Skip to main content
Sangathamizhan-Desktop Sangathamizhan-mobile

யாருக்கும் எதுவும் நடக்கவில்லை...இவன் என்னைத் தொடக்கூடாது... கோபமான நிர்மலா தேவி!

ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்துக்கு உதவி பேராசிரியர் நிர்மலாதேவி குறித்த நேரத்தில் வராததால், அவர் தரப்பு வழக்கறிஞர் விடுப்பு மனு தாக்கல் செய்தார். உதவிப் பேராசிரியர் முருகன் தரப்பிலும் விடுப்பு மனு அளித்தனர். ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மட்டும் ஆஜரான நிலையில், இவ்வழக்கு வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 11-45 மணிக்கு மிகவும் தாமதமாக நீதிமன்றத்துக்கு வந்தார் நிர்மலாதேவி.

 

nirmaladeviகழுத்தில் கொத்துக்கொத்தாக நகைகள், நெற்றியில் சந்தனக் கீற்று, செந்தூரம், விபூதி, குங்குமப்பொட்டு, ஒரே காலில் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசிய இரண்டு கொலுசுகள், சுடிதார் பேண்ட்டுக்கு மேல் சேலை, முகத்தில் கலவரம் என ஆளே மாறிப்போய் இருந்தார். ""வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட பிறகும் நிர்மலாதேவி ஏன் இங்கு அமர்ந்திருக்கிறார்?''என்று கோர்ட் கடிந்து கொள்ள, நிர்மலாதேவியிடம் எடுத்துச்சொன்னார் வழக்கறிஞர் ஜோபு. அவரோ, வெளியே வர மறுத் தார். பிறகு, நிர்மலாதேவியை அருப்புக்கோட்டை யிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்துவந்த டாக்சி டிரைவர், ""வாங்கம்மா.. போவோம்'' என்று கூப்பிட்டதும், கிளம்பினார். ஆனாலும், கோர்ட் வளாகத்தில் அங்கங்கே அமர்வதும், கண்களை மூடியபடி கையெடுத்துக் கும்பிடுவதும், புலம்புவது மாக இருந்தார்.

 

courtஒருகட்டத்தில், நீதிமன்றத்தின் பிரதான வாயிலில், தியானம் செய்வது போன்ற பாவனையில் ஈடுபட்டார். "அங்கே உட்காரக்கூடாது..'' என்று கோர்ட் ஊழியர் ஒருவர் கூற, அவரை ஏறெடுத்தும் பார்க்காமல், ""இங்கேதான் என்னை உட்காரச் சொல்லிருக்காங்க.. பாவா.. அத்தை, மாமா, குழந்தைகள் எல்லாரும் வரணும்..'' என்று தனக்குத்தானே பேசினார். ""கல்லூரியில் படிக்கும் மகளிடம் பேசுகின்றீர்களா?'' என்று வழக்கறிஞர் ஜோபு செல்போனை நீட்ட, நிர்மலாதேவியிடம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.

 

courtஒவ்வொரு இடமாக மாறி, கடைசியில், வெளியே கோர்ட் வளாகத்தில் உள்ள கல் பெஞ்சில் நீண்ட நேரம் அமர்ந்தார். ""பாவா (கணவர் சரவண பாண்டி) வந்தால்தான் வருவேன்'' என்று காரில் ஏற மறுத்தவர், ""எனக்கு ஒரு மன அழுத்தமும் இல்ல. சந்தோஷமாத்தான் இருக்கேன். இன்னொரு சந்தோஷம். தீர்ப்பு வந்திருச்சு. நான் விடுதலை ஆயிட்டேன். பட்டாசு வெடிச்சு கொண்டாடணும். கிட்டத்தட்ட ஒரு ஆறு மாசமா பாவா என்கிட்ட பேசிக்கிட்டிருக்காரு. பால்மர் பாவாவும் பேசிக்கிட்டிருக்காரு'' என்று கூற, இடைமறித்த வழக்கறிஞர் ஜோபு. ""பால்மர் உங்களுக்கு அண்ணன்தானே? எப்படி பாவா ஆகமுடியும்?'' என்று கேட்டார். அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், ""நான் தனியாளு இல்ல. எல்லார்கூடயும் மனரீதியா பேசிக்கிட்டுத் தான் இருக்கேன். நைட் பூசை பண்ணுனேன். அப்புறம்தான் எனக்கே வெவரம் தெரிஞ்சது. எனக்காக எதிராளிகளால் சாகடிக்கப்பட்ட எல்லாரும்..'' என்று சொன்னபோது, சாமியாடிகள் விடுவது போன்ற ஒரு தினுசான ஏப்பத்தை தொடர்ந்து விட்டார். 

அடுத்து, குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயரைச் சொன்ன நிர்மலாதேவி, ""அவங்கள்லாம் தேர்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ். என் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தவங்க. இறந்துட்டாங்க'' என்று பிதற்றினார். ""யாருக்கும் எதுவும் நடக்க வில்லை. மாணவிகள் நலமாக இருக்கிறார்கள்'' என்று நாம் கூற, "நான் பேசல. காமாட்சி அம்மன் பேசுறாங்க. அருப்புக்கோட்டையில்.. குலதெய்வக் கோயிலில். நேற்று சாயந்தரம் ஐந்தரை மணிக்கு'' என்று உளறிக்கொட்ட, அங்கு கூடியிருந்த பலரும் “கார்ல ஏறி ஊருக்குப் போறத விட்டுட்டு.. கோர்ட்ல வச்சி என்ன பேசிக்கிட்டிருக்க? என்று குரலை உயர்த்தினார்கள்.


கார் வரை செல்வதற்கு அவ ருக்கு உதவிய ஒரு பொதுஜனத் தைப் பார்த்து கோபம்கொண்ட நிர்மலாதேவி, ""இவன் கே.எஸ்.ன்னு எனக்குத் தெரியும்? இவன் என் னைத் தொடக்கூடாது'' என்று முகத்தில் கடுமை காட்டினார். விழிகளை விரித்துத் தலையைச் சுழற்றினார். எழுந்து ஆடாத குறைதான். அப்போது, "சந்திரமுகியாக மாறப்போகிறார்' என்று யாரோ கமெண்ட் அடிக்க.. கோர்ட் வளாகத்தில் நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் எல்லை மீறிச்செல்வதைக் கவனித்த வழக்கறிஞர் ஜோபு ""இப்படியே பேசிக்கிட்டிருந்தீங்கன்னா.. அப்புறம் பெயில் கேன்சல் ஆயிரும்'' என்று காதருகே போய் எச்சரித்தார். அடுத்த சில நொடிகளில், யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல், தானாகவே போய் காரில் ஏறி அமர்ந்தார் நிர்மலாதேவி.

இந்த வழக்கில் மேலிடத்தின் தலையீட்டால், உயிருக்கு ஆபத்து என்று அபயக்குரல் எழுப்பிய காலம் போய், இனி நிர்மலாதேவி என்ன பேசினாலும் எடுபடாது எனச் சொல்லும் வகையில், அவருடைய மனதைச் சாகடித்து விட்டனர். உண்மையை ஒரேயடியாகப் புதைப்பதற்கு, நிர்மலாதேவியின் நடவடிக்கைகளும் துணைபோவதாகவே இருக்கின்றன'' என்கின்றனர் வழக்கை அறிந்தவர்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...