தமிழகத்தில் புதிதாக அகழாய்வு; பழங்காலத் தமிழர்களின் வலுவான சான்றுகள் வெளிப்படும் என நம்பிக்கை

New Excavation in Tamil Nadu; It is hoped that strong evidence of ancient Tamils ​​will emerge

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு பண்பாட்டு சின்னங்களும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் மிகுதியாகக் காணப்படுகிறது. இது தொண்டைமான்கள் காலத்திலும் அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மூலமும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆய்வாளர்கள் மூலமும் தொல்லிடங்களாகவும் கல்வெட்டுக்களாகவும் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேலாய்வுகளை மேற்கொண்டு இதுவரை கண்டறியப்படாத தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், துணைச்செயலாளர் பீர்முகமது ஆகியோர் விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சரிடம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு கோரிக்கை குறித்து பேசினர் . அதனைத் தொடர்ந்து தலைமையுரை ஆற்றிய அமைப்பின் நிறுவனரும் தொல்லியல் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்வதற்கான கருத்துருக்களை நடுவண் அரசுக்கு தமிழ்நாடு தொல்லியல் துறை அனுப்பவுள்ளது குறித்து தகவல் வெளியிட்டு பேசினார்.

அப்போதுஅகழாய்வு பணிக்கு பொற்பனைக்கோட்டையை தேர்வு செய்துள்ளதாகவும், விரைவில் பொற்பனைக்கோட்டையை தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து முறைப்படி அறிவிப்பார் என்றும் தகவல் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்குநன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தலைவர் கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆகியோர், தமிழகத்தின் பண்பாட்டு சின்னங்களில் மிக முக்கியமானதும் சங்க கால கோட்டை அமைப்பு முழுவதுமாக சிதையாத நிலையிலுள்ள ஒரே சங்க கால கட்டுமானமாக பொற்பனைக்கோட்டை இருக்கிறது.

பொற்பனைக்கோட்டை அகழாய்வை மேற்கொள்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தும் செய்தியாகும். பழங்கால உலோக தொழில்நுட்பம், கட்டுமான அமைப்புகள், மொழி வளர்ச்சி , கலை, பண்பாடு, வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பொற்பனைக்கோட்டை மேலாய்வுகள் மூலம் தொடர்ச்சியாக வெளிப்பட்டு வருகிறது. அகழாய்வுப்பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொள்ளும் பட்சத்தில் வலுவான ஆதாரங்கள் வெளிப்படும்.தமிழக தொல்லியல் ஆய்வுகளில் பொற்பனைக்கோட்டை முக்கிய இடத்தை பிடிக்கும். இத்தகைய சிறப்பான அறிவிப்பை வெளியிட்டதொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்களுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்றனர்.

excavation Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe