Skip to main content

நேதாஜிக்கும், காந்திஜிக்கும் என்னதான் பிரச்சனை?

Published on 23/01/2018 | Edited on 23/01/2018
நேதாஜிக்கும், காந்திஜிக்கும் என்னதான் பிரச்சனை?



நேதாஜி என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதில் தோன்றுவது வீரமும், தேசப்பற்றும். அதேபோல் 'காந்தி' என்றவுடன் நமக்குத்  தோன்றுவது அகிம்சை. இன்று நேதாஜியைப் புகழ்பவர்கள் பெரும்பாலும், காந்தியின் மீது விமர்சனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் இருவருக்கும் பிரச்சனை இருந்ததா?  அப்படி என்னதான் பிரச்சனை அவர்களுக்குள்? சரியாகப் பார்த்தால் இவ்விருவரும் விடுதலை என்ற  ஒரே  இடத்தை நோக்கிச் செல்லும் இரு வேறு பாதைகளாகவே கடைசிவரை இருந்தனர். அந்தப்  பாதைகள் சந்திக்கும் இடங்கள், பெரும்பாலும் மோதிக்கொள்ளும் இடங்களாகவே  இருந்தது.



சுபாஷ் சந்திர போஸுக்கும், காந்திக்கும் அடிப்படை கொள்கைகளிலேயே வேறுபாடு இருந்தது. 'சுதந்திரம் என்பது தருவது அல்ல, பெறுவது' என்பதே நேதாஜி வழி. காந்தியோ, நம் சுதந்திரத்தைப் பெறுவதற்குக் கூட அடுத்தவர்களை இம்சிக்காமல் நம்மை நாமே இம்சித்துக்கொள்ளும் வகையிலான போராட்ட முறைகளைக் கையாண்டவர். இருவரும் போராடியது இந்திய சுதந்திரத்திற்காகத்தான் என்றாலும் வழி முற்றிலும் வேறு. தனித்தனியே சென்ற அவர்களின் பாதை சந்தித்துக் கொண்ட இடங்கள் சில உண்டு.



1939ல் இரண்டாம் முறையாக நேதாஜி, இந்திய தேசிய  காங்கிரஸின்  தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக ராஜேந்திர பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு காந்தி வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். ஏறத்தாழ போஸ் - 1580 வாக்குகளுடனும், சீதாராமன் - 1371 வாக்குகளுடன் இருந்தனர். சீதாராமையாவின் தோல்வி, தனக்கு பெரிய இழப்பு என்று வெளிப்படையாகக்  கூறி காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அவரை சமாதானப்படுத்த மற்ற தலைவர்கள் முயன்ற  நேதாஜி காங்கிரசில் இருந்து விலகும் சூழ்நிலை உருவானது. இது ஒரு நேரடி மோதலாகவே இருந்தது. அதன்பின் நேதாஜி "ஃபார்வர்ட் பிளாக்"  கட்சியை ஆரம்பித்து தன் வழியில் சென்றார். 



1945இல் தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக செய்தி வந்தபோது, முதலில் மறுத்தே வந்தார் காந்தி. சுபாஷ் சந்திர போஸின் குடும்பத்தாரிடம், 'இறுதிச் சடங்குகள் எதுவும் செய்ய வேண்டாம், நேதாஜி உயிருடன் இருப்பார் என்று என் உள்மனம் சொல்கிறது' என்று கூறியதாக நேதாஜியின் உறவினர் பின்னாளில் தெரிவித்தார். அப்போது காந்திக்கு ரஷ்யாவிலிருந்து நேதாஜியின் மரணத்தைப் பற்றிய ரகசிய தகவல் வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே காந்தி அவ்வாறு கூறியதாகவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இன்று வரை நேதாஜியின் மரணம் குறித்த மர்மம் தொடர்கிறது. அதனைப் பற்றிய ஆவணங்களை வெளியிடுவோம் என்பதையும் ஒரு தேர்தல்  வாக்குறுதியாகக் கொடுத்தது பாஜக. மற்ற அனைத்து வாக்குறுதிகளையும் போல இதையும் நிறைவேற்றவில்லை.  

சுதந்திர இந்தியா பற்றிய கனவுகள் கூட இருவருக்கும் வேறு வேறாய் இருந்தது. நேதாஜி, அறிவியலில் முன்னேறிய, தொழிலில் சிறந்த வலிமையான ராணுவத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவாக வேண்டுமென்று எண்ணினார், பல இடங்களில் அதை வெளிப்படுத்தியுள்ளார். காந்தியின் கனவு  இந்தியாவோ, அமைதியும் மத நல்லிணக்கமும், விவசாயம் செழித்ததுமாக இருந்தது.  இந்த இரண்டு பேர் கண்டதுமாகவும் இல்லாமல் இன்றைய இந்தியா இருப்பது தான் வேதனை.  

-கமல்குமார்

சார்ந்த செய்திகள்