Skip to main content

நடராஜன் போட்ட திட்டம்; ஜெயலலிதா, சசிகலாவை நடுங்க வைத்த செரினா..!

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Natarajan serina case

 

2000ம் காலங்களில் அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய நபர்களாக இருந்தனர். அதிமுகவை தாண்டி தமிழ்நாடு அரசியலிலும் அவர்கள் பேசுபொருளாக இருந்தனர். இதற்கு இடையில் இளம் வயது பெண்ணான செரினா எப்படி இவர்களுக்குள் வருகிறார். நடராஜனுடன் எப்படி அறிமுகமாகுகிறார். நடராஜனுடன் அவர் பழகுகிறார் என்பதால் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் வந்தது? என்பவற்றை எல்லாம் விளக்கி பேசினார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

 

இது குறித்து அவர் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி: “ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் எனும் பெரும் அதிகார மையத்திற்குள் நான்காவதாக நுழைந்த பெரும் பிம்பம் செரினா. நடராஜன் அரசியலில் நேரடியாக வெளியாகவில்லை என்றாலும், டெல்லியில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் நடராஜன் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பார். அந்த அதிகார மையத்தில் இருந்த மூவரும் அச்சப்பட்டது செரினாவை பார்த்துதான். 

 

செரினாவின் தந்தை பாண்டி தேவர் இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் இராணுவ அதிகாரி என்பதால் அவருக்கு அவ்வப்பொழுது பணியிட மாறுதல் நடந்துகொண்டே இருக்கும். செரினா மிலிட்டிரி பள்ளியில் படிக்கிறார். இதனால் அவருக்கு 9 மாநில மொழிகள் தெரியும். நரசிம்மராவ், ஜெயலலிதா ஆகியோரைவிட அதிக மொழிகளைத் தெரிந்தவர். சசிகலாவுக்கு ஒன்னுமே தெரியாது. 

 

Natarajan serina case

 

இந்த செரினா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அப்போது ஒரு பொதுநிகழ்ச்சியில் நடராஜன் செரினாவை சந்தித்து பிறகு செரினாவை அவரது உதவியாளராக நியமித்துக் கொள்கிறார். இந்த உறவு நடராஜனின் கருவை செரினா சுமக்கும் அளவிற்கு நெருக்கமானது.  செரினாவை நடராஜன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் அம்மாவிடம், “இது உன் இரண்டாவது மருமகள்” என்று சொல்கிறார். அவரும் செரினாவை ஆசிர்வாதம் செய்கிறார். 

 

இந்த தகவல் சசிகலா, ஜெயலலிதாவுக்கு தெரியவந்து ஆத்திரம் அடைகின்றனர். அவர்கள் ஆத்திரமடைய இன்னொரு காரணம், நடராஜன் செரினாவை டெல்லி அரசியலுக்கு அழைத்துச் செல்ல கன்சிராம், மாயாவதி மூலம் காய் நகர்த்தினார். மாயாவதியிடம் இவரை அறிமுகப்படுத்தி செரினாவின் பன்மொழி புலமை பற்றி சொன்னதும் மாயாவதிக்கு செரினாவை பிடித்துப்போய் செரினாவை தன் உதவியாளராக வைத்துக்கொள்வதாகவும் எம்.பி. ஆக்குவதாகவும் சொன்னார். 

 

அப்படி அவர் எம்.பி. ஆனார் என்றால், டெல்லியில் பெரும் அரசியல் லாபியை உருவாக்கிக்கொள்வார். அனைத்து மாநில அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் அவருக்கு பழக்கமாவார்கள். அப்படி ஒரு லாபி உருவானால் சசிகலாவின் அரசியல் காணாமல் போய்விடும். இதனால் செரினா மீது சசிகலாவுக்கு கடுங்கோபம். அதுமட்டுமல்லாமல், செரினாவுக்கு குழந்தை பிறந்தால் அது சட்டப்படி நடராஜனின் வாரிசு. இந்து திருமண சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்வது அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் மனைவிக்கு பிறக்கும் குழந்தை சட்டப்படி வாரிசுதான். அப்படி வாரிசு வந்தால், வாரிசு இல்லாத சசிகலாவின் சொத்துக்களான சசி எண்டர்பிரைசஸ், மிடாஸ், கொடநாடு உள்ளிட்ட அனைத்தும் கைமாறும். 

 

இந்த கோபங்கள் தான், செரினா 100 கிலோ கஞ்சா வழக்கில் சிக்கி எட்டு மாதங்கள் சிறையில் அடைபடக் காரணம். அதேநேரம், அவர் சிறையில் இருந்தபோது ஒரு பெண் காவலர் செரினாவை கடுமையான சித்திரவதை செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரின் கருவை சிறையிலேயே கலைக்கிறார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்த எந்த அரசியல் தலைவர்களும், “ஒரு அப்பாவி பெண்ணை ஏன் இப்படி சித்திரவதை செய்கிறீர்கள்” என அறிக்கை கூட விடவில்லை. 

 

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கற்பக விநாயகம் செரினாவை தனியாக அவரது சேம்பருக்கு அழைத்து வாக்குமூலம் வாங்குகிறார். அப்போது, கலைஞர் மட்டுமே, “நீதிபதி அல்ல, நீதி-பாதி” என முரசொலியில் எழுதுகிறார். உடனே நீதிபதி கற்பக விநாயகம் இந்த வழக்கில் இருந்து வெளியேறுகிறார். பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது.”

 

உச்சநீதிமன்றத்தில் செரினாவின் வழக்கு என்ன ஆனது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.