Skip to main content

தமிழனா வேலை இல்லை! வடஇந்திய ஆதிக்கத்தில் என்.எல்.சி!

ddd

தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி). கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென் னிந்தியாவின் மிகப்பெரிய மின்னுற்பத்தி நிலையம். இந்நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தினக்கூலி கடைநிலைத் தொழிலாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வடமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் தகுதியுடைய பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வில் 1 சதவீதத்தைவிட குறைவான அளவுக்கே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சியான தகவல் கடலூர் மாவட்டத்தை மட்டுமல்லாது தமிழ்நாட்டையே உலுக்குகிறது.

 

என்.எல்.சி நிறுவனம் GET (Graduate Executive Trainee) எனப்படும் பட்டதாரிப் பொறியாளர்கள், பட்டயக் கணக்காளர்கள், மனிதவளப் பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு மின்துறை, சுரங்கத்துறை, கணினி, நிதி, மனித வளம் போன்ற துறைகளுக்கான 259 நிரந்தரப் பணிகளுக்காக கடந்த 13.03.2020 அன்று (விளம்பர எண் : 2/2021) விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு கொடுத்திருந்தது. கொரோனா தொற்று காரணமாக அதற்கான நேர்முகத் தேர்வு மூன்று முறை நாள் குறிப்பிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு, இறுதியில் கடந்த 2020 நவம்பர் 17 முதல் 25-ஆம் தேதி வரை நாட்டின் பல இடங்களில் நடத்தப் பட்டது.

 

இத்தேர்வுகளை உத்திரப்பிரதேசத்திலுள்ள நொய்டா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “எஜூகேசன் கன்சல்டேசன் இந்தியா லிமிடெட்“ (Ed.C.I.L.) என்ற வடநாட்டு அரசுத்துறை நிறுவனம் நடத்தியது. 1.5 இலட்சத் திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இத்தேர்வின் முடிவில் நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை 30.01.2021 அன்று என்.எல்.சி. இணையதளத்தில் வெளியிட்டது. 259 காலியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுக்காக தேர்வுசெய்யப் பட்ட 1582 பேர் அடங்கிய இந்தப் பெயர் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் தான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் என்.எல்.சி. நிறுவனத்தின் தமிழர் விரோதப்போக்கு வெளிப்படுவதாகக் கூறி அனைத்து கட்சிகளும் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளன.


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 1582 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் மட்டுமே என்பது வெளிமாநில தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வின் நம்பகத்தன்மை மீது மிகப்பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்புகளையும் வெளி மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு மிகுந்த வருத்தத்திற்குரியது. இந்த தேர்வை ரத்து செய்து, வெளிமாநில மையங்களில் நடைபெற்ற தேர்வு முறை குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும் தமிழகத்திலுள்ள என்.எல்.சி. உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைத்திடுவதை உறுதி செய்திட வேண்டும், முதலமைச்சர் பழனிசாமி இது தொடர்பாக உடனடியாக மத்திய அரசுடன் பேசி தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து அந்தப் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்திட வலியுறுத்தவேண்டும்''’என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “"இந்தப் பணியில் சேருபவர்கள் என்.எல்.சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் இயக்குனர் நிலைவரை பதவி உயர்வு பெறமுடியும். அதிக ஊதியமும், கவுரவமும்மிக்க இந்தப் பணிகளில் முழுக்க முழுக்க வட இந்தியர்களை நியமிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் என்.எல்.சி நிறுவனம் செயல்படுவதாகவும், அதற்காக போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல்களில் முறைகேடுகள் செய் யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஒருவேளை போட்டித் தேர்வுகளில் தமிழர்கள் வெற்றி பெற்று வந்துவிட்டால் கூட, அவர்கள் பணியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக நேர்காணலுக்கு ஒரு பணியிடத்திற்கு 6 பேர் வீதம் அழைக்கப்படுகிறார்கள். இது எங்குமே நடைபெறாத வினோதம். உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்காமல் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களை முறைகேடாக பணிகளில் திணிப்பதை அனுமதிக்க முடியாது. என்.எல்.சி அமைவதற்காக தியாகம் செய்த உள்ளூர் மக்களுக்கு நிர்வாகம் துரோகம் இழைப்பதை பா.ம.க வேடிக்கை பார்க்காது''’’ என கூறியுள்ளார்.

 

கடந்த 03-ஆம் தேதி நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “"இந்த நிறுவனம் உருவாவதற்காக பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை இந்தப் பகுதி மக்கள் வழங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த பகுதியில் நிலக்கரி இருப்பதனால்தான் நிறுவனமே இங்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றிதான் நிலக்கரி எடுக்கிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகப்பெரிய அளவுக்கு குறைந்துள்ளது. குடிநீருக்காகவும், காற்று மாசுபாட்டாலும், வீடுகள் விரிசல் விழுந்தும் இந்நிறுவனத்தால் ஒவ்வொரு நாளும் இப்பகுதி மக்கள் வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அப்படியிருக்க வேலைவாய்ப்புகளின்போது குறிப்பிட்ட சதவீதம் இப்பகுதி மக்களுக்கும், தமிழகத்திற்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும்'' என்றார்.

 

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறும்போது, ""மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாள்முதல் தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பினை தட்டிப் பறித்து வருகிறது. தமிழகத்தில் லட்சக் கணக்கான படித்த இளைஞர்கள் இருக்கும்போது தமிழர்கள் தேர்வுபெறா மல் போனது எப்படி? தமிழக அரசு இவ்விஷயத்தில் கள்ள மவுனம் சாதிப்பது நியாயம் அல்ல''’என்றார்.

 

என்.எல்.சி. ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் எம்.சேகர் நம்மிடம், “"இத்தேர்வை சுதந்திரமாகவும், nlcநேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதற்காக, கேள்வித்தாள் தயாரிக்கும் பணி, தேர்வு நடத்தும் பணி, மதிப்பெண் போடும் பணி முழுவதையும், இந்தியாவின் ஒரு மினி ரத்னா நிறுவனமான EDCIL (Educational Consultant of india Ltd) என்கிற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் அளித்த Pass & Fail விவரங்கள், தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? மாநிலங்கள் வாரியாக SC, ST இட ஒதுக்கீடு அடிப்படையில், SC-ST-க்கு எத்தனை பேர்? போன்ற விபரங்களையும், தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியலையும், தற்போது நேர்முகத் தேர்வுக்கு தகுதி என அறிவிக்கப்பட்டுள்ள 1582 பேர்களின் மதிப்பெண் பட்டியலையும், Negative mark எப்படி? எந்த அளவில் போடப்பட்டது? என்பது குறித்தும், கேள்வித்தாள் தயாரித்தது யார்? தேர்வுக்கு முன் EDCIL தவிர்த்து, வேறு யாராவது கேள்வித்தாளை பார்க்கமுடியுமா? அப்படி முடியும் என்றால் அந்த அதிகாரி யார்? போன்ற விபரங்களை EDCIL நிறுவனம் பகிரங்கமாக வெளியிட்டு, இந்த சர்ச்சைக்கு தீர்வு காண முன்வரவேண்டும்'' என்கிறார்.

 

இதனிடையே என்.எல்.சி.யின் தமிழர் விரோதப் போக்கை கண்டித்து விருத்தாசலத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அதன் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் நம்மிடம், “"நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிலேயே 8 பேர்தான் தமிழர்கள் என்றால், ஒருவரையாவது நேர்முகத் தேர்வில் பணிக்குத் தேர்வு செய்வார்களா என்பது ஐயமாக உள்ளது. இந்த நேர்முகத் தேர்வை ரத்து செய்துவிட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு, இப்பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களையே சேர்க்கும் வகையில் ஒதுக்கீடு வழங்கி, பணி யமர்த்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்கவேண்டும்''’என்றார்.

 

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து என்.எல்.சி மனிதவளத்துறை இயக்குனர் விக்ரமனிடம் விளக்கம் கேட்டதற்கு, “"என்.எல்.சி இந்தியா ஒரு அகில இந்திய அளவிலான நிறுவனம். இதில் ஏ, பி, சி, டி என 4 வகையாக பணி நியமனங்கள் நடக்கின்றன. சி, டி எனப்படும் தொழிலாளர்கள், கடைநிலைத் தொழிலாளர்கள் பணி நியமனங்களின்போது 100% உள்ளூர் மக்களுக்கும், ஏ, பி எனப்படும் பொறியாளர்கள், அதிகாரிகள் பணியிடங்களுக்கான நியமனங்களின் அகில இந்திய அளவிலான தேர்வு நெறிமுறைகளை கடைப்பிடித்தும் நடத்தப்படுவது நிறுவனம் தொடங்கியதிலிருந்து கடைப்பிடிக்கும் நடைமுறைதான். அதில் சட்டரீதியான இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதேசமயம் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானதில் 8 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தவறான தகவல், அதிகப்படியானோர் இருப்பார்கள். மற்றபடி முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை, எல்லாமே வெளிப்படைத்தன்மையுடன் நடை பெற்றுள்ளது'' ’என்றார்.