந்துக்களில், இலங்கை இந்துக்களுக்கு மட்டும் சட்டம் பொருந்தாது என்பது எந்த வகையில் நியாயம்..? உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகளுடன் பல மணிநேரங்கள் காரசார விவாதம் நடந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த இதன் மீதான வாக்கெடுப்பில், மசோதாவிற்கு எதிராக 80 வாக்குகளும், ஆதரவாக 311 வாக்குகளும் கிடைத்தது. மசோதா நிறைவேற்றப்பட்ட அதேநேரம் அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் கூட்டம் வீதிகளில் போராட துவங்கியிருந்தது. 

 

north east states reaction on citizenship amendment bill

 

போராட்டங்களை அடக்க உத்தரவிட்ட பாஜக அரசு மறுபுறம் மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி புதன்கிழமை காலை மாநிலங்களவையில் இந்த மசோதாவை அமித்ஷா அறிமுகம் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையில் இந்த மசோதா மீது கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. பாஜகவின் உறுப்பினர்கள் பலத்தால் மாநிலங்களவையிலும் மசோதா எளிதாக நிறைவேறியது. இதன்பின்னர், பரவிக்கொண்டிருந்த போராட்டத்தின் வேகமும் அதிகரித்தது. இந்தியாவின் தெற்கு, மேற்கு, வடக்கு போன்ற பகுதிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத இந்த மசோதா வடகிழக்கு இந்தியாவை மட்டும் இவ்வளவு அச்சுறுத்த காரணம் என்ன..? 

வங்கதேசத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் வந்து குடியேறி தங்களது கலாச்சாரம், மொழி, வேலை வாய்ப்பு, கல்வி உரிமை உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளையும் அந்நாட்டவர்கள் பறிக்கின்றனர் என்பது வடகிழக்கு இந்திய பூர்வக்குடிகளின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு இன்றோ, நேற்றோ ஆரம்பித்ததல்ல. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது லட்சக்கணக்கான மக்கள் இரு நாடுகளுக்கும் இடையே புலம் பெயர்ந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசத்திலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய நிலப்பகுதிக்குள் குடியேற ஆரம்பித்தனர். மத வேறுபாடு இன்றி இஸ்லாமியர்கள், இந்துக்கள் என இருமதத்தினரும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து வாழ தொடங்கினர். 1948 முதல் வங்கதேசம் தனி நாடாக பிரிக்கப்பட்ட 1971 ஆம் ஆண்டுவரை உள்ள காலங்களில் அதிக அளவிலான மக்கள் வடகிழக்கு இந்தியாவிற்குள் குடியேறினர். இந்த குடியேற்றத்தால் கலாச்சார ரீதியிலும், வேலைவாய்ப்பு ரீதியிலும் அங்குள்ள பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுபவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. 

 

north east states reaction on citizenship amendment bill

 

இந்த தொடர் குடியேற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களின் வாக்கு அரசியலிலும் பிரதிபலிக்க ஆரம்பித்திருந்தன. அப்படி 1978 -ல் அசாம் மாநிலத்தில் இடைத்தேர்தல் ஒன்றில் அதிக அளவிலான வாக்காளர்கள் வங்கதேச குடியேறிகள் என கண்டறியப்பட்டது. இதனால் அங்கு தொடங்கிய மாணவர் போராட்டம் அடுத்த 6 ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து மிகப்பெரிய மக்கள் எழுச்சியாக மாறியது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அன்றைய ராஜிவ் காந்தி அரசு, அசாம் போராட்ட அமைப்புகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதுதான் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம். அதன்படி 1971, மார்ச் 24 க்கு முன்னர் இந்தியாவில் தங்கள் இருப்பை நிரூபிக்க முடிந்தவர்களை தவிர மற்ற அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என முடிவெடுக்கப்பட்டது. பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்னர் சமீபத்தில் மீண்டும் இந்த திட்டத்தை கையிலெடுத்து சில மாற்றங்களோடு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது  பாஜக அரசு.

இந்த சூழலில் தற்போது பாஜக கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டதிருத்தத்தால், வடகிழக்கு பகுதிகளில் குடியேறிய வங்காள மக்கள் பெரும்பாலானோர் குடியுரிமை பெறுவதால், பூர்வீக வடகிழக்கு பழங்குடிகளின் உரிமைகள் பறிக்கப்படலாம் என்ற அச்சம் அம்மாநிலங்களை சேர்ந்த மக்கள் மத்தியில் நிலவுகிறது. Inner line permit (ILP) என்று அழைக்கப்படும் தனிப்பட்ட அந்தஸ்து காரணமாக இம்மாநில பகுதிகளுக்கு இந்த குடியுரிமை சட்டதிருத்தம் பொருந்தாது என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இன்று மாநிலத்தின் ஒரு பகுதியில் வாழ்வதாக குடியுரிமை பெற்று, வரும்காலங்களில் ILP பகுதிகளுக்கும் அம்மக்கள் குடிபெயரக்கூடும் எனவும், இதன் காரணமாக பழங்குடியினர் பாதிக்கப்படுவர் எனவும் கூறும் மக்கள், சமாதானங்களை ஏற்க மறுக்கின்றனர். அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களின் பகுதிகளை இந்த சிறப்பு அந்தஸ்து பாதுகாத்தாலும், எதிர்கால புலம்பெயர்வுகளை எண்ணி அம்மக்கள் இந்த புதிய குடியுரிமை மசோதாவை ஏற்றுக்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல அசாம் ஒப்பந்தத்தின் ஆறாவது பிரிவால் அசாம் மாநிலத்தின் சில பகுதிகள் இந்த சட்டத்தின் கீழ் வராது என்றாலும், அந்த ஒப்பந்தமே இந்த புதிய மசோதாவால் நீர்த்துப்போகும் என்கின்றனர் அசாம் மக்கள். 

 

north east states reaction on citizenship amendment bill

 

மசோதா தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்தவே ஜம்மு காஷ்மீரை விடுத்து துணைராணுவத்தை வடகிழக்கு நோக்கி திருப்பியது மத்திய அரசு. போராட்டங்கள் ஒருபுறம் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டு இருந்தாலும், மறுபுறம் இதற்கு எதிரான மக்கள் போராட்டமும் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது எனலாம். "மதரீதியிலான குடியுரிமை என்பது சட்டத்தை அவமதிப்பது, இஸ்லாமியர்களை ஒதுக்கியுள்ளது தவறு" என எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் கூறினாலும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பது அப்பட்டமானதே. எது எப்படியிருப்பினும் லட்சக்கணக்கான வங்கதேச குடியேறிகள், கோடிக்கணக்கான பூர்வீக இந்திய குடிமக்கள் ஆகியோரின் வாழ்வினை மாற்றியமைக்கப்போகும் இப்படிப்பட்ட ஒரு மசோதாவில், மத்திய அரசின் எதிர்காலம் குறித்த பார்வையும் இன்றியமையாத ஒன்று என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

 

 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.