Advertisment

நிதிஷ் வெளியேறியது இ.ந்.தி.யா. கூட்டணிக்கு சாதகம்?

Nitish's exit Advantage of INDIA alliance?

Advertisment

பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் சில முரண்பாடு இருப்பதாகப் பேசப்பட்டு வந்தது. மேலும் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த சூழலில் குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் நிதிஷ்குமார் மட்டுமே பங்கேற்றிருந்தார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கவில்லை. கூட்டணிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகத்தான், தேஜஸ்வி பங்கேற்கவில்லை என்று பலரும் பேசி வந்தனர். தேஜஸ்வி யாதவ் தேநீர் விருந்தில் பங்கேற்காதது குறித்து, முதல்வர் நிதிஷ்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, யார் வரவில்லையோ அவர்களிடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என்று பதிலளித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பாக, நாங்கள் மகா கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தான், நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, பின்பு அடுத்த நாளே பாஜக கூட்டணியுடன் இணைந்து முதல்வராக மீண்டும் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி இருந்தது. நிதிஷ்குமார் பாஜகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் பீகாரின் முதல்வர் நான்தான் என்று நிபந்தனை வைத்ததாகவும், அதற்கு பாஜக ஒப்புக்கொண்டு மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்கள் மற்றும் சபாநாயகர் பதவி இந்த மூன்றையும் தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பீகாரில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேற்று காலை 10 மணியளவில் சந்தித்து பேச முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பின் போது பீகார் ஆளுநரிடம் தனது ராஜினமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. மேலும் பாஜக கூட்டணிக்கு நிதிஷ் குமார் மாறி பாஜக ஆதரவுடன் அன்றைய தினமே முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. அதேபோல், அனைத்தும் நடந்தேறியது.

Advertisment

காலை பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சரவையை கலைக்கவும் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளேன்" என தெரிவித்தார்.

அதே சமயம் இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தன. அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சந்தர்ப்பவாதமாக தன்னை இணைத்துக்கொண்ட இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் துரோகம் இழைத்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. இதையடுத்து, பல்டிராம் என நிதிஷ்குமாரை பலரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்ட நிதிஷ்குமார், பதவிக்காக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது பீகார் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, நிதிஷ்குமார் ஆட்சியின் கடைசி ஒன்றரை வருடத்தை தேஜஸ்வி யாதவுக்கு விட்டுத் தரவேண்டும். அதன்படி அவர் பதவியைக் கொடுக்க மனம் வராததால், இந்த முடிவை பாஜகவின் துணைகொண்டு செய்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் தெளிவான தொகுதிப் பங்கீடு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லப்பட்டது.

ஆனால், அரசியல் விமர்சகர்கள் சிலர், அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை. நிதிஷின் இந்த முடிவு உண்மையில் இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு நிம்மதியைத் தான் ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் இன்னும் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதனால் கட்சிக்கரர்களுக்கு நிறைய சீட் வழங்கி உற்சாகப்படுத்த முடியும். எதிரிகள் ஓரணியில் திரண்டுள்ளனர். லாலுவுக்கு இருக்கும் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் நிதிஷுக்கு சற்று குறைவுதான். லாலு இந்தியா கூட்டணியில் இருப்பதுதான் கூடுதல் பலம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் லாலுவின் மனைவியும் முன்னாள் பீகார் முதல்வருமான ராப்ரிதேவி இல்லத்தில் ஆர்ஜேடி MLAக்கள் கூடி, அடுத்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe