Advertisment

மனிதம் செத்தால் யானை சாகும்... யானை செத்தால்...?

elephant

Advertisment

நீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் பகுதியில் கடந்த மாத இறுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று முதுகில் காயத்துடன் திரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். இத்தொடர் சிகிச்சையில் சற்று குணமடைந்த யானை, மசினகுடி பகுதியில் உலவி வந்தது. இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி காது கிழிந்த நிலையில் தீக்காயங்களுடன் அந்த யானையைக் கண்ட வனத்துறை அதிகாரிகள், முதுமலை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக, மயக்க மருந்து செலுத்தினர். அதில்மயக்கமடைந்த யானை, காப்பகம் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, யானையின் காதுப்பகுதியில் தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், யானையின் மீது தீ வீசிய காட்சியும் அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் யானை அலறி ஓடிய காட்சியும் இணையத்தில் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, மரித்துப் போய்விட்டதா மனிதம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழும் இந்தப் பூமிப்பந்தில், எண்ணிக்கை அளவில் பெருங்கூட்டத்தினைக் கொண்ட ஓர்உயிரினமாக மனித இனம் உள்ளது. உலகின் இயக்கத்திற்கு ஒரு மனிதன் என்ன பங்களிப்பைச் செலுத்துகிறானோ, அதே பங்களிப்பைப் பிற உயிரினங்களும் அளித்து வருகின்றன. அதன் வெளிப்பாடே, இந்தப் பூமி குறித்து ஆறறிவு கொண்ட இனமாக மார்தட்டிக்கொள்ளும் மனித இனம் செய்துள்ள அத்தனை ஆய்வு முடிவுகளும். இந்த உயிரினங்களில் ஏதேனும் ஒன்று இயற்கைத் தனக்குப் பணித்த கட்டளையில் முரண்டு பிடித்தால் மனித இனம் வரையறுத்து வைத்துள்ள அத்தனை முடிவுகளும் பொய்த்துவிடும். இங்குள்ள உயிரினங்களுக்கு இடையேயான பிணைப்பு அவ்வகையானதே. மனிதக் கூட்டத்தைத் தவிர, பிற அனைத்து உயிரினங்களும் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்துள்ளன.

Advertisment

தொடர்ந்து மனித இனம் செய்து வரும் இயற்கைக்குப் புறம்பான நகர்வுகளால், இயற்கையின் அருங்கொடையாக உள்ள காடுகளும் கடல்களும் தங்களது அடையாளங்களைத் தொலைத்து வருகின்றன. ஆடம்பர விடுதிகள், கேளிக்கைக் கூடங்கள், மாடமாளிகை வீடுகள் என வனப்பகுதிக்குள் நடைபெற்று வரும் மனிதக் கூட்ட ஆக்கிரமிப்பு, வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியதாகவும் அவற்றின்வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் உள்ளது. இது போன்ற செயல்களின் நீட்சியாக ஏற்படும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுதல், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதல் போக்குகள் வாடிக்கையாகியுள்ளன.மனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கக் கூடிய இந்த மசினகுடி சம்பவமும் அந்த வகையிலான ஒரு சம்பவமாகத்தான் அரங்கேறியுள்ளது.

பிற உயிரினங்களுடன் தனக்கு இருக்கும் பிணைப்பை மனித இனம் உணர மறுப்பதும் இப்பூகோளத்தில் மனித இனம் தனித்து வாழ்ந்திட முடியுமென நம்புவதும் பிற உயிரினங்களை விடத் தன்னை மேலாகக் கருதிக்கொள்ளும் 'ஆறறிவு அகந்தையின்' வெளிப்பாடே. இந்தப் பூமியில் ஒரு பட்டாம்பூச்சி செய்யும் வேலை, பட்டாம் பூச்சியால் மட்டுமே செய்யக்கூடியதாகும். அதுபோல, ஒரு யானையால் செய்யப்பட வேண்டிய வேலை யானையால் மட்டுமே செய்யக்கூடியது. இதுவே, இயற்கை அன்னை எழுதிவைத்துள்ள சாசனம். கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் தொடர் மரணங்கள் குறித்து வரும் செய்திகள்பெரும் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளன. நம் இந்தியப் பகுதியில் வாழ்கின்ற ஆசிய இனத்தைச் சேர்ந்த யானை, நாள் ஒன்றுக்கு 56 கிமீ தூரம் வரை பயணிக்கிறது.

வழிநெடுக யானை இடும் சாணம் வாயிலாக முளைவிடும் புதிய செடிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. யானை சாணத்தில் இருக்கும் உப்புகளே பட்டம் பூச்சிகளின் பிரதான உணவு. யானைகள் இல்லையென்றால் அதன் சாணம் ஏது?சாணம் இல்லையென்றால் பட்டாம் பூச்சி இனத்தின் இருப்பு ஏது?பட்டாம் பூச்சி இல்லையென்றால் மகரந்தச் சேர்க்கை ஏது?மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் காய்கள், பழங்கள் ஏது?காய்கள் பழங்கள் இல்லையென்றால் காடுகள் செழிப்பு ஏது?காடுகள் செழிப்பு இல்லையென்றால் மழைவளம் ஏது?மழைவளம் இல்லையென்றால் நீர்வீழ்ச்சி, ஆறுகள், ஏரிகள், குளங்கள், நிலத்தடி நீர் ஏது? என யானை எனும் ஒற்றை உயிரினத்தை மையப்படுத்தியே உயிரினப்பன்மையத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

cnc

பெரிய உயிரினம் யானை மட்டுமல்ல, கடலில் வாழும் நுண்ணுயிரியான 'புரோக்ளோரோகாகஸ்' எனும் சிறு நுண்ணுயிரி தனது வேலையில் முரண்டு பிடித்தால் கூட, மனிதர்களின் சுவாசத்திலேயே பெரிய மாற்றம் ஏற்படும். இந்த அளவிற்கு பிணைப்புச் சங்கிலியால் இணைக்கப்பட்ட கட்டமைப்பினுள் மனித இனம் தொடர்ந்து முரண்டு பிடிப்பது, உலக இயக்கத்திலிருந்து நாம் வெளித்தள்ளப்படவிருக்கும் காலம் வெகுதூரமில்லை என்பதையே உணர்த்துகிறது.

elephant

கடந்த மாத இறுதியில் காயம்பட்டது முதல் அந்த யானைக்குச் சிகிச்சையளித்து வந்த வனத்துறை அதிகாரி ஒருவர், யானையின் இறப்பைத் தாங்க முடியாமல் கதறியழுத காட்சி காண்போரையும் கண்கலங்கச் செய்கிறது. பற்றி எரியும் தீயுடன் யானை பதறி ஓடிய காட்சி மற்றும் வனத்துறை அதிகாரி கதறி அழுத காட்சியைக் கண்டு நமது மனம் தொந்தரவுக்கு உள்ளாகவில்லை என்றால் நமக்குள் இருக்கும் மனிதத்தின் உயிர்ப்புத்தன்மையை ஒரு முறை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம். நாளைஏதாவது ஓர் உயிரினத்திற்கு எதிராக நாமும் இவ்வாறு திரும்புவதைத் தடுக்கஅது உதவும்.

elephant
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe