Skip to main content

அன்று குளம் மீட்பு... இன்று பனைத்திருவிழா... சொந்த செலவில் அசத்தும் கிராம இளைஞர்கள்!

Published on 04/12/2020 | Edited on 06/07/2021

 

youth

 

 

அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் என்கிறார் வள்ளுவர். ‘தக்க தருணம் அறிந்து ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயலென்று ஏதும் உண்டா' என்பது இதற்கான விளக்கம். இக்குறளுக்கான ஆகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது இந்த இளைஞர்படையும் அவர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டு வரும் இந்த ஊரின் மூத்தோர்படையும்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது நூர்சாகிபுரம் என்ற குக்கிராமம். இக்கிராமத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சமூக வலைதளமான வாட்ஸ்அப் வாயிலாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் இளைஞர்களால் துவங்கப்பட்ட 'தூய்மை நூர்சாகிபுரம்' என்ற குழு மரம் நடுதல், குளம் குட்டைகளைத் தூர்வாருதல், கிணற்றைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் முழுவீச்சுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது பனை விதைப்புத்திருவிழா என்ற ஒரு நிகழ்வை நடத்த இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. அந்த ஊரை நோக்கி ஒரு விசிட் அடித்தோம்.

 

அடுத்த சில ஆண்டுகளில் பெருமரமாக எழுந்து நிற்கக்கூடிய செடிகளை வழியெங்கும் ஆங்காங்கே காணமுடிந்தது. ஊருக்குள் நுழைந்ததும் வருவோரை வரவேற்கும் விதமாக காமராஜர் சிலை ஒன்று இருந்தது. அதைத் தாண்டி பயணப்பட்டு பனை விதைப்புத்திருவிழா நடைபெறும் இடத்தை வந்தடைந்தோம்.

 

 

village

 

 

கடப்பாரை, மண்வெட்டிகளைச் சுமந்துகொண்டு இளைஞர்கள் நடைப்பயணமாகவும், பனை விதைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு சிறுவர்கள் சைக்கிள் பயணமாகவும் உற்சாகமாகப் புறப்பட்டார்கள். கண்மாய் கரைகள், சாலையோரங்கள் எனப் பரவலாக விதைக்க ஆரம்பித்தார்கள். புதர் மண்டிக்கிடந்த கரையோரங்களில் சில சிறுவர்கள் சிறிதும் பயமின்றி இறங்கியேறினார்கள். இடையிடையே தேநீரும், தின்பண்டங்களும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தம் நான்கு நாட்கள் நடந்த நிகழ்வில் ஆயிரம் பனைவிதைகள் விதைக்கப்பட்டன.   

 

அந்த ஊரின் இந்து தொடக்கப் பள்ளி ஆசிரியரான ஜஸ்டின் தங்கராஜன் இது குறித்து நம்மிடம் பேசுகையில். "பனைமரம் என்பது தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது. ஆனால், இன்று அவை அழிவின் விளிம்பில் உள்ளன. இதை மீட்டெடுக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டோம். கடந்த முறை எந்த மெனக்கெடலும் இல்லாமல் நண்பர் ஒருவர் மூலமாக கிடைத்த பனைவிதைகளை விதைத்தோம். அதில் கிட்டத்தட்ட 30 விதைகள் துளிர்விட்டுள்ளன. அது எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அதைப் பார்க்கும் போது எங்கள் ஊரில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானதைப்போல உணர்கிறோம். ஆகையால், முறையாகத் திட்டமிட்டு இதை ஒரு நிகழ்வாக நடத்த இம்முறை முடிவெடுத்தோம். எங்கள் ஊரைச் சேர்ந்த து.அர்ஜுனன் என்பவர் ஆயிரம் விதைகளை எங்கள் குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார். அப்படித்தான் இந்த நிகழ்வு தொடங்கியது" என்கிறார்.

 

 

palm
                                                   துளிர்விட்டுள்ள பனை 

 

பொதுவாக மரம் நடும் விழாக்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். சாலை ஓரங்களில் நட்டு அதற்கு வேலி அமைப்பார்கள். அதன்பிறகு அது கவனிப்பற்றுக் காய்ந்துவிடும். சாதாரண என்ஜிஓ-க்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களின் பிறந்தநாளுக்காக நடத்தப்படும் விழாக்கள் வரை இதுதான் யதார்த்தம். ஆனால், இவையனைத்தில் இருந்தும் இந்த இளைஞர்கள் குழு வேறுபட்டு நிற்கிறது. சாலை ஓரங்களில் விதைக்கப்பட்ட விதைகள், சாலையிலிருந்து 6 முதல் 7 அடி தள்ளியே விதைக்கப்பட்டன.

 

இது குறித்து நாம் கேட்ட போது, "எதிர்காலத்தில் காலத்தின் கட்டாயமாக சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிவரும். நாங்கள் இன்று மரம் நடுவதே எங்கள் எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்படவேண்டும் என்றுதான். ஆகையால், சாலையிலிருந்து சற்று தள்ளியே விதைக்கிறோம். அடுத்து வரும் தலைமுறைகளின் காலத்தில் இவையனைத்தும் சாலையையொட்டிய மரங்களாக ஓங்கி உயர்ந்து நிற்கும்" எனத் தொலைநோக்கோடு விளக்குகிறார் ஜஸ்டின் தங்கராஜன்.

 

நான்கு நாட்கள் நிகழ்வின்போது, ஒவ்வொரு நாளும் வேறுவேறு இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்களைப் பார்க்க முடிந்தது. மேலும், நிகழ்வு நடந்து கொண்டிருந்த போதே ஒருவர் 'அண்ணா.. எனக்கு ஆன்லைன் கிளாசுக்கு டைம் ஆச்சு...' என விடைபெற்றுச் சென்றார். இது குறித்து நாம் கேட்டதற்கு, "இன்று ஒருவர் வந்து வேலை செய்வார். மறுநாள் அவருக்கு வேறு ஏதாவது வேலை இருக்கும். அதனால் அவரால் வர முடியாது. இவர்தான் பங்கெடுத்தார், இவர் பங்கெடுக்கவில்லை என்று நாம் கூற முடியாத அளவிற்கு அனைவருமே தங்கள் பங்களிப்பை அளித்துவிடுவார்கள்" என்கிறார் இயற்கை ஆர்வலரும் ஆட்டோ ஓட்டுநருமான அய்யம்பெருமாள்.

 

மேலும், சிறுவர்கள் உற்சாகமாகப் பங்கெடுப்பது குறித்து அவரிடம் கேட்கையில், "பொதுவாக பனையிலிருந்து முழுமையான பலனை அனுபவிக்க 3 தலைமுறைகள் காத்திருக்க வேண்டும். இன்று நாம் நடும் விதைகள் மூலம் நமக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்பது இந்தச் சிறுவர்களுக்கும் தெரியும். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நாம் உழைக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டியுள்ளோம். அவர்களும் இதில் உற்சாகமாகப் பங்கெடுக்கிறார்கள். இந்த முறை விதைப்பின் போது முதல்முறையாக நம் மாநில மலரான செங்காந்தள் மலர் எங்கள் ஊரில் பூத்திருப்பதைப் பார்த்தோம். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. ஒவ்வொரு முறையும் இது போன்று கிடைக்கும் அனுபவமும், மகிழ்ச்சியும்தான் அடுத்த முறை அனைவரையும் ஆர்வமுடன் பங்கெடுக்க வைக்கிறது. பனை மட்டுமல்ல நிறைய மரம் வகைகள் நட்டுள்ளோம். குறிப்பாக பறவைகள் தங்களின் புகலிடத்திற்கு விருப்பமான தேர்வாகக் கருதும் மகிழம், இலுப்பை, குதிரைப்பிடுக்கன் போன்ற நம் மண்ணிற்குரிய மரங்களையும் நட்டுவருகிறோம். அவையெல்லாம் பெரிய மரமாகும்போது இந்தப் பகுதி பறவைகள் நிறைந்த பகுதியாக இருக்கும். எங்கள் ஊர் கிராமம் என்பதால் ஆடுமாடுகள் நிறைய உள்ளன. அவை செடிகளைக் கடித்துவிடாமல் இருக்க குழந்தையைப் பாதுகாப்பதுபோல பாதுகாத்து வருவோம். நாங்கள் நட்ட செடிகளில் சில செடிகள் கொஞ்சம் பெரிதாக வளர்ந்துள்ளன. அதைப் பார்க்கும் போது நம்மால் நடப்பட்ட மரம் என்று கொஞ்சம் பெருமையாகவும் இருக்கிறது என உணர்வுப்பூர்வமாகவும், பல்லுயிர்ப்பெருக்கம் சார்ந்த சூழலியல் கருத்து வீச்சோடு விவரித்தார்.

 

இயற்கை சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்களே, இதை எப்படித் தங்களுக்குள் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள் என நமக்குள் எழுந்த கேள்விக்கு, "இதில் திட்டமிட என்ன இருக்கிறது. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் ஓடைகளின் வாய்க்கால்களைச் சீர் செய்தல், தூர்வாருதல் போன்ற பணிகளில் ஈடுபடுவோம். பருவமழை ஆரம்பித்த பின் தோண்டுவதற்கு எளிமையாகத் தரை இருக்கும். அப்போது மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுவோம். அந்த நேரத்திற்கேற்ற சூழல்படி அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதுதான்" என இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட திருக்குறளுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பதிலளித்தார் பஞ்சாலைத் தொழிலாளியும், இயற்கை ஆர்வலருமான தீ.ராஜா.

 

'பூமி என்பது கடந்த தலைமுறை நமக்கு அளித்த சொத்து அல்ல, அது எதிர்காலத் தலைமுறையிடம் இருந்து நாம் பெற்ற கடன்' என்பதை நன்குணர்ந்து அவர்களுக்கு வட்டியும் முதலுமாக அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு களப்பணியாற்றி வரும் இந்த இளைஞர்படையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

 

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.