Advertisment

மாற்றத்தைத் தடுக்கும் பலம்! காத்திருக்கத் தேவையில்லை..! கமலின் புதுக்கூட்டணி..!

kamal haasan

Advertisment

பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலையொட்டிய அரசியல் வியூகங்களிலும் கவனமாகவே இருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற 3% வாக்குகள், சட்டமன்றத் தேர்தல் களத்தில் துருப்புச் சீட்டாக இருக்கும் என நம்புகிறார். அதனால், கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழுவினை கடந்த 16-ந்தேதி சென்னையில் கூட்டி, உற்சாக வரவேற்புடன் கலந்துகொண்டார் கமல்ஹாசன்.

கரோனா நெருக்கடி என்பதால், கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொருளாளர் சந்திரசேகர், பாண்டிச்சேரி மாநில துணை தலைவர் தங்கவேலு மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அருணாசலம், முருகானந்தம், குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 30 பேர் மட்டுமே சமூக இடைவெளியுடன் பங்கேற்ற கூட்டத்தில், 65 வயதைக் கடந்தவரான கமலுக்கு அருகே யாரையும் உட்கார அனுமதிக்கப்பட வில்லை. செல்ஃபோன்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தது செயற்குழு. இதனை கூட்டத்தின் முடிவில் தெரிவித்த கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், "தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்கிற முடிவெடுக்கும் முழு அதிகாரமும் கமல்ஹாசனுக்கு வழங்கப் பட்டுள்ளது'' என்கிறார்.

Advertisment

கூட்டம் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசிய போது, "தி.மு.க-அ.தி.மு.க இரு கட்சிகளுக்கும் மாற்றாக புதியவர்கள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என இளைஞர்களும் நடுநிலையாளர்களும் விரும்புகின்றனர். ஆனால், அந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் உறுப்பினர்கள் பலம் மாற்றத்தை தடுக்கின்றன. ஆனாலும், கூட்டணிக்குள் சிக்கக்கூடாது. தனித்துப் போட்டியிடவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

அதேசமயம், திமுக-அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு மாற்றாக, ஒத்த சிந்தனையுள்ளவர்களை அரவணைத்து மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணி உருவானால் திமுக-அதிமுகவுக்கான எதிர்ப்பு வாக்குகளையும் நடுநிலையாளர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஆதரவையும் நாம் பெற முடியும். தலைவர் (கமல்) நினைக்கிற மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என சிலர் வலியுறுத்தினர். இத்தகைய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டதால் தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதை முடிவெடுக்கும் அதிகாரத்தை கமலுக்கு கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில் கமல் மட்டுமே சுமார் ஒன்னரை மணி நேரம் பேசினார். அவர் தனது பேச்சில், ரஜினியின் அரசியலை மறைமுகமாக தாக்கினார். அதாவது, "அவர் வருகிறார்; வர மாட்டார் என்கிற விவாதம் நடக்கிறது. அவருடன் நாம் கூட்டணி வைப்போம் என்றெல்லாம் செய்தியைப்பரப்புகிறார்கள். அவருக்காக மட்டுமல்ல யாருக்காகவும் நாம் காத்திருக்கவில்லை. காத்திருக்கவும் மாட்டோம். காத்திருக்கவும் தேவையில்லை. நம் பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும்'' என ரஜினியைப் பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார் கமல்.

மேலும், "இந்த தேர்தலில் யாரும் அவ்வளவு எளிதாக ஜெயித்துவிட முடியாது. முன்பை விட இப்போது மக்களுக்கு அரசியல் புரிகிறது. நமக்கு திமுகவுடனும் அதிமுகவுடனும் நேரடி போட்டி கிடையாது. ஊழலுக்கும் நமக்கும் தான் நேரடி போட்டி. அதிமுக-திமுக இரண்டு கட்சிகளிடமிருந்து விடுதலையாக வேண்டுமென மக்கள் நினைக்கிறார்கள். அதனை மனதில் நிறுத்தி மக்களுக்கு நேர்மையான அரசியலைத் தருவதற்கு நாம் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என கமல் பகிர்ந்துகொண்டார்'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய ம.நீ.ம.நிர்வாகிகள்.

மக்கள் நீதி மய்யத்தின் உள்கட்டமைப்பு வலிமையாக இருப்பதையும், இளைஞர்களும் மாணவர்களும் நம் கட்சியில் ஆர்வமாக இணைந்து வருவதையும், அதனைப் பயன்படுத்தி, இந்த தேர்தலில் பிரதான கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் நீதி மய்யமாக இருக்க வேண்டும் எனவும் தனக்கே உரிய பாணியில் சுட்டிக்காட்டியிருக்கிறார் கமல்ஹாசன்.

cnc

ரஜினியுடன் கூட்டணி வைப்பார் அல்லது திமுகவுடன் கூட்டணி வைப்பார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், முதல்வர் வேட்பாளராக கமல் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதால் கூட்டணியில் சேரப் போவதில்லை என்பதை மக்கள் நீதி மய்யம் வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினிக்காக காத்திருக்கத் தேவையில்லை என கமலின் பேச்சின் பின்னணி குறித்து, ரஜினி மற்றும் கமலுக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்த போது, "ரஜினியுடன் கூட்டணி அமைக்க தயார் என சொன்னவர் கமல்ஹாசன். அப்படி சொல்லப்பட்ட காலத்தில் ரஜினியை சந்தித்து இதுகுறித்து கமல் விவாதிக்கவும் செய்தார். ஆனால், இது குறித்து ரஜினி எந்த நம்பிக்கையான வார்த்தையையும் கமலுக்குத் தரவில்லை. அதனால் தேர்தல் காலங்களில் மீண்டும் பேசலாம் என அமைதியாகிவிட்டார் கமல். அதேபோல, தேர்தல் அரசியலில் ரஜினி ஈடுபட்டால் கமலுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ரஜினி விரும்பவில்லை. இதெல்லாம் தெரிந்ததால்தான், காத்திருக்கத் தேவையில்லை என கமல் சொல்லியுள்ளார்'' என்கிறார்கள் இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள்.

Election tn assembly MNM kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe