Advertisment

நெல்லையப்பர் கோயிலில் செப்பேடு சொல்லும் சேதி

Nellaiappar Temple Pattayam Seppedu

Advertisment

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 46,020 திருக்கோயில்களிலும் இருக்கக்கூடிய அரிய ஓலைச் சுவடிகளையும் செப்புப் பட்டயங்களையும் அடையாளம் கண்டு பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் ஒரு குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் இதுவரை 232 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 20 செப்புப் பட்டயங்களை அடையாளம் கண்டு மின்படியாக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் இக்குழுவினர் நெல்லையப்பர் கோயிலில் கள ஆய்வு செய்தனர். கள ஆய்வு செய்தபொழுது கோயிலில் இருந்த செப்பேடு மற்றும் செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தனர்.

இது குறித்து சுவடித் திட்டப்பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் துறை பேராசிரியருமான முனைவர் சு. தாமரைப்பாண்டியன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: நெல்லை கோயிலில் எனது தலைமையில் சுவடியியலாளர்கள் இரா. சண்முகம், க. சந்தியா, நா. நீலகண்டன், மா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து கள ஆய்வு செய்தோம். அப்போது கோயிலில் 8 செப்புப் பட்டயங்களும் 2செப்பேடுகளும் இருப்பதைக் கண்டறிந்தோம். செப்பேடுகளை ஆய்வு செய்தபொழுது அதில் கீழ்க்காணும் செய்திகள் இருந்தன.

Nellaiappar Temple Pattayam Seppedu

சேர குலராம பாண்டியன் வழங்கிய தேவதானம்:

Advertisment

முதல் செப்பேடு கி.பி. 1299 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேடு வஞ்சி சேரகுல ராமபாண்டியன் தனது படைத் தலைவர்களில் ஒருவரும் நாங்கீசுவரனேரி என்ற ஊரின் பொறுப்பாளருமான மாதேவன் சேரமான் பிள்ளையின் புதிய நிலங்களுக்கு வரி விதித்தது குறித்துப் பேசுகிறது. அதாவது, சேரமான் பிள்ளை பெற்றிருந்த ஊருக்கு நிரந்தர வரியாகக் கலி பணம் 880 நிர்ணயிக்கப்பட்டது. கிணறுகளுக்குத் தீர்வையாகப் பால் மரக்கால் படியால் 19 கோட்டை நெல்லும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாகக் குளம் வெட்டப்பட்டும் தரிசு நிலங்கள் திருத்தப்பட்டும் புதிய விளை நிலங்கள் உருவானதால் புதிய வரி விதிப்புச் செய்ய வேண்டிய சூழல் உருவாகிறது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட விளைநிலங்களில் முதல் தர நிலங்களுக்கு வெங்கல ஓசைப்படியால் 414 கோட்டை நெல்லும் இரண்டாம் தர நிலங்களுக்கு செப்பு ஓசைப்படியால் 6 3/4 கோட்டை நெல்லும் வரியாக வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு வரியாக வழங்கப்படும் நெல்லில் 7 கோட்டை நெல்லை திருநாகீசுரர் சிவகாமி அம்மன் கோயிலின் உதய மார்த்தாண்டன் கட்டளைக்கு தேவதானமாக வழங்க வேண்டும். மேலும் அவ்வூரில் உள்ள பூலாவுடையார் ஐயனார் கோயிலுக்கு அய்யன்பாத்தியாக 3/4 கோட்டைக்கு சற்று அதிகமான நெல் வழங்கிடவும் உத்தரவிட்ட செய்தியைச் செப்பேடு கூறுகிறது.

செகவீர ராமபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய தர்ம சாசனம்:

இரண்டாவது செப்பேடு எழுதப்பட்ட காலம் கி.பி. 1772 ஆம் ஆண்டு ஆகும். இச்செப்பேடு, ஆசூர் வள நாட்டைச் சேர்ந்த பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கரின் மகன் செகவீர ராமபாண்டிய கட்டபொம்ம நாயக்கர் கீழ வேம்பு நாட்டில் திருநெல்வேலி தலத்தைச் சேர்ந்த முத்துலிங்க பட்டரின் புத்திரன் சிவஞான பட்டருக்கு தர்ம பிரதான சாசனம் எழுதிக் கொடுத்தது பற்றி பேசுகிறது. அதில் திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மனுக்கு உச்சிகாலத்தில் நடக்கும் பூசையில் அபிஷேகமும் நெய்வேதனமும் நடக்கும்படிக்கு திசைக்காவல் மானியமாகப் பெற்று வந்த 72 பொன்னினை வழங்கிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் கிடைத்த5 பட்டயங்கள் கோயில்களுக்கு வழங்கிய தானங்கள் பற்றி பேசுகின்றன. அவை கீழ்க்காணும் செய்திகளைத் தருகின்றன.

ரங்க கிருட்டிண முத்து வீரப்ப நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம்:

முதல் செப்புப் பட்டயம்கி.பி. 1682 இல் எழுதப்பட்டுள்ளது. மதுரை நாயக்க மன்னர்களான ரங்ககிருட்டிண முத்துவீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோருக்குபுண்ணியம் கிடைத்திட நெல்வேலிநாத சுவாமி வடிவம்மன் கோயிலில் உச்சி காலப் பூசை நடத்துவதற்கு குட நாட்டு வன்னிக்குட்டத்து தலைவர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவி நிலதானம் வழங்கியுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. பட்டயத்தில் தானம் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர் பெயரில் வழங்கப்பட்ட நிலதானம்:

இரண்டாவது செப்புப் பட்டயம் கி.பி. 1695 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இச்செப்புப் பட்டயம் விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ரெங்க கிருட்டிண வீரப்ப நாயக்கர், விசயரெங்க சொக்கநாத நாயக்கர், தளவாய் நரசப்பய்யன், திருவேங்கடனாதரய்யன், வடமலையப்ப பிள்ளை, அனந்த பற்பநாத பிள்ளை, அட்டவணை கரணிக்கப் பிள்ளை, காரியக்காரர் மக்கள் ஆகியோருக்குபுண்ணியம் கிடைத்திட திருப்புடை மருதூர் நயினார் நாறும் பூங்கொண்டருளிய தம்பிரானாருக்கு நித்திய பூசை, மாத விழா, ஆட்டைத் திருநாள் கட்டளை, திருப்பணி, சந்தனாதித்தயில நிவேதனம் ஆகியவை முறையாக நடக்கும்படிக்குத் தேவதானப்பிரமாணம் ஏற்படுத்திட வீர கேரள முதலியார் கட்டளையிட்ட செய்தியினை கூறுகிறது.

இப்பட்டயத்திலும் தானம் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் தெளிவாக உள்ளன. இப்பட்டய செய்தி கல்லிலும் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் பட்டயத்தில் பாண்டிய மன்னர்கள் தங்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டி மேற்படி கோயிலுக்குச் செய்த தெய்வதாயத்தை கல்லில் எழுதி வைத்தது பற்றிய குறிப்பும் பட்டயத்தில் காணப்படுகிறது. அதோடு களக்காடு வீர மார்த்தாண்டராசா அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க மேற்படி கோயிலுக்கு விட்டுக் கொடுத்த நிலதானம் பற்றிய குறிப்பும் பட்டயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. மூன்றாவது செப்புப் பட்டயமும் கி.பி. 1695 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இப்பட்டயமும் மேற்படி கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தையே குறிக்கிறது. அதாவது, விசுவநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர், இரங்ககிட்டிண முத்துவீரப்ப நாயக்கர், விசயரெங்க சொக்கனாத நாயக்கர், தீட்சதரய்யன், தளவாய் நரசப்பய்யன், அன்னவ ராசய்யன்,வடமலையப்ப பிள்ளை, வெங்கிடாத்திரி நாயக்கரய்யன், வெங்கப்பய்யன், அனந்த பற்பநாத பிள்ளை, அட்டவணை கரணிக்கப் பிள்ளை, காரியக் காரர்கள் ஆகியோர் புண்ணியம் பெற்றிட மேற்படி கோயில் பூசைக்கும் திருப்பணிக்கும் நம்பிமார், தானத்தார், தலத்தார் ஆகியோர் நிலதானப் பிரமாணம் வழங்கிட வீர கேரள முதலியார் கட்டளையிட்டது பற்றியும் தானம் வழங்கப்பட்ட நில எல்லைகள் பற்றியும் இப்பட்டயம் பேசுகிறது.

இரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அளித்த கொடை:

நான்காவது செப்புப் பட்டயம் தெலுங்கு மொழியில் கி.பி 1700 இல் எழுதப்பட்டுள்ளது. இச்செப்புப் பட்டயத்தைத் தமிழில் மொழிபெயர்த்து திருமதி. ஜெயம்மா அவர்கள், "தமிழகச் செப்புப் பட்டயம் -1" என்ற நூலில் வெளியிட்டுள்ளார். அதில், இரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் அவர்கள் சங்கர சாஸ்திரி என்பவருக்குபழையபேட்டை எனும் பகுதியைக் கொடையாகக் கொடுத்தது பற்றி செப்புப் பட்டயம் கூறுகிறது என்கிறார். மேலும், அவ்வூரில் உள்ள பல தரப்பட்ட மக்கள் மீது விதித்துள்ள வரி வருவாயினைக் கொண்டு நெல்லை காந்தி அம்மனுக்கு அர்த்தசாம பூசை செய்யவும் நாள்தோறும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தமை பற்றியும் செய்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

லாலு கான் சாய்பு பெயரில் வழங்கப்பட்ட தானம்:

ஐந்தாவது செப்புப் பட்டயம் கி.பி. 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இச்செப்புப் பட்டயம் லாலுகான் சவான் சாய்புவின் நலனுக்காகதிருநெல்வேலி குறவர் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நித்திய அபிஷேகம், நெய்வேத்தியம் நடப்பதற்கு திருநெல்வேலி மகைமைக்காரர், சில்லுனறி மகமைக்காரர், விடுப்பு மகமைக்காரர், காசுக்கம்பட்டம், புகையிலை குத்தகை, பொன்னாயக் குடி, துறைவளிக்காரர் முதலியோர் தங்கள் துறையில் மாதம் ஒன்றிற்கு ஒரு பணம் வசூலித்து வழங்குவது என்று சம்மதித்து சாசனம் எழுதிக் கொடுத்தமையினை பேசுகிறது.

பிற பட்டயங்கள் தரும் செய்திகள்:

நெல்லையப்பர் கோயிலில் மந்திரம் சார் எந்திரச் செப்பேடு ஒன்றும் உள்ளது. அதில் காலம் பற்றிய குறிப்பு இல்லை. மேலும் இரண்டு செப்பேடுகள் உள்ளன. அவை திருப்பனந்தாள் மடம் சார்ந்தவை ஆகும். இரண்டு செப்பேடுகளும் கி.பி. 1958 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளன. முதல் செப்பேட்டில் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து குமரகுருபர சுவாமி இயற்றிய, “தானின்றுலகு தழையத் தழைந்த தமிழ் மதுரை...” எனும் “மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை”யின் 5வது பாடல் எழுதப்பட்டுள்ளது.அதன் கீழ் ‘குமரகுருபர சுவாமிகள்’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் செப்புப் பட்டயத்தின் இறுதியில் "காசி மடம்,5-1-1958, திருப்பனந்தாள்" என்றும் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது செப்புப் பட்டயத்தில் குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த கந்தர் கலிவெண்பாவின் 122 கண்ணிகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. செப்புப் பட்டயத்தின் இறுதியில் "காசி மடம்,14-1-1958" என்ற குறிப்பும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe