ADVERTISEMENT

நெடுவாசல் மக்களை போராட தூண்டிய நாள்... பிப்ரவரி 16

09:10 PM Feb 15, 2019 | bagathsingh

ADVERTISEMENT


ADVERTISEMENT

2017 பிப்ரவரி 15 மாலை... மத்திய பா.ஜ.க அரசின் அறிவிப்பு நெடுவாசல் மக்களை தாமதமாக சென்றடைந்தது. அதற்குள் வெளிநாடுகளில் உள்ள நெடுவாசல் இளைஞர்களுக்கு அந்த அறிவிப்பு கிடைத்தது. அவர்கள் அனைவரும் பதைபதைத்தனர். எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் விவசாயத்தை அழிக்க மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர உள்ளதா? உடனே தங்களின் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு கொண்டார்கள். இந்த திட்டம் நெடுவாசலில் வந்தால் சுற்றியுள்ள 100 கிராமங்கள் விவசாயத்தை இழக்கும். அதனால் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். பக்கத்து கிராமங்களுக்கும் பேசுங்கள். விவசாயிகளை திரட்டி அரசுக்கு கோரிக்கை வையுங்கள் எங்களால் உடனே வரமுடியாது என்றாலும் தாய் மண்ணுக்கு ஆபத்து என்றால் எந்த வேலையானாலும் உதறிவிட்டு ஊருக்கு வருகிறோம் என்று பரபரப்பாக சொன்னார்கள். இந்த அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் கடந்துவிட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கடந்த 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை அறிவிப்பு வெளியிட 16 ந் தேதி காலை நெடுவாசல் கடைவீதியில் கிராம மக்கள் திரண்டு தொடங்கிய போராட்டத்தில் இரு பெண்களும் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் கையெழுத்து போட்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார்கள். சுமார் 100 பேருடன் தொடங்கிய அந்த போராட்டம் தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் வெடித்தது. நெடுவாசல் போராட்டத்தில் சுமார் 100 கிராம மக்கள் பங்கேற்றதால் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் நாடியம்மன் கோயில் திடலில் திரண்டு போராட்டத்தை திருவிழா போல கலை, பாட்டு, கவியரங்கம், பேச்சு என்று கொண்டு சென்றனர். போராட்டக் களத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் விவசாய கருவிகளுடனும், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் வந்து கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டினார்கள். போராட்டக் களத்திற்கு வந்த மக்களை நெடுவாசல் மக்கள் இருகரம் கூப்பி வரவேற்று உணவு வழங்கினார்கள்.





முதல் கட்டமாக 22 நாட்கள் நடந்த போராட்டத் திருவிழாவில் மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நெடுவாசல் திட்டம் வராது என்று சொன்னதால் 22 வது நாள் மாலை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் போராட்டக் குழுவிற்கு கொடுத்த வாக்குறுதியை மீறி மத்திய அரசு ஜெம் நிறுவனத்திடம் கையெழுத்து போட்டதால் மக்கள் கொதித்தனர். அதனால் நெடுவாசல் சுற்றியுள்ள 100 கிராம மக்கள் திரண்டு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என்றனர்.


இந்த நிலையில் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் இரண்டாம் கட்டமாக போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்திலும் அரசியல்வாதிகள், திரைதுறையினர், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று பலரும் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நெடுவாசல் திட்டத்தை ரத்து செய்! என்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மத்திய மாநில அரசுகள் இரண்டாம் கட்ட போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் கவன ஈர்ப்பு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பிறகும் கவனிக்கப்படவில்லை. ஆனாலும் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.





இப்படியே 174 வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நவம்பர் 2 ந் தேதி காந்தி பிறந்த நாளில் போராட்டத்திற்கான உயர்மட்டக்குழு திடீரென நெடுவாசலில் கூடி போராடிய மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரண்டாம் கட்ட போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் நெடுவாசல் திட்டம் செயல்படுத்த முயற்சித்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்தனர்.

அதாவது காந்தி பிறந்த நாளில் காந்திய வழி போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்படும். மக்கள் போராடவில்லையே என்று மத்திய அரசு ஜெம் நிறுவனத்தை ஊருக்குள் அனுப்ப நினைத்தால் அடுத்து நடப்பது அமைதி வழி போராட்டமாக இருக்காது. அமைதி வழிப் போராட்டம் காந்தி பிறந்த நாளோடு முடிந்துவிட்டது. மீண்டும் நெடுவாசல் போராட்டம் தொடங்க வேண்டுமா? நிறுத்த வேண்டுமா என்பதை மத்திய, மாநில அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றனர் நெடுவாசல் மக்கள்.


இந்த நிலையில் ஜெம் நிறுவனம்.. நெடுவாசல் கிராமத்திற்குள்ளும் நுழையமுடியவில்லை. தமிழக அரசின் அனுமதியும் கிடைக்கவில்லை அதனால் வேறு இடம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஜெம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நெடுவாசல் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். ஆனால் கடந்த மாதம் ஜெம் நிறுவனத்தின் அதிகாரி நெடுவாசல் திட்டத்தை செயல்படுத்த நீதிமன்றம் எங்களுக்கு உதவி செய்யும் என்று பேட்டி கொடுத்திருந்தார். இதனால் மீண்டும் நெடுவாசல் மக்கள் கொதித்துள்ளனர்.


எங்கள் விவசாயித்தை அழித்துவிடக் கூடாது என்பதற்காகதான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று 100 கிராம மக்கள் இணைந்து போராடினோம். இப்போது கஜா வந்து எங்க போராட்டத்திடல் நாடியம்மன் கோயில் ஆலமரத் திடல் வரை பாதிக்கப்பட்டது. எங்கள் தென்னை, மா, பலா, தேக்கு மரங்கள் சாய்ந்தது. எங்கள் பிள்ளைகள் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்றோம் என்று சொன்ன நேரத்தில் கஜா எங்களை தாக்கியதால் வெளிநாடுகளில் உழைக்கும் எங்கள் பிள்ளைகளை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கி விட்டோம். எங்கள் மண் எங்களை வாழவைக்கும். இந்த துயரத்தை மறக்கும் முன்னாலயே மறுபடியும் ஜெம் நிறுவனம் நீதிமன்றம் உத்தரவு பெற்று வருவதாக சொல்லி இருப்பது வேதனை அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இன்னும் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று உறுதியாக சொல்லவில்லை என்பது, எங்களை வேதனையிலேயே வைத்திருக்கிறது. இன்று பிப்ரவரி 16 போராட்டம் தொடங்கிய நாள்.. ஆனால் எப்ப மறுபடி வந்தாலும் 100 கிராம மக்களும் ஒன்றாக சேருவோம், போராடுவோம் ஒரு அடி கூட எடுத்து வைக்கவிடமாட்டோம் என்கின்றனர் இளைஞர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT