Skip to main content

ஜெர்மனியிலிருந்து இயங்க திட்டமா? - என்.ஐ.ஏ. விசாரணை!

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
 N.I.A. Investigation!

கடந்த வெள்ளிக் கிழமையன்று அதிகாலை முதலே சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா? வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா? என்ற சந்தேகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியானது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருச்சி சண்முகா நகரிலுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீடு, சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் வீடு, கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகன் வீடு, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் வீடு ஆகியனவற்றில் தொடர்ந்து 3 மணி நேரமாகச் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., கட்சி அலுவலகத்திலிருக்கும் நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்  7 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியது. சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், புத்தகங்கள், செல்போன்கள், லேப்டாப், மெமரி கார்டுகள், சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியானது.

க்யூ பிரிவு அதிகாரி ஒருவரோ, "இன்றைய சோதனைக்கான தொடக்கம் 2022, மே 20 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்து கைத்துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்கும் உதிரி பாகங்கள், கத்தி, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றன. ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீஸார், அவற்றைக் கொண்டு வந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய் பிரகாஷையும், எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தியையும் கைது செய்தனர். இதே வேளையில் இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்ற நபரையும் கைது செய்தனர். இவர்கள் செட்டிசாவடியில் வாடகைக்கு அறையெடுத்து யூடியூப் வீடியோ பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவர, இவர்களுக்கு தேச விரோதக் கும்பலுடன் தொடர்புள்ளதா? என்பது குறித்து அன்று விசாரணை நடத்தினோம். பின்னாளில் இது தேசிய விவகாரமென்பதால் என்.ஐ.ஏ. இந்த வழக்கை கையிலெடுத்தது'' என்றார்.

இதேவேளையில், "ஆலாந்துறை பழைய தபால் நிலைய வீதியில் வசிக்கும் மோகனின் மகன் ரஞ்சித்குமார். தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி, அதன்மூலமாக பலரிடம் பணம் பெற்றதும் தெரியவந்தது. நாம் தமிழர் கட்சியில் 2020-2021 ஆம் ஆண்டில் கட்சியின் ஐ.டி. விங் உறுப்பினராக இருந்தவர். அதேபோல காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். திருச்சியைச் சேர்ந்த இவர் கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக வசித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் குருதிப் பாசறை உறுப்பினராக இருந்தவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இரண்டு நபர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்'' என நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்டப் பொறுப்பாளர் வஹாப் அவசர அவசரமாக அறிவித்தது சலசலப்பை உருவாக்கியது.

"சிறியவர்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திப் பார்த்துள்ளனர். எனவே, நானே விசாரணைக்கு செல்ல இருக்கிறேன். என்.ஐ.ஏ. சோதனை அவசியமற்றது. சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கட்டும். சி.ஏ.ஏ. குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, இது இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது என்று அவர் பேசிய காணொளி இருக்கிறது. எனவே, அவர்கள் இப்படி ஒவ்வொருவராக சோதனை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் என்னை வந்து தூக்குவார்கள். அவர்களது நகர்வுக்கு எவ்வளவு தூரம் தடையாக இருப்பேன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், என்னைத் தூக்குவார்கள்'' என சீமான் கூறிய நிலையில், "சட்டத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கை எடுப்போம்'' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், நீதிபதி சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு முன்பு உறுதியளித்தது என்.ஐ.ஏ.

விசாரணையின்போது, "ஜெர்மனியிலிருக்கும் சீலனைத் தெரியுமா..? அவரை யார் அறிமுகம் செய்தது.? தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை அவர் தலைமையில் மீண்டும் கட்டமைக்க இளைஞர்களை ஒன்று திரட்டி வருகிறீர்களா..? யூடியூப் வீடியோ பார்த்து, துப்பாக்கி தயாரித்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தியை அறிமுகப்படுத்தியது யார்..?'' என பொதுவான கேள்விகளையே தொடுத்தனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த ஆவணங்கள் அதிகம். சீமானுக்கே தெரியாமல் கட்சியில் இருந்துகொண்டே தனி டிராக் எடுத்து சில சட்டவிரோத வேலைகளைச் செய்து வருகின்றனர் சிலர் என்பதைத்தான் கூறுகிறது என்.ஐ.ஏ.வின் சோதனை. சீமான் அவர்களை நம்புகிறார். ஆனால் இது சீமானுக்கே கேடாய் முடியும்'' என்கின்றனர் விசாரணையின் போது உடனிருந்த தமிழ்நாடு காவல்துறையினர்.

Next Story

சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி உத்தரவு!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
NIA Officers action order saattai Duraimurugan

சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி (02.02.2024) சோதனையில் ஈடுபட்டனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா எனவும், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றனரா என்ற சந்தேகத்திலும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர் மூலம் தமிழகத்தில் குழு அமைப்பது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

அந்த வகையில் திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின் போது சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசியிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து மாதரசியிடம் சாட்டை துரைமுருகன் பிப்ரவரி 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறி சம்மனை கொடுத்துவிட்டு சென்றனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாவும் கூறப்பட்டது.

அதே போன்று சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் என்பவர் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. அவரது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் 7 புத்தகங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் என்.ஐ.ஏ. உத்தரவுப்படி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன் ஆகியோர் தங்கள் தரப்பு வழக்கறிஞர்களுடன் கடந்த 7 ஆம் தேதி ஆஜராகினர். இவர்கள் இருவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சாட்டை துரைமுருகன் இதுவரை யூடியூப்பில் பதிவு செய்த வீடியோக்களை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

கோவை கார் வெடிப்பு சம்பவம்; மேலும் 4 பேர் கைது

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
 Coimbatore car blast incident; 4 more arrested

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோவை மாநகர போலீசார் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஐ.எஸ். ஆதரவு மனநிலையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் தொடர் செயல்பாட்டை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக கோவையில் 200 பேர் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் நேற்று 21 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். ஆறு லேப்டாப்கள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், இரண்டு எஸ்டி கார்டுகள், மூன்று ஹார்டு டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.